Friday, June 21, 2013

முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம்

            



மேற்படி விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முதலூர் முழக்கம் என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்து சுற்றுப்போட்டி எதிர் வரும் 06-07-2013. 07-07-2013ம் திகதிகளில் நடத்தப்பட இருக்கின்றது .

Tuesday, June 18, 2013

கிழக்கில் கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி

விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கில் கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி சடங்கு நேற்று 28 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. திருக்குளிர்த்தி 5ம் திகதி அதிகாலை பாடப்பெறும் .அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம்.
இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.
பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது. ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்டவிழாவேயாகும் மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார். சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழக்காவியமாகும் .
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார்.
வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார். சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம்.
கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது. வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள். சிறு குடியீரே சிறு குடியீரே, என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.
இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது. கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது.
சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது. கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை. வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது.
வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.
சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர். கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது. கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை.
கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது. அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது.
தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது. கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது. எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன. பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர் செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர் மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.
கண்ணகி வணக்கம் முதலில் தனிப்பட்ட குடும்பங்களின் சொத்தாக பூசிக்கப்பட்டுவந்த போதிலும் கண்ணகையை வழிபடுவோர் தொகை அதிகமாக கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.அதற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் படையெடுக்கத்தொடங்கினர். உதாரணமாக செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.இவ்வாலயத்தில் கிரான்குளம் களுதாவளை குருக்கள்மடம் மாங்காடு அம்பிலாந்துறை பழுகாமம் தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச்சேர்ந்தவர்களுக்கு உரிமை இருந்தது.
சடங்கு நிகழ்வுகள்
கண்ணகி மதுரையை எரித்தது கயவாகு மன்னன் பத்தினிக்கு விழா எடுத்தது சிங்கள மக்கள் பெரஹரா ஊர்வலம் நடாத்தி பத்தினியை வழிபடுவதெல்லாம் ஆடி மாதத்திலாகும். ஆனால் தமிழர்கள் இதனைத் தவிர்த்து வைகாசி மாதத்தில் கண்ணகிக்கு சடங்கு செய்துவருகின்றனர்.
வைகாசித்திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்து விடைகொடுத்தாரே என குளிர்த்திப் பாடல் கூறுகிறது. இதில் வைகாசித் திங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள்நிலவிவருகின்றன. ஓன்று வைகாசிப் பூரணையைக்குறிக்கும்.மற்றயது வைகாசிப்பூரணைக்கு அடுத்து வருகின்ற திங்களைக் குறிக்கும்.இவை சடங்குகளின் இறுதித் தினமாகக் கொள்ளப்படுகின்றன.இச்சடங்குகள் வைகாசி மாதத்தில் நடப்பதால் வைகாசிப் பொங்கல் என்றும் வைகாசிச்சடங்கு என்றும் வைகாசிக்குளுத்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
சடங்கு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபடும்.சில ஊர்களில் 5 நாட்கள் சில ஊர்களில் 7 நாட்கள் இன்னும் சில ஊர்களில் 9 நாட்களும் நடைபெற்றுவருகின்றன. சடங்கின் ஆரம்பநாள் கதவுதிறத்தல் என்று கூறுவர்.மாரியம்மன் காளியம்மன் சடங்கைப் பொறுத்தவரை இது கும்பம் வைத்தல் என அழைக்கப்படும். ஆரம்பநாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு என்றும்’ கூறுவர்.
அன்று கடல்நீர் எடுத்துவரும்வழியில் ஏலவே பார்த்துவைத்திருந்த இடத்தில் பூவரசு மரம் அல்லது வேம்பு மரக்கிளையை கத்தி பாவிக்காமல்முறித்துஊர்வலமாக வந்து ஆலயத்தில் புடவைகள் சுற்றி நடப்படும்.இது பக்தியுட்டும் நிகழ்வாக சித்திரிக்ப்பட்டுள்ளது.
பின்பு பச்சைகட்டல் என்பது பாரம்பரிய நிகழ்வாகும்.மதுரையில் மாதவி வீட்டில் புகுந்த கண்ணகைக்கு சமையல் செய்து கொடுக்கப்பட்டதைக் குறிக்கும்.அன்று வழக்குரையில் அடைக்கலக்காதை பாடப்பெறும்.இக்கதையிற் கூறப்படும் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல கட்டாடியார் அவற்றை எடுத்து அம்மன் முன் காணிக்கையாக வைப்பது இதில் முக்கிய அம்சமாகும்.
இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது.
இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது மாவிடிக்கக்கூடாது புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம்.

