Thursday, October 25, 2012


மகாகவி பாரதி

மகா கவி
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாள். நாளைய இலக்கியங்களுக்கெல்லாம் அன்றே வழிகாட்டியாய் இருந்து தமிழின் பெருமையை தரணிக்கு உயர்த்திய தங்க நிலா பாரதி.
அநீதிக்குத் தலைவணங்காத் தூயோன்.
மானுடரின் குறை கண்டு மயங்கிய மாயோன்.
அவர்தம் வாழ்வு சிறக்கப் பாடிய வள்ளல்.
பாரதியின் வாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள்;
சச்சரவுகள்; சங்கடங்கள்; சந்தோஷங்கள்.
இப்படிப் பலதும் இருக்க,  அவர் வாழ்வில் நிகழ்ந்தஆச்சரியமான ஆன்மீக அனுபவம் மட்டும் இங்கே…

இது பாரதியின் கவிதைத் தொகுப்பில் ’பல்வகைப் பாடல்கள்’ பகுதியில் ’ சுய சரிதை’ என்ற பிரிவில், பாரதி அறுபத்தாறு என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி…
பாரதி அறுபத்தாறு
முதற் காண்டம்
குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்)
ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
………………………………………………………………………..
………………………………………………………………………..
குருதரிசனம்
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.
அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.
யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.–26
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளேதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “அறிந்தேன்” என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.
…………………………………………………………………….
……………………………………………………………………..
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்”என்றேன்
புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
“புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;

கோவிந்த ஸ்வாமி புகழ்
மாங்கொட்டைச் சாமிபுகழ் சிறிது சொன்னோம்;
வண்மைதிகழ் கோவிந்த ஞானி, பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்,
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
………………………………………………………………………………….
…………………………………………………………………………………
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரமஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்.
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.
இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை. பாரதிக்கு, குரு உபதேசம் செய்த வழி, நாமும் நம் மனதுள் உள்ள மாசுக்களைக் களைவோம். மனோ பலம் பெறுவோம்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!