Wednesday, January 16, 2013

ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்

ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்

யாழ்ப்பாண நல்லூரில் கந்தர்-சிவகாமி தம்பதியரின் மகனாக ‘ஆறுமுகம்’ என்ற பிள்ளைத் திருநாமத்துடன் பிறந்து பின்னை நாளில் உலகம் போற்றும் நாவலராகத் திகழ்ந்த பேராளன் உதித்த பொன் நாள் 1822-12-18 ஆகும். இவர் சைவமும் தமிழும் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறந்த உரை ஆசான், உரைநடை வல்லாளர், பதிப்பாசிரியர், நல்லாசான், நாவன்மைப் பேச்சாளர், சைவ வாழ்வு வாழ்ந்த தண்ணளியான்.

நாவலர் அவர்கள் எழுதியும் பிரசுரித்தும் வெளியிட்ட நூல்கள் 73, தாமே எழுதிய நூல்கள் உட்பட உரைநடை நூல்கள் எனப்பட்டன 22, இவற்றுள் உரைநடை ஆற்றலுக்கு உன்னத எடுத்துக் காட்டாய் கொள்ளத் தக்கன 10, அவை 1ஆம், 2ஆம், ; பால பாடங்கள், பெரிய புராண வசனம், சைவ சூசன பரிகாரம், யாழ்ப்பாணச் சமயநிலை, திருவிளையாடற் புராண வசனம், நல்லூர் கந்தசுவாமி கோயில், பெரிய புராண சூசனம், போலியருட்பா மறுப்பு, நாவலர் பிரபந்தத் திரட்டு(10) ஆகியனவாகும்.

நாவலர் தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகப் பாடசாலைகள் அமைத்தும் அருந் தொண்டாற்றியுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அமைத்து இலவசக் கல்வி சொல்லிக் கொடுத்துள்ளார். அச்சியந்திர சாலைகளை அமைத்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவருடைய இலக்கியப் பணிகள் காலச் சூழலோடும் சமயப் பணிகளோடும் இணைந்தவை. தற்கால உரைநடையின் தந்தையாக விளங்கும் இவர் ‘வசனநடை கைவந்த வல்லாளர்’(11) எனப் பாராட்டப் படுகின்றார். இலக்கிய உரை நடையை வளர்த்து, இலக்கியப் பணி புரிந்தவர்.

இவருடைய பதிப்புத் துறை சார்ந்த பணிகள் மிகவும் பலம் வாய்ந்தவை. இவர் பரிசோதித்துப் பதிப்பித்த நூல்கள் இவருடைய இலக்கியப் பணியின் குறிகாட்டியாய் அமைவன. சூடாமணி நிகண்டு, நன்னூல் விருத்தியுரை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, சிதம்பர மும்மணிக் கோவை, கந்தபுராணம், பெரியபுராணம், திருச்சிற்றம்பலக்கோவையுரை, முதலான 35க்கு மேற்பட்ட நூல்கள் இவர் பரிசோதித்துப் பதிப்பித்தவை ஆகும். இவர் உரை எழுதி வெளியிட்ட நூல்களும் இவருடைய இலக்கியப் பணியின் சிறப்புக்குச் சான்று. திருமுருகாற்றுப் படை, கோயிற்புராணம், ஆத்திசூடி, நல்வழி, நன்னெறி, கொன்றை வேந்தன் போன்றனவற்றை சான்றாகக் காட்டலாம்.(12)

சொற்பொழிவுகள் மூலமும் இலக்கியப் பணியாற்றியவர். நாவன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். இதனால் இவருக்குத் “திருவாவடுதுறை ஆதீனம்”; “நாவலர்” என்ற சிறப்புப் பட்டம் சூட்டியது. இவருடைய சொற்பொழிவு முயற்சி பிற்காலத்தில பலரைத் தூண்டியது. விவாதங்கள் வழக்காடு மன்றங்கள் போன்றனவற்றின் அடிப்படையாகியது.

இவருடைய உரை நூல்கள் அக்காலத்தில் கொடுமுடியாய் விளங்கின. பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், பால பாடங்கள், சைவ வினா விடைகள், கட்டுரைகள் போன்றன குறிப்பிடத் தக்கவை. சமய உணர்ச்சியூட்டக் கூடிய நூல்களை எழுத்துப்பிழை, வசனப்பிழை, இல்லாது இலகு உரைநடையில் எழுதி வெளியிட்டும் அச்சிலும் ஏட்டுப் பிரதிகளில் உள்ள நூல்களைப் பரிசோதித்தும் வெளியிட்டார்.