மணிமேகலை - உலக அறவி புக்க காதை

மணிமேகலை - உலக அறவி புக்க காதை



[ஆதிரை யளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்பு, அமுதசுரபியிலுள்ள சோற்றுத் திரளை, அறநெறியி லீட்டிய பொருள் வழங்குந்தோறும் குறையாமல் வளர்வதுபோல எடுக்க எடுக்கக் குறைவின்றி வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அது கண்ட காய சண்டிகை வியந்து மணிமேகலையை வணங்கி, ''அன்னையே! எனது தீராப் பசியையும் தீர்த்தருள்க'''' என்று வேண்ட, உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி யமுதையெடுத்து அவள் கையிலிட்டாள். அதனை யுண்டு பசி நோய் தீர்ந்து மகிழ்ந்த காயசண்டிகை ''''வடதிசைக் கண்ணே விஞ்சைய ருலகிலுள்ள காஞ்சனபுரமென்பது என்னுடைய ஊர் ; தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்களைக் காண்டற்கு விரும்பிக்கணவனும் யானும் புறப்பட்டுப் போந்து இடையேயுள்ள கான்யாறொன்றின் கரையிலிருந்தோம் ; இருக்கையில், விருச்சிகனென்னும் முனிவனொருவன் பாரணஞ் செய்தற்குப் பனங்கனி போன்ற பருத்த நாவற் கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அக் கனியின் இயல்பினை யறியாத நான் பழவினையால் அதனைக் காலாற் சிதைத்துக் கெடுத்தேன். நீராடி மீண்டு வந்த முனிவன் அக் கனி என்னாற் சிதைந்தமையை அறிந்து சினந்து, என்னை நோக்கி, ''தெய்வத்தன்மை யுடையதும் பன்னீராண்டிற் கொருமுறை ஒரே கனியைத் தருவதுமாகிய நாவல் மரத்திலுண்டானது இக்கனி ; இதனை யுண்டோர் பன்னீராண்டு பசி யொழிந்திருப்பர் ; யானோ பன்னிரண்டாண்டு பட்டினியிருந்து ஒருநாளுண்ணும் நோன்புடையேன் ; உண்ணும் நாளும் இந்நாளே ; உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ யழித்துவிட்டாய்; ஆதலால், நீ வான் வழியே செல்லும் மந்திரத்தை மறந்து, யானைத்தீயென்னும் நோயால் பன்னிரண்டாண்டு தீராப் பசி கொண்டுழந்து, பின்பு இக்கனியை யான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்'' என்று கூறி வருந்திப் போயினன். உடனே பெரும் பசி என்னைப் பற்றியது ; அதனால் மிக வருந்தினேன் ; அது கண்ட என் கணவன் காய் கனி கிழங்கு முதலியவற்றை மிகக் கொணர்ந்து என்னை உண்பிக்கவும் அப்பசி தீராதாயிற்று. அந்தரஞ் செல்லும் மந்திரமும் என் நினைவுக்கு வந்திலது. அதனால் வருந்திய என் கணவன், ''நீ நடந்து சென்று தமிழ் நாட்டிலே ஆற்றா மாக்கட்கு அருந் துணையாகிச் செல்வர்கள் வாழ்ந்திருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து அங்கே தங்குவாயாக'' என்று சொல்ல, நான் அவ் வண்ணமே போந்து இங்கிருக்கின்றேன். ஒவ்வோராண்டிலும் இங்கு இந்திரவிழா நடக்கும்பொழுது என் கணவன் வந்து என் வருத்தத்தைப் பார்த்துத் தானும் வருந்திப் பின்வரும் யாண்டினை எண்ணிச் செல்வன். தணியாத வெம்பசியைத் தணித்தனை. யான் என் பதிக்கேகுவேன். இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்ப தொன்றுண்டு; அதன்கண் பலரும் வந்து புகுதற்காகவே எப்பொழுதும் வாயிற் கதவு திறந்துள்ள உலகவறவி யென்னும் அம்பலம் ஒன்றுண்டு ;
                ''''ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர்.
                 ஆரு மின்மையி னரும்பிணி யுற்றோர்
                  இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்.
       ஆதலின் அவ்விடத்திற்குச் செல்வாயாக''''   என்று கூறிவிட்டு, அவள் தன்னூருக்குச் சென்றனள். பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச் சென்று உலக வறவியை அடைந்து மும்முறை வலம்வந்து பணிந்து, அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி, வெயிலாற் கரிந்த காட்டிலே மழை தோன்றினாற்போலப் பசியால் வருந்திய மக்கட்கு அமுதசுரபியோடு தோன்றி, ''''இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் ; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும் வருக'''' என்று கூற, பலரும் வந்து உண்பாராயினர் ; ஆதலின் அவ் வம்பலத்தில் உண்ணு மொலி மிகுந்தது.]
 [மணிமேகலை காயசண்டிகை என்னும் விச்சாதரி வயிற்று யானைத்தீஅவித்து அம்பலம் புக்க பாட்டு ]

