Thursday, January 17, 2013

பாரதியை போற்றுவோம்


பாரதியை போற்றுவோம் - சிறப்பு விழா 


7 வயதில் கவிதைத் தொழிலை தொடங்கி... 11 வயதிலே பண்டிதர்களால் ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்று, தீரக்கவிஞனாய் வாழ்ந்து தனது 39 ஆம் வயதிலேயே (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