பொருள்த் தெளிவை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததனால் சொற்களை வலிந்து கொள்ளாது சொல்லும் பொருளும் திரியாதபடி பொருள் இனிது விளங்க உரைகளை எழுதினார். இவருடைய வசனங்கள் ஒன்றுடனொன்று தொடர்புற்று தேவையற்ற சொற்களும் அடைகளும் இல்லாமல் தர்க்க ரீதியாக அமைந்திருந்தன.

தர்க்க முறையிலும் சிலேடையிலும் எழுதும் வன்மை அவருக்கு இயல்பாகவே இருந்தது. தமது கொள்கைகளை நிலைநாட்டும் போதும் பிறர் கோட்பாட்டை மறுக்கும் போதும் மிடுக்கு நடையில் தர்க்க ரீதியாக வசனங்கள் அமையும்.(13) வெறும் அடைமொழிகளைச் சேராதும் அளபெடைகளை கூட்டாதும் அவர் உரைநடைகளைக் கையாண்ட பொழுதும் வசனங்கள் ஓசை நயம் பொருந்தியனவாய் படிக்கும் போது தட்டுத் தடையின்றிச் செல்லும் எதுகை மோனைச் சொற்களை வழங்கியும் ஏகாரத்தினைப் பலவிடங்களில் நயம்படச் சேர்த்தும் சாரியைகளை இன்பம் பயக்கப் புகுத்தியும் உரைநடைகளை அமைத்தார்.(14)

நாவலர் இன்றியமையாத இடங்களில் வடசொற்களைத் தமிழ் மரபுக்கு ஏற்பக் கையாண்டுள்ளார். ஆனால் அவ் வடசொற்களை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடிகின்றமை சிறப்பானது. அத்துடன் அக்கால வழக்கிலிருந்த கச்சேரி, கமிசனர், துரை போன்ற மேலை நாட்டுச் சொற்களையும் தெளிவு கருதிப் பயன்படுத்தியிருந்தார்.

குறியீட்டு இலக்கணத்தை பொருள்த் தெளிவும் விரைவும் கருதி அதனை முழுவதும் தழுவிக் கொண்டார். உறுப்பிசைக்குறி, தொடரிசைக் குறி, விளக்கக் குறி, முற்றுப் புள்ளி, வினாவிசைக் குறி, மெய்ப்பாட்டிசைக் குறி, அனுதாபக் குறி முதலியவற்றைப் பயன்படுத்தினார். நாவலர் கற்றோருக்கும் மற்றோருக்கும் விளங்கும் வகையில் தமிழ் உரைநடையை எழுதினார்.(15) அவர் எழுதிய பெரியபுராண சூசனம் பண்டிதர்களுக்கு எழுதப் பட்டது.

நாவலரைப் போல முன்னும் பின்னும் பல்துறை சார் தமிழ் வித்துவான்கள் இல்லை எனலாம். 1879 இல் நாவலர் இறந்த போது தமிழ் உலகு கதறிக் கண்ணீர் வடித்து மெய்யுருகியது. அந்த இரங்கற் கூட்டத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதி வாசித்த “நல்லை நகர் நாவலர் பிறந்திடரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?” என்ற வரிகள் நாவலரின் புகழை என்றும் எடுத்துரைப்பன.

4.4. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களின் சிறப்பியல்புகள். (பண்புகள்)

19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஓர் திருப்பு மையமாக, பொற்காலமாக விளங்குகின்றமையால் தனித்துவமான முறையில் அக்காலம் ஈழத்துக்கே உரியதாக விளங்குகின்றது. அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களினை நுணுகி ஆராய்வோர் அவ்விலக்கியங்களினூடே அக்காலத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமய, பண்பாட்டம்சங்களினை தெளிவாக அறிந்து கொள்வர்.

முன்னைய காலத்து இலக்கியங்களில் இடம் பிடித்த சமயமே ஆங்கிலேயர் காலத்திலும் இலக்கியப் பொருளாக நின்று தனியாட்சி செலுத்தியது என்று கூறின் மிகையாகா. மேலைத்தேசத்துச் சமயம் இலங்கையிலும் காலூன்ற முற்பட்டதன் விளைவாக ஏற்பட்ட விழிப்புணர்வு இலக்கிய நெறியின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

