Wednesday, February 27, 2013

புவியில் ஏற்படும் தாக்கங்கள்

புவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டததை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிவுகூறியுள்ளது.
புவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது.

விஞ்ஞானிகளின் கருத்து

வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களினது அதிகரிப்பே புவியின் அதிகரித்த வெப்பத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதும் அதே வேளை இது இயற்கையின் ஓர் அம்சமாக இருக்கலாம் என்றும் இன்னும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் கடந்த பல்லாயிரம் வருடங்களாக நடந்து கொண்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் நீண்டகால அல்லது குறுகிய கால வட்டங்களாக நிகழ்கின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகக் காணப்படுகின்றது.

காரணம் என்ன ?

புவியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கான காரணம், இயற்கையான பதார்த்தங்களா அல்லது மனிதனின் செயற்பாடுகளினால் உருவாக்கப்படும் வாயுக்களா என்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலைதான் இங்கு காணப்படுகின்றது.

மாநாட்டின் முடிவு

இவ்வாறான பல கருத்துக்கள் காணப்படுவதன் காரணத்தினால் தான் ஐக்கிய நாடுகள் சபை 1995 ம் ஆண்டில் விஞ்ஞானினகளின் கூட்டமொன்றை “புவிவெப்பமடைதலுக்கான காரணிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்“ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்தது. இம் மாநாட்டின் முடிவின் படி; மனித செயற்பாடுகளே காரணம் என்பதனால் 2100ம் ஆண்டாகும் போது பச்சை வீட்டு வாயுக்கள் வெளியிடப்படும் அளவு குறைக்கப்படாவிட்டால் புவியின் மேற்பரப்பின் வெப்பமானது 1.0பாகை செல்சியஸ் முதல் 3.50பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டது.

மோசமான விளைவுகள்

இவ்வாறான பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது பல மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றன. அதில் முக்கியமாக சமுத்திரங்களின் நீர் மட்டம் அதிகரிக்கப் போவது தான் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் கனவளவு அதிகரித்து வரும்.அதனால், கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதை விடவும் பாரதூரமான ஆபத்தாகக் காணப்படுவது கீரீன்லாந்து தீவின் மீதிருக்கும் இராட்சதப் பனிக்கட்டிப்படலம் உருகத்தொடங்குவதால் உண்டாகும் நீர் சமூத்திரங்களில் சேர்வதேயாகும். இது நிகழ்ந்தால் உலகக் கடல்களின் நீர் மட்டம் மேலும் 7m வரை உயரலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே நேரம் மேற்கு அண்டார்க்டிக்காவிலுள்ள பனிக்கட்டிப்பாறைகளும் இந்த வகையில் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இதனால் இன்னும் கடல் மட்டம் மேலும் 6m உயர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச உச்சி மாநாடு

இவ்வாறான நிலைமைகளில் தான் உலக நாடுகளின் கவனம் இதன் பக்கம் திரும்பத் தொடங்கின. இதனால் 1997 டிசம்பரில் ஐப்பானின் கியோத்தோ நகரில் புவி வெப்பமடைதல் பற்றிய சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 160 நாடுகளின் பிரதிநிதிகள் கியோத்தோ உடன்படிக்கை என்ற பெயரில் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதில் 38 தொழில்மய நாடுகள் தம் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 1990ம் ஆண்டிலிருந்த மட்டத்தை விட 15% குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த இலக்குகள் 2008 – 2012 ம் ஆண்டுக்கால இடைவெளிக்குள் அடையப்பட வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
2000 நவம்பர் இறுதில் புவி வெப்பமடைதல் பற்றிய இன்னோர் உச்சி மாநாடு ஒல்லாந்திலுள்ள ஹேக் நகரில் நடைபெற்றது. பச்சைவீட்டு வெளியேற்றத்தைக் கட்டப்படுத்துதல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவூக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இம்மாநாடு தோல்வியில் முடிந்நது.

பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து

இன்னும் 500 வருடங்களில் உள்ள கடல் மட்டம் 7 – 13m வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடந்தால் உலகின் பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாலைத் தீவுகள், ஒல்லாந்து ஆகிய நாடுகள் கடலினுள் முற்றாக அமிழ்ந்து விடக்கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது.

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!