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல                       5
வாங்குகை வருந்த மன்உயிர்க்கு அளித்துத
தான்தொலைவு இல்லாத் தகைமை நோக்கி,

உரை
 பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற - கற்பிற் சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல - அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக் கண்டு ;

யானைத் தீநோய் அகவயிற்று அடக்கிய
காயசண் டிகைஎனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி        10
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்           15
அன்னை கேள்நீ ஆர்உயிர் மருத்துவி
துன்னிய என்நோய் துடைப்பாய் என்றலும்,

உரை
யானைத் தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும் பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும் மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல, இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய் என வேண்ட ;

எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்ததுஅவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள்                     20
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்:

உரை
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற் கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில் இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள் உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத் தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள் ;


மாசுஇல் வால்ஒளி வடதிசைச் சேடிக்
காசுஇல்காஞ் சனபுரக் கடிநகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடுஎன் வெவ்வினை உருப்பத்
தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்                         25
கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த
இடுமணல் கானியாற்று இயைந்துஒருங்கு இருந்தேன்

உரை
மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வாளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினையுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலையுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன் ;

புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை
மரஉரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதுஓர்        30
இருங்கனி நாவல் பழம்ஒன்று ஏந்தித்
தேக்குஇலை வைத்துச் சேண்நாறு பரப்பில்
பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன்

உரை
புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையுமுடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக ;

தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன்                      35
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்

உரை
 தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன்

 கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன்
சீர்திகழ் நாவலில் திப்பிய
ஈர்ஆறு ஆண்டில் ஒருகனி தருவது
அக்கனி உண்டோர் ஆறுஈர் ஆண்டு                   40
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்
பன்னீ ராண்டில் ஒருநாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்

உரை
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் - அப் பழத்தினைச் சிதைத்த திறத்தினோடு என்னைக் கண்ணுற்றனன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது-சிறப்பு விளங்கும் நாவலிலே தெய்வத்தன்மை யுடைய தொன்று, ஈராறு ஆண்டில் ஒரு கனி தருவது - பன்னீராண்டிற்கு ஒரு பழம் கொடுப்பது, அக் கனி உண்டோர் - அப் பழத்தினை யுண்டோர், ஆறீராண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்- பன்னீராண்டு மக்களுடலிலுண்டாகும் பசி நீங்கப்பெறுவர், பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் - யானோ பன்னீராண்டில் ஒருநாள் உண்பதல்லது பிறநாளில் உண்ணாத நோன்பினையுடையேன், உண்கனி சிதைத்தாய்-அவ்வியல்புடைய யான் இன்று உண்டற்குரிய அக் கனியைக் கெடுத்தாய் ;

அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து                       45
முந்நால் ஆண்டில் முதிர்கனி நான்ஈங்கு
உண்ணும் நாள்உன் உறுபசி களைகென
அந்நாள் ஆங்குஅவன் இட்ட சாபம்
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை

உரை
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்பமடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவதாண்டில் முதிர்கின்ற நாவற்கினியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய் ;

வாடுபசி உழந்து மாமுனி போயபின்                   50
பாடுஇமிழ் அருவிப் பயமலை ஒழிந்துஎன்
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகுஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர்அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை        55
வான்ஊடு எழுகென மந்திரம் மறந்தேன்

உரை
வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவிகளையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியையுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத்தன்மை யுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ;


ஊன்உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறுகாய் பெரும்பசி வருத்தும்என்றேற்குத்
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
ஆங்குஅவன் கொணரவும் ஆற்றே னாக                     60
நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி
ஆங்குஅவன் ஆங்குஎனக்கு அருளொடும் உரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி                       65
நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர் உண்டால்
பலநாள் ஆயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுகென்று அவன்அருள் செய்ய
இப்பதிப் புகுந்துஈங்கு யான்உறை கின்றேன்

உரை
மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தாநின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவம் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன் ;

       மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக.

       சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவதோர் நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பலநாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல்வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன் ;

இந்திர கோடணை விழவுஅணி வருநாள்               70
வந்து தோன்றிஇம் மாநகர் மருங்கே
என்உறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்
பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன் கழியும்
தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமே கலைஎன் வான்பதிப் படர்கேன்

உரை
இந்திரகோடணை விழவணி வருநாள் - இந்திர கோடணையாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ் விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும யாண்டு அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை - என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன் - நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன் ; இந்திரகோடணையாகிய விழவு என்க; பல்வகை முழக்க முடைமை பற்றி விழா கோடணை யெனப்பட்டது ; "இந்திரகோடணை விழாவணி விரும்பி" (5:94) என முன்னர் வந்தமையுங் காண்க. ஆண்டுதோறும் இந்திரவிழா நடக்கும்நாளில் வந்து கண்டு இரங்கிக் கழியும் என்க. பின்வரும் யாண்டு - சாபம் நிற்கும் பன்னீராண்டில் எஞ்சிய ஆண்டு. மணிமேகலை

தவிர்த்தனை வணங்கினேன் படர்கேன் என்றாளென்க.       75
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர்
சக்கர வாளக் கோட்டம்உண்டு ஆங்குஅதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவி ஒன்றுஉண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்                                                 80
ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்
இடுவோர்த் தேர்ந்துஆங்கு இருப்போர் பலரால்
வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென்று
ஆங்குஅவள் போகிய பின்னர் -ஆயிழை

உரை
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர் - ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு ;

ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி                            85
வலமுறை மும்முறை வந்தனை செய்துஅவ்
உலக அறவியின் ஒருதனி ஏறிப்
பதியோர் தம்மொடு பலர்தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய              90
தம்துணைப் பாவையைத் தான்தொழுது ஏத்தி

உரை
ஆயிழை - மணிமேகலை, ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி-மாடங்கள் ஓங்கிய தெருவின்கண்ணே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று, வலமுறை மும்முறை வந்தனை செய்து - வல முறையாக மூன்றுமுறை வந்து பணிந்து, அவ் வுலகறவியின் ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின்கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப்பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித் துதித்து ;


வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக்
கருவி மாமழை தோன்றியது என்னப
பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி                   95
ஆபுத் திரன்கை அமுத சுரபிஇஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்என,
ஊண்ஒலி அரவத்து ஒலிஎழுந் தன்றே
யாணர்ப் பேர்ஊர் அம்பலம் மருங்குஎன்.

உரை
வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப்பேரூர் அம்பலம் மருங்கென்- உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவா யினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க.

(காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பாய்' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும் ; உரைப்பவள், 'உலகவறவி யொன்றுண்டு ; அதன்பாற் போக' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க.)


நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் (நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளைஇவர்களால் எழுதப்பெற்ற  பதவுரை விளக்கவுரைகளுடன்

குறுந்தொகை


குறுந்தொகை



    குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

பாடியோர்

     இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.


நூலமைப்பு
       நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னனியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.























2. குறிஞ்சி – தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.)
1
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்தி, தனது அன்பு தோன்ற நலம் பாராட்டியது
ஆசிரியர்: இறையனார்

விளக்கம்: பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போல நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ?

3. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
2
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.

துறை: என்பது தலைமகள் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித்தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.
ஆசிரியர்: இறையனார்

விளக்கம்: மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.

16. பாலை – தோழி கூற்று
 (பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
3
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.                5

துறை: பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.
ஆசிரியர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: தோழி ஆறலை கள்வர் செப்பஞ் செய்யும் பொருட்டு இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய, கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் வயிற் சென்ற, அழகிய அடியை உடைய தலைவர் நம்மை நினையாரோ?

20. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
4
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!

துறை: செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. –
ஆசிரியர்: கோப்பெருஞ் சோழன்

விளக்கம்: தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தம் துணைவியை விட்டு பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலை உடைய தலைவர் அறிவுடையவராயின், அந்த ஆற்றலை உடையோர் அறிவுடை யவரே ஆகுக! அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம் அறிவிலேம் ஆகுக!

31. மருதம் - தலைவி கூற்று
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
5
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த               5
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

துறை: நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.
ஆசிரியர்: ஆதிமந்தி

விளக்கம்: மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் ஆகிய எவ்விடத்தும் கண்டேனில்லை; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையில் உள்ள, சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.

40. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)
6
யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.           5

துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது
ஆசிரியர்: செம்புலப் பெயல்நீரார்

விளக்கம்: என்னுடைய தாயும், நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும், நின் தந்தையும், எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.

 49. நெய்தல் - தலைவி கூற்று
(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)
7
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5

துறை: தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.
ஆசிரியர்: அம்மூவனார்

விளக்கம்: அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!


 69. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.)
8
கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள் 5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

துறை: தோழி, இரவுக்குறி மறுத்தது.
ஆசிரியர்: கடுந்தோட் கரவீரனார்

விளக்கம்: கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து பாட்டை அடைந்ததாக, கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத, விருப்பத்தையுடைய பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்பித்து ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும், சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில், வாரற்க; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டாகு மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!

124. பாலை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
9
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

துறை: புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
ஆசிரியர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: தலைவ உப்பு வாணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள், இன்னாமையையுடையன என்று கூறித்தனியே செல்லக் கருதினீராயின் தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? அல்ல.

167.  முல்லை – செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
10
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின் 5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.

துறை: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
ஆசிரியர்: கூடலூர் கிழார்.

விளக்கம்: தோழி முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையை துவையாமல் உடுத்துக் கொண்டு குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.

முற்றும்

சிலப்பதிகாரம் -மதுரைக் காண்டம்

சிலம்பு - வழக்குரை காதை





[கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள் ; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் விழ்ந்தனள்.]


பாண்டிமாதேவியின் தீக்கனா 

ஆங்கு,
‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!                           5
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’

ஆங்கு - அங்ஙனம் அவள் வாயில்முன் சென்றகாலை ; பெருந்தேவி தன் கனவினிலை யுரைத்தலைக் கூறுகின்றார்.  குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண் எல்லா - தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை யான் கனவிலே காண்பேன் ; ஒடு : எண்ணொடு. வீழ என்னுமெச்சம் இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டு. கடை - வாயிற்கடை. காண் - அசை. பின்வருவனவும் இன்ன. திசை இரு நான்கும் அதிர்ந்திடும் - எண் திசையும் அதிர்ச்சியுறும் ; அதனைக் காண்பேன், அன்றிக் கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா - தோழீ அதுவேயு மன்றி ஞாயிற்றினை இருளானது
விழுங்க அதனை யான் காண்பேன் கேட்டிற்குக் கருப்பம்.

"கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை 
அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்"
10
கருப்பம
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-

உரை
செங்கோலும் வெண் குடையும் செறி நிலத்து மறிந்து வீழ்தரும் - அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அணுச் செறிந்த நிலத்தின்கண் மடங்கி வீழும், நங்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க நடுங்கும் உள்ளம் - நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும், இரவு வில்லிடும் - இராக்காலமானது வான வில்லைத் தோற்றுவிக்கும், பகல் மீன் விழும் - பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திக்கும் அதிரும், வருவது ஓர் துன்பம் உண்டு - ஆகலான் வரக்கடவதாகிய துன்பம் ஒன்றுளது, மன்னவற்கு யாம் உரைத்தும் என - யாம் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுதும் என்று கூற ;


20
ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,
உரை
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் - ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை அணிந்தவர்களாய்க் கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தினராய், கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் - புதிய நூலாடை யையும் பட்டாடையையும் தாங்கினராய், கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் - கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தினராய், வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வகை நிறங்களையும் பொற்பொடி முதலிய பொடிகளையும் கத்தூரிக் குழம்பினையும் சுமந்தனராய், கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - தொடையினையும் மாலையினையும் கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ ;

நரை விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர்
   
பலர் கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச் சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல ;

    அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னர் கோவே - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான்.


"கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்"

25
‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-

உரை
" இப் பால் - இங்ஙனமுரைத்து நின்றதற் பின்னர் ; வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே - அறிவு கீழற்றுப் போகிய அற நினைவு அற்ற உள்ளத்தினையுடைய அரச நீதியற்ற வறியோனது கோயில் வாயில் காப்போய், இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள்-தன் கணவனை இழந்தாளொருத்தி பரலினையுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனை ஏந்திய கையினையுடையளாய், கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே என - நம் கோயில் வாயி லிடத்தாள் என்று அவ்வரசற்கு அறிவிப்பாய் என்று கண்ணகி கூற ;

கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்"

30
வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

உரை

வாயிலோன் - வாயில்காப்போன், வாழி எம் கொற்கை வேந்தே வாழி - எமது கொற்கை நகரத்து,  அரசே வாழ்வாயாக, தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தெற்கின் கட் பொதியின் மலையையுடைய தலைவனே வாழி, செழிய வாழி - செழியனே வாழி, தென்னவ வாழி - பாண்டியனே வாழி, பழி யொடு படராப் பஞ்சவ வாழி - மறநெறிக்கண் செல்லாத பஞ்சவனே நீ வாழ்வாயாக, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணி - வெட்டுவாயினின்றும் செறிந்தெழுந்து ஒழுகும் குருதி நீங்காத பசிய துண்டமாகிய, பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - பிடரொடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தின்கண் ஏறி நின்ற இளங்கொடியாகிய வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், அறுவர்க்கு இளைய நங்கை - கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும் , இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும், சூர் உடைக் கானகம் உகந்த காளி - அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும், தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள், செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் - தன் உள்ளத்துக் கறுவுகொண்டாள் போலவும் மிக்க சினமுற்றாள் போலவும், பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - தொழிற் றிறம் அமைந்த ஓர் பொற் சிலம்பினை ஏந்திய கையினையுடையளாய், கணவனை யிழந்தாள் கடையகத்தாளே கணவனை யிழந்தாள் கடையகத்தாளே என - தன் கணவனை யிழந்தவள் வாயிலின் முன்னிடத்தாள் என்று கூற ;
      மன்னனை வணங்கும் ஒவ்வொரு முறையுங் கூறலின் வாழ்த்துப் பலவாயின. முதற்கண் வாழி முன்னிலையசையுமாம். படர்தல் என வந்தமையான் பழிநெறி என உரைக்கப்பட்டது. அடங்காத துணி, துணியாகிய தலைப்பீடம் என்க. மடக்கொடியாகிய கொற்றவை. எண்ணும்மையும் அல்லள் என்னும் வினையும் நங்கை முதலியவற்றோடும் கூட்டுக.

