Thursday, May 24, 2012

நம்பிக்கை விதை

நம்பிக்கை விதை

மூட்டை கட்டிய இருட்டு
மூச்சின்றிக் கிடந்தேன்

உயிரை இறுக்கி நெருக்கும்
உறவினர்கள்

சுவாச இழுப்புக்குச் சிக்காமல்
கெட்டிப்பட்டுக் கிடந்தது காற்று

அத்தனை பேர் கழுத்துக்கும் ஒரே
சுருக்குக்கயிறு

கலங்கவில்லை நான்
எந்தப் பேய்மழைக்கும் உண்டு
ஒரு கடைசித்துளி

எந்த இரவுக்கும் உண்டு
ஒரு சூரிய முற்றுப்புள்ளி

எங்களுக்கும் விடிந்தது
ஒட்டுமொத்த சமூகத்தோடு
எனக்கும் விடுதலை

இருட்டே இயல்பானதால்
வெளிச்சம் கூசியது

கொஞ்ச நேரம்தான்
கால்புதையும் நிலத்தில்
விசிறியடித்து விதைத்தான் உழவன்

மீண்டும் இருட்டு
பெற்றது விடுதலையல்ல;
சிறைவிட்டுத் தப்பித்து
உயிரோடு சமாதி

அழவில்லை நான்
இது புதைப்பல்ல; விதைப்பு
சமாதி முட்டுவேனென்று
சபதித்தேன்

உயிர்ச் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளைதூக்கும்வேளையில்
எங்கிருந்து வந்ததோ
பெயர்தெரியா ஒரு பறவை

என்னைத்தோண்டி விழுங்கித்
தொலைதூரம் பறந்தது

தொடர்ந்தது என் வாழ்வு
தொடர் இருட்டில்

மரணம்போல் ஒன்றுவந்தும்
மரிக்காதிருந்தேன்

உயிரில் நம்பிக்கை
ஊற்றி வைத்தேன்

நம்பிக்கையில் உயிரை
ஊற வைத்தேன்

வீண்போகவில்லை;
எச்சத்தில் வெளிவந்தேன்

இப்போது நான் முளைத்திருப்பது
கோட்டையொன்றின் கொத்தளத்தில்

நீ சாகும் வேளையிலும்
நம்பிக்கை சாகாதே!


- வைரமுத்து

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!