கதிர்காமப்புராணம், திருகோணாச்சலப் புராணம், நல்லூர் கந்தசுவாமி கிள்ளைவிடு தூது, வல்வைக் கலித்துறை, கதிரேசர் பதிகம், சுன்னாகம் ஐயனாரஞ்சல், நல்லை வெண்பா, போன்ற தலச் சார்புடைய நூல்களும் எண்ணற்ற சிறு புராணங்களும் மறைசைக் கலம்பகம், யேசுநாதர் பிள்ளைத்தமிழ், அஞ்ஞானக் கும்மி, பஞ்ச பட்சித் தூது, போன்ற நூல்களும் மரபிலக்கிய வடிவங்களுக்கு மீளுருக் கொடுத்துப் பாடியனவாகவுள்ளன.(16)

சமயத்தினை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவ மதக் கண்டனம், சிவதூசன கண்டனம் போன்றனவும் பல்கிப்பெருகின. தமது வித்துவச் செருக்கினைப் புலப்படுத்தச் சிலர் பாடல்களைப் பாடினர் போன்றும் தெரிகின்றது.

சமயக்கல்வி விருத்தியும், மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றமும் இக்காலத்தின் இலக்கியங்களில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணியிருந்தன. இக்காலப் புலவர்கள் உலகியல் சார்புடைய நூல்களை எழுதியபோது தம்மை ஆதரித்த புரவலரை அல்லது பிரபுக்களைப் பாடிய போதிலும் ஆங்கிலேயரைப் போற்றிப் பாடியதாக ஆதாரங்கள் இல்லை.

அகராதி முயற்சிகள், நிகண்டு இலக்கியங்களின் தோற்றம் என்பனவும் ஆய்வு முயற்சிகளும் மொழிபெயர்ப்பு முயற்சியும் ஈழத்து இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் பின் புதிய மெருகுடன் வளரத் துணைபுரிந்தன. இதற்கு அச்சியந்திர-ஆங்கிலக் கல்வி விருத்திகள் காரணமாக அமைந்தன.(17)

அச்சியந்திர விருத்தியின் காரணமாக பதிப்புத்துறை துரிதமாக முன்னேறி வளர, மறுபுறம் பத்திரிகை தோன்றி புதிய இலக்கியங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. சோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், தருக்கம், வைத்தியம், போன்ற துறைகள் ஆங்கிலேயர் காலத்தில் வளர அவை சார்புடைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்றனவும் காரணமாக அமைந்தன.(18)

அக்காலத்தில் பெரும் புரட்சி செய்த நூல்களுள் ஒன்றாக ‘கனகிபுராணம்’ விளங்குகின்றது. சமூகச் சீரழிவைச் சாடுவதே இப்புராணத்தின் நோக்கமாகும். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையரினால் ‘தாசி’யான கனகியைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இப்புராணத்தில் பிரபுக்கள், அறிஞர்கள் முதலியோரின் பெயர் சுட்டி அவர்களின் சீர்கேடு சொல்லப்பட்டிருக்கின்றது.(19)

“…நன்னியர் உறியறுத்தார் நடுவிலார் பூண்டுகொண்டார்
சின்னியோ டொன்றி விட்டார் செங்கை ஒன்றிலாச் சொத்தி
முன்னுளோர் கதையைக் கேட்டு முத்தரும் அகஞ் சலித்தார்
நன்னிய கனகி பாடும் நடுராசி ஆச்சுதன்றே

நட்டுவனொருவனாலே நாடகசாலை வந்தாள்
செட்டியில் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார்
மட்டுவில் குருக்கள் பட்டார் கொக்குவிற் சுப்பன் பட்டான்
மட்டிகள் இவரைப்போலப் பட்டவர் பலபோர் அறிந்தோ”

என அங்கதமாக எழுதப்பட்ட வரிகளின் மூலம் கனகிபுராணத்தில் பிரபுக்களின் ஒழுக்கச் சீர்கேடுகள் சுட்டப்பட்டன. சிலேடை, யமகம், திரிபு, மடக்கு போன்ற சொல்லணிகளும் அக்காலத்தில் எழுந்த தனிப் பாடல்களில் ஆங்காங்கே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

ஒருவிதமான மனத்திருப்தியை நோக்கமாகக் கொண்டும் அக்காலப் புலவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர் போலத் தெரிகின்றது. மொழிபெயர்ப்பு நூல்களினைத் தொடர்ந்து தமிழில் ஆங்கிலம், வடமொழி போன்றவற்றின் கலப்பு அதிகரிக்க, மறுபுறத்தில் மேலைத்தேச மொழிக் கலப்பானது தமிழில் கலைச் சொற்களின் வருகைக்கும் காரணமாக அமைந்து விட்டது.

1 comment:

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!