       (செற்றம் - கறுவு ; செயிர்ப்பு - வெகுளி ; 1"செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும்" என்றார் பிறரும். கண்ணகி கூறியதனைக் கொண்டு 'கணவனை யிழந்தா'ளெனக் கூறினான் வாயிலோன். கொற்றவை முதலியோர் போல்வளாயினும் அவர்களல்லள் என்றமையின் இஃது உண்மையுவமை என்னும் அணியாகும். கடிய தோற்றம் பற்றிக் கொற்றவை முதலியவாகக் கருதினான்.)

"மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்"

 ‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என
உரை
  வருக மற்று அவள் தருக ஈங்கு என-அத் தகையாள் வருவா ளாகவெனச் சொல்லி அவளை இவ்விடத்து அழைத்து வருவாய் என்று வாயிலோனிடத்து அரசன் கூற ;
  வாயில் வந்து கோயில் காட்ட-வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண் மன்னனைக் காட்ட, கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - கோயிற்கண் அரசனை அணுகிச் சென்று நின்றவிடத்து, நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய் என - அரசன், நீரொழுகும் கண்களையுடையையாய் எம் முன்னர் வந்து நின்றோய் இளங்கொடி போல்வாய் நீ யார் என்று கேட்ப ;


"கண்ணகியின் மறுமொழி"

60
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

உரை
      தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான் ; அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள். எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடைமணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக்கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர்,

       அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி - அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை யுடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து - வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி - இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம்பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலை யுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என - என் பெயர் கண்ணகி எனப்படும் என்று கூற ;
   
(புள் - புறா. பருந்தொன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்களித்தான் சிபி. இதனைக் 1"கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" என்பதனா னுணர்க. தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன். இதனை, 2"சாலமறைத்தோம்பி............முறைமைக்கு மூப்பிளமையில்" என வருஞ் செய்யுளானறிக. ஆழி - தேர்க்கால். பெரும் பெயர் - மிக்க புகழ். பெருங்குடி என்பது வணிகர் பிரிவு மூன்றனுள் ஒன்று. மகனை - ஐ, இடைச்சொல். சூழ்கழன் மன்னா என்றது கழற்சூழ்வு நின்மாட்டமைந்ததன்றி அறிவுச் சூழ்வு அமைந்திலது என்பதனைப் புலப்படுத்தி நின்றது. பெரும்பெயர்ப் புகார் என் பதி என்றது நின் பதியிற்போற் கொடுமை சிறிதும் நிகழாத பதி என்றவாறு. பாண்டியனது முறை வழுவை வலியுறுத்த நின்பதி எனவும், நின்பால் எனவும் கூறினாள்.)

"மன்னவன் உரைத்த விடை"
65
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,

உரை
 பெண்ணணங்கே - அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற ;
   
"கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்"

 ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-
‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-

உரை
 ஒள்ளிழை - ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி அவனை நோக்கி, நல் திறம் படராக் கொற்கை வேந்தே - அறநெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காற் பொற் சிலம்பு மணியுடை அரியே என - என் காற்கு அணியாம் பொன்னாலாய சிலம்பினுடைய பரல் மாணிக்கமே என்று கூற, "மன்னவன் தனது தேவியின் சிலம்பில் உள்ள அரி முத்து எனக் கூறி,  காவலர் கொணர்ந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்"

"கண்ணகி சிலம்பை உடைக்க, மன்னவன் முகத்தில் மணி தெறித்தல்"

 கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
"மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்"


75
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
தே மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - இக் கண்ணகி கூறியது செவ்விதாய நல்ல மொழியே யாகும், யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே என - எம்முடைச் சிலம்பினது பரல் முத்தே எனத் தம்முட் கருதி, தருகெனத் தந்து தான் முன் வைப்ப-அச் சிலம்பினைக் கொண்டு வருகவென ஏவலரிடைக் கூறி வருவித்துத் தானே அதனைக் கண்ணகியின் முன்பு வைத்த னனாக, கண்ணகி அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப - கண்ணகி தான் அணியும் அழகிய அச் சிலம்பினை உடைத்த காலை, மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே - அதனினின்றும் எழுந்த மாணிக்கப் பரல் பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது ;

      (தேமொழி - தேன் போலும் மொழியினையுடையாள் ; அன் மொழித்தொகை. செவ்வைமொழி - நீதிமொழி. சிலம்புடை அரி முத்தென்க. தருகென வென்றது முன்னர்க் கோவல னிடத்துப் பெற்ற சிலம்பினைக் கொண்டு வருக என்று கூறி என்றவாறு. முன் வைப்ப - கண்ணகி முன் அரசன் வைக்க. வாய் - முகம். முதல், ஏழனுருபு.)

