Thursday, October 17, 2013

மனிதநேய நோக்கில் வள்ளலாரும் பாரதியும்

மனிதநேய நோக்கில் வள்ளலாரும் பாரதியும் – தா. நீலகண்டபிள்ளை

ஆன்மீக சிந்தனைகளை எடுத்துரைப்பதில் வள்ளலாரும் பாரதியும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பதை அவர்களது பாடல்கள் வழி அறிய முடிகிறது. வள்ளலாரும் பாரதியும் இலக்கிய உலகில் மட்டுமல்லாது, ஆன்மீக உலகிலும் ஒரே நோக்கில் செயல்பட்டமையைக் காணலாம். இருவரது கொள்கைகளும் பல நிலைகளில் ஒத்துக் காணப்பட்டமை இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது.
எல்லோரும் ஓர் குலம்:-
வள்ளலாரின் கொள்கை இறைவனை நோக்கியதாக மட்டுமல்லாமல் உலகம், சமுதாயம், சமூகம் நோக்கியதாக இருந்தது. இராமலிங்கர் சிறந்த சீர்திருத்தவாதி, சமுதாயப் புரட்சியாளர். பாரதியும் தனது சமூக அரசியல் பாடல்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தந்துள்ளார். அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பது வள்ளலாரின் முக்கியக் கொள்கை. எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவர் கொள்கையைப் போன்றே, பாரதியும்,
”வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்”
என்று பொது நிலையைக் காட்டுகின்றார். இக்கொள்கை இன்று அனைவரிடமும் இருந்தால் இன்றைய கலவரங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் இடமே இல்லை.
சமூக நோக்கு:-
பாரதியும், வள்ளலாரும் பக்தியை மட்டும் பாடாமல், சமுதாய மாற்றத்தை, ஏற்றத்தாழ்வை, மூடப்பழக்கங்களைக் கண்டிக்கும் போக்குடன் கூடிய பாடல்களையே அதிகம் பாடியுள்ளனர். இருவரிடமும் மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்து சமுதாய மறுமலர்ச்சி காணும் நோக்கே காணப்படுகின்றது. தனி மனித ஒழுக்கம், மனிதன் சமூகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்பன மனித சமுதாயம் உள்ளவரை ஏற்றுக்கொள்ளக்குரியன. பக்தி மார்க்கத்தில் உள்ளோர் அனைவருக்கும் இறைவனை அடைவது மட்டுமே முக்கிய நோக்கமாக அமைய, வள்ளலார் பாரதி போன்றோர் கருத்துக்கள் வழிபடுதல் மட்டுமல்லாது, இன்றைய, உலகச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது.
ஆன்மநேயம்:-
வள்ளலார், சமரச சன்மார்க்கக் கொள்கைகளை உபதேசித்தார். இறைவன் ஒருவனே என்ற கொள்கையை நிலை நிறுத்தியவர். கடவுளை உண்மை அன்பால் வழிபட வேண்டும். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது. புலால் உண்ணலாகாது. பிற உயிர்களின் பசித்துன்பத்தைப் போக்குதல் வேண்டும். மரபு வழிபட்ட பழக்க வழக்கங்களைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கக்கூடாது. புராணமும் சாத்திரமும் முடிவான உண்மையைத் தெரிவிப்பதில்லை. சாதி சமய வேறுபாடு இல்லா நிலை உருவாக வேண்டும். ஆண் பெண் வேறுபாடு கூடாது. எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்ம நேய உணர்வு தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.
பாரதியும்,
”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்”,
”சாதி சமயம் பேசும் சழகர்காள்” என்றும்
”உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்”.
”வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”,
”வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் – இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்
பயிற்றி யுழுதுண்டு வாழ்வீர் பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்”,
”உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாம்
……………………………
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்”!
”கடமையாவன, தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்”
”மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியும் உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? புலனில்
வாழ்க்கை இனியுண்டோ.
தனியொரு மனிதருக்கு உணவில்லை யெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”
எனப் பலவாறாகப் பாடி மனித நேயக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளார்.
மனிதநேயச் சிந்தனைகள்:-
உலக மனிதர் ஒவ்வொருவரும் ஒரு ஜ“வன். பசி, தாகம், பிணி, இச்சை, கொலை போன்ற காரணங்களால் ஜிவன்கள் துன்பப்படுகின்றன. இத்துன்பங்கள் களையப்பட வேண்டும்.
”உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்” என இத்தோடு நிற்காமல் பசிப்பிணி அகற்றலே தெய்வீகப்பணி என்பதை நடைமுறைப்படுத்தியவர் வள்ளலார். அதற்காக 22.05.1867-இல் வடலூரில் ”சத்திய தருமசாலை”யை நிறுவினார். ஒருவர் பசித்திருக்க மற்றவர் புசித்திருக்கும் நிலையைப் பாரதியும் கோபாவேசத்துடன் கூறுகின்றார். ”இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வாழ்வதற்கே” என்ற வள்ளுவர் கருத்தை வள்ளலாரும், தொடர்ந்து பாரதியும் நெறிப்படுத்துகின்றனர். இராமலிங்கர் வாடுவோரின் வாட்டத்தைத் தீர்த்ததோடு இறைவனிடம்,
”ஏழை உலகுயிர்த் துன்பம் இனி பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின்அருள் ஒளியைக்
கொடுத்தருள் இப்போதே” என்றுரைக்கின்றார்.
பசிப்போரை ஒழிக்க நிறுவப்பட்ட பாசறையாகத் தருமச்சாலை விளங்குகிறது. வேதாந்தம் பேசிய சமயவாதிகளுக்கிடையே வறுமைக்கு எதிராகப் போர்தொடுத்த முதல் துறவி வள்ளலார் ஆவார். முதல் கவிஞர் பாரதி ஆவார்.
ஜ“வகாருண்யம்:-
மனித ஆத்ம வளர்ச்சிக்கு, உரிய சாதனம் ஜ“வகாருண்யம் என்பது வள்ளலார் கொள்கை. அவர் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார். பானுறு பசுக்கள், கன்றுகள் கதறிய போதெல்லாம் பயந்தார். உயிர்ப்பலிக்கு உள்ளம் குலைந்தார். புலாலினை வெறுத்தார். மேலும் மனிதன் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுதல் வேண்டும். மாறாத அன்பு செலுத்துதல் வேண்டும். பக்தி, மனம் ஒன்றிய தியானம் இவற்றால் நம் உள்ளம் இறைவன் உறையும் இல்லமாக மாற வேண்டும். அன்பு அருளைப் பெற்றுப் பிறர்க்கும் பகிர்ந்தளித்து வாழ்பவன் மரணமிலாப் பெருவாழ்வு அடைகின்றான் என்கிறார்.
பாரதியும்,
”நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வது உன் கடன்”
என இறைவனிடம் மக்களுக்காக வேண்டுகின்றார். மேலும்,
”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள் பறவைகள்,
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே”
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே,
”பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் இடிமையும் நோவும்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க”
என ஆறறிவு முதல் ஓரறிவு உயிர்கள் வரை துன்பம் நீங்கி நலம் பெற வேண்டும் என ஜ“வகாருண்ய ஒழுக்கத்தைப் போற்றுகின்றார்.
வள்ளலார் ஜ“வ ஒழுக்கத்தைப் பொதுமை ஒழுக்கமாக அறிவுறுத்துகின்றார். கொல்லாமை, பொறுமை, சாந்தம், இந்திரிய, நிக்கிரகம் என்ற கோட்பாடுகளை வலியுறுத்துகின்றார். ஜ“வ ஒழுக்கம் என்பது, ஆண், பெண் போன்றோரிடம் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சாத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமமாகக் கொள்வது.
பாரதியும், மனதில் உறுதி வேண்டும்….. எனத் தொடங்கும் பாடலில் இறைவன் இவற்றைத் தந்தருள வேண்டும் என வேண்டுகின்றார்.
”எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணி பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல
நண்ணி நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும்”
என இறைவனை வேண்டுகின்றார்.
மனவேற்றுமைக்குச் சினமே காரணம். சினம் தோன்றினால் சமநிலை மாறுபட்டு வேறுபாடுகள் உருவாகும். வேறுபாடுகள் தோன்றின் மக்களிடத்து அன்பு கெடும். இதனைப் பாரதி,
”சினங்கொள்வார் தமைத்தாமே தீயார் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார் சினங் கொள்வார் தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மாளுவாராம்”
எனக் கூறுகின்றார்.
சமரச சன்மார்க்கம்:-
இன்றைய உலகில் பூசல்களும், அதனால் உயிர் இழப்புகளும் அதிகமாயுள்ளன. அதற்கு முதற்காரணமாகச் சமயக்காழ்ப்பு அமைகிறது. சமயக்காழ்ப்பு மறைய வேண்டும் என்பதற்காக வள்ளலார் 1865-இல் ”சமரச சன்மார்க்க சங்கத்தை” நிறுவி அதற்கு ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” எனப் பெயர் வைத்தார். பின்னர் ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” எனப் பெயர் மாற்றி அமைத்தார். இது அருளறத்தை அடிப்படையாகக் கொண்டது. அருள் இல்லாமல் சன்மார்க்கம் இல்லை என்பதை,
”அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நாமறிவாயென்ற சிவம் என்கிறார்”
”சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்திய சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே” என்கிறார்.
”அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்”
என அனைவரும் ஒன்று என்கிறார். இவ்வுலகைச் செப்பம் செய்தல் வேண்டும் என்று சூளுரைத்த பாரதி,
”வேடிக்கை மனிதரைப் போல் – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ”
தன்னால் இவ்வுலகைச் சரிசெய்ய முடியும் என்று உரைத்துள்ளார்.
இவ்வாறு வள்ளலாரும், பாரதியும் ஒரே நோக்கில் மனிதநேய, ஆன்மநேய, ஜ“வகாருண்ய, சன்மார்க்க நெறிகளைத் தந்து, மனிதர்களைச் சமூக நோக்கில் பரந்த மனப்பான்மையில் செயல்படத் தூண்டியுள்ளார்கள். உலக உயிர்கள் யாவும் சிறந்து விளங்க நல்ல பல சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
நன்றி: ஆய்வுக்கோவை

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!