Sunday, April 21, 2013

சாக்ரடீசும் கோழியும்

சாக்ரடீசும் கோழியும்

உன்னையே அறிவாயாக
ஒரு மாலைநேரத்தில் விஷக்கோப்பை
அவன் காதில் சொன்னது.
வீட்டுக்குள் அனுமதிக்கா மனைவியிடமிருந்தும்
வசைபாடும் குழந்தைகளிடமிருந்தும்
தன்னை காத்த சகமனிதர்களுக்கு
நன்றிசொல்லி சிரித்தபடி
அவன் தன் கால்முதல் தலைவரை
படர்ந்த சில்லிப்பால்
மரணத்தை நிர்ணயித்தான்

அஸ்க்ளோப்பீசுக்கு தரவேண்டிய
கோழியைப்பற்றி கிரீட்டோ மறந்துவிட்டான்.
பிளேட்டோவும் அரிஸ்டாடிலும்
சிண்டைப்பிடித்துக் கொண்டது அதற்காகவே
கடனுக்காகன வட்டி ஏறி எறி
கிரீஸையே விழுங்கியது

கோழிகள் என்ன அறியும்
கலாச்சாரத்தைப் பற்றி இல்லையா?

2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை



2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை 



இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற 
ஓவியங்கள் உருவழிந்துபோன 
வரலாற்றை பனிக்கால தேவதைகள் 
நிலமெங்கும் மலையெங்கும் 
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச் 
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும். 
நதியிடம் சொல்லி 
அல்லது சொல்ல முயற்சித்து 
மறைந்துபோகின்றனர் அவர்கள். 

எனது கடந்தகாலத்தின் சிதறல்களை 
அதன் துகள்களைக்கூட இந்த நதியின் 
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன். 
அது திரண்டு திரண்டு அழிகிறது. 
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன 
நதியைப் பெயர்த்துவிட்டு 
நான் புகுந்து, இப்போதான் 
நாளிகையாகிப் போயிருக்கலாம் 
அல்லது 
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம். 
நான் இறகாகிப் போய் 
பறவையொன்றை வெளியெங்கும் 
மிதக்கவிட்டிந்தேன். 

பின்னொருநாள் 
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில் 
நனைந்து சுகம் கண்டாள் என்னவள் 
நதியிலும் விழுந்தன என் துளிகள். 
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த 
நிறங்களையெல்லாம் 
அவள் கூந்தலின் நுனிகள் 
எதற்காக சேர்த்து வைக்கின்றன. 

ஒருவேளை 
உருவழிந்த நம்பிக்கைகளை 
வழமைபோல் மீண்டும் 
ஓவியமாய் அவள் வரைதல்கூடும். 
அதன் தொகுப்பை 
2013 என பெயரிடவும் கூடும்.

போரும் சிறிய நாடுகளும்


போரும் சிறிய நாடுகளும் 
------------------------------------- 

விளைநிலம் ஒன்றில் 
ஒற்றை ஆடும் அதன் குட்டியும் 
மேய்ந்தபடி இருந்தன.. 

கழுகு ஒன்று 
குட்டி ஆட்டினைப் 
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி 
வட்டமடித்து வந்தது.. 
கீழிறங்கி 
இரையினைக் கவ்வும் நேரத்தில் 
இன்னொரு கழுகும் 
பசியோடு வந்து சேர்ந்தது.. 

எதிரிகளின் 
ஆவேசப் போராட்டத்தின் 
கூக்குரல் 
வானமெங்கும் நிரம்பி வழிந்தது.. 

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து 
ஆச்சர்யப்பட்டுப் போனது.. 
குட்டியிடம் சொன்னது, 
"பார்த்தாயா குழந்தாய்.. 
எத்தனை விநோதம் இது?? 
இவ்விரு பெரிய பறவைகளுக்கும் 
விரிந்து பரந்த இந்த காயம் 
போதவில்லையோ?? 
இப்படி ஒருவரை ஒருவர் 
தாக்கிக் கொள்கிறார்களே..!! 
சிறகு முளைத்த அந்த 
உன்னிரு சகோதரர்களுக்கிடையில் 
சமாதானம் ஏற்படட்டும் என்று 
இதயபூர்வமாய் நீ 
இறைவனை வேண்டிக் கொள்..!!" 

குட்டியும் அவ்வாறே 
வேண்டிக் கொண்டது..!!

சித்திரவதைக் கூடத்திலிருந்து


சித்திரவதைக் கூடத்திலிருந்து 
-------------------------------------------- 
அடுத்த கணம் நோக்கி 
எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர 
முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ 
ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை 

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் 
அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து 
தப்பிக்கொள்ள முடியவில்லை 
சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே 
எண்ணங்கள் காணாமல் போயின 

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் 
உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் 
மரண ஓலங்கள் 
அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் 
பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன 

பயங்கரத்தைத் தவிர 
இங்கிருப்பது 
மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை 
சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும் 
ஒரே அன்பான தோழன் 
மரணமே 
அவனும் 
எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான் 

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின் 
குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது 

சேவல் கூவ முன்பு 
மூன்றாவது முறையாகவும் 
எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி 
காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக 
அச்சம் தரும் மரணத்தையும் 
கெஞ்சுதலுக்குப் பதிலாக 
சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி 
எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த 
இறுதிக் கண்ணீர்த் துளிகளை 
சமர்ப்பித்தது உன்னிடமே 
உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு 
பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின் 
அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன் 
அதை எரிந்து மிதிக்கிறான் 
அடுத்தது யார் 