மணி கண்டு - அங்ஙனந் தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தாழ்வுற்ற குடையனாய்ச் சோர்வுற்ற செங்கோலனாய், பொன் செய் கொல்லன்தன் சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் கொல்லனுடைய பொய்யுரை கேட்டு முறை பிழைத்த யான் ஓர் அரசனாவேனோ, ஆகேன், கள்வனென்று யான் துணிந்த அக் கோவலன் கள்வனல்லன் யானே கள்வன் , மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதற் பிழைத்தது - மக்கட் கூட்டத்தினைப் புரக்கின்ற பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறுற்றது, கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே - என் வாழ்நாள் அழிவுறுவதாகவெனச் சொல்லி அரசன் மயக்கமுற்று வீழ்ந்தான் ;
      அமைச்சரொடு சூழ்ந்து அவர் கூறியது நோக்கி முறைசெயற் குரியான் கொல்லன் சொற்கேட்டுக் கொடுமை செய்தான் ஆகலான் "யானோ அரசன்" எனவும், கோவலன் சிலம்பினைத் தம்முடையதாகக் கொண்டமையான் "யானே கள்வன்" எனவும் கூறினான் ; முன்னர், 1தேரா மன்னா' என்றதும், 2"என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே" என்றதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவே. தமக்கு முன்னர் இந் நில மாண்ட தம் முன்னோர் இங்ஙனம் கோல் கோடிற்றிலர் ஆகலானும், இவ்வாறு தான் கோல் கோடிய குற்றம் தன் வழி வருவார்க்கும் எய்தும் ஆகலானும் "தென் புலங் காவல் என்முதற் பிழைத்தது" என்றான். தென் புலங் காவலர் கோல் கோடாமையைக் கட்டுரை காதைக்கண் மதுரைமா தெய்வம் உரைத்தது கொண்டு உணர்க. வீழ்ந்தான் - துஞ்சினான்.

"கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்"


80
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.
உரை
   தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி - பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று - தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும் ; ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனஞ் சொல்லிக் காட்டலாவ தொன்றில்லை என்று கருதி, இணையடி தொழுது

   வீழ்ந்தனளே மடமொழி - அவள் தன் கணவனுடைய இரண்டு அடிகளையும் தொட்டு வணங்கி நிலத்து வீழ்ந்தாள் என்க.

      கோப்பெருந்தேவி - பெயர். குலைந்தனள் - முற்றெச்சம். வீழ்ந்தனள் - துஞ்சினாள். குலைந்து நடுங்கி இல்லென்று தொழுது வீழ்ந்தனள் என்க. கோப்பெருந்தேவி, மடமொழி தொழுது வீழ்ந்தனள் என மாறுக.


வெண்பா
 
‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.

அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின் கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வய வேந்தன் தேவி - கொடிய தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய்.

காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான்.

காவி உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச் சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் - உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல் விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான் - கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய யான் இதனைக் காண்பேனாயினேன்.

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

மெய்யிற் பொடியும் - கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும், விரித்த கருங்குழலும் - விரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், கையில் தனிச்சிலம்பும் - கையிலுள்ள ஒற்றைச் சிலம்பினையும், கண்ணீரும் - கண்ணீரையும், வையைக்கோன் - வையைக்கிறைவனாகிய பாண்டியன், கண்டவளே தோற்றான் - பார்த்த வளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அக் காரிகை தன் சொல் செவியில் உண்டளவே - அந் நங்கையின் சொல்லினைச் செவியில் உட்கொண்டவளவிலே, தோற்றான் உயிர் - உயிரை இழந்தான்

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!