இங்கு வாழ்க்கை இதுதான் 
இங்கு மரணம் எது? 
முகமொன்றற்ற பிணமொன்று மற்றும் 
தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும் 

பட்டியலிடப்படாத வாழ்க்கை 
பட்டியலிடப்படாத மரணத்தோடு 
வந்து சேர்கிறது 

பைத்தியக் கனவுகளோடு 
நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன் 
எனினும் நான் இங்கேயேதான் 
இந்தத் தெளிவு கூட 
கண்டிப்பாகப் பயங்கரமானது 

இங்கு படுகொலை செய்யப்பட்ட 
அனேகருக்கு 
மனித முகமொன்று இருந்தது 
எனது இறுதிச் சாட்சியாக 
எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

எல்லை


எல்லை 
----------- 

பிரக்ஞைக்கு திரும்பியதும் 
உலகை பார்க்க, நுகர, 
உணர, கேட்க வேண்டி 
வாசலைக் கடக்கையில் 
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள் 

இந்தச் சுவர்களே உனது வெளி 
இந்த மேற்கூரை உனது வானம் 
இங்கே, சலனமற்ற மதிய வேளையில் 
இந்தத் தலையணைகள் 
இந்த வாசமிகு சோப் 
இந்த டால்கம் பவுடர் 
இந்த வெங்காயங்கள் 
இந்த ஜாடி, இந்த ஊசி 
மற்றும் இந்த நூல் 
மற்றும் பூ வேலைபாடுடை 
தலையணை உறைகள் 
இவைகள்தான் உனது வாழ்க்கை 

அடுத்தப் பக்கத்தில் 
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை 
எங்ஙனம் பார்ப்பது? 
பின்கேட்டை திறந்து கொண்டு 
போகும் அவள் 
போகாதே என தடுக்கப் படுகிறாள். 

தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள் 
இந்த கீரையை, இந்த கொடியை 
அடிக்கடி கவனித்துக் கொள் 
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை 
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை 
இந்த தூய்மையான பசுமை பரப்பை 
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை 
இந்த மணம் வீசும் மண்ணை 
இவையணைத்தும் தான் 
உனது உலக

Saturday, April 20, 2013

வாழ்க்கைக்கு கதைகள்

புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? | நகைசுவை அறிவு கதைகள்


ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.
அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.
 ""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.
""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.
""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.
""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?'' 
""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.
அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.
'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.
அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.
""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.
புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.
""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''
""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''
""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''
""மாட்டேன்!''
புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.
""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.
""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.
""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.
""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''
""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.
புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.
புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்... புலிக்கு கோடு  வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!


யானைக்கு வந்த திருமண ஆசை


மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.

ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.

நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.

"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. 
மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.

என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.

மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.

முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.


Digg

வேலைக்காரனின் சீரிய சிந்தனை | நகைசுவை கதை

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து,
குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார். 
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' 
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். 

அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை


உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து  எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள்
"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.
பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.
அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....
அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.
பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.
"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.
பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.
"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.
மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.
"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.
தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.
அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.
"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.


திருட்டுத் தொழில் | குரங்கின் பலே பட்டாசு !



உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
 "குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?" என்று கேட்டான், மட்டி
"மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!" என்றான் மடையன்.
"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான், முட்டாள்.
"ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?" என்று கேட்டார், பரமார்த்தர்.
"பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?" எனக் கேட்டான், மண்டு.
"நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்" என்று விளக்கம் சொன்னான், மூடன்.
"இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்" என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.
அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. "சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, "லபக்" என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.
சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.
அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது. அதைக் கண்ட பரமார்த்தர், "சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!" என்று கத்தினார்.
மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர். அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!" என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.
சீடர்களும், "ரங்கா, ரங்கா!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
மடத்துக்கு வந்து சேர்ந்ததும், "நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.
"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.
அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.
வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.
அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.
"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான், முட்டாள்
பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.
பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், "நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு" என்றான்.
சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.
ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.
அடுத்த கணம், "டமால், டுமீல்" என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.
வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக் கொண்டு உருண்டனர்.
நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்.


முரட்டுக் குதிரை


சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.

ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.

அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.

"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.


என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்


ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.



மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும்,  நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..


கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?


ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.



"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.  "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.


கடவுளைத் திருடியவர்கள்




ஒரு அழகான குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு மகன்கள் வாழ்ந்து வந்தனர், இரு மகன்களும் பெற்றோர்களுக்கு தொல்லைதரும் விஷயங்கள் மட்டுமே செய்து கொடிருப்பர்கள், திருடுவது, பொய் சொல்வது, அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடிப்பது என எப்போதும்  கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் திருத்த எத்தனையோ முறை முயன்று, தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள், இருவரையும் ஒரு பாதிரியாரிடம் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்..

பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர் முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்தார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியாக, ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.

அதற்க்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில் சொல்’

அவன் விழித்தான்.

‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு சொல்லப் போறியா இல்லையா?’

அவன் அழ ஆரம்பித்தான்.

‘சரி. நீ போ. உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’ என்றார்

அவன் வேகமாக அறையை விட்டு ஓடிப்போய் தனது சகோதரனிடம் சொன்னான். ‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். கடவுளைக் காணோமாம் . நாம்தான் திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’ என்று...!


உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு


ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள்.

 
இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார். 

சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான். 

இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ... நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன். 

வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.

போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான்.

போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு "வாவா...ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?" என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு "என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்" என்றார். 

"இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்...உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும்.

பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று


“ஐயோ” ன்னு சொல்லாதீங்க?


ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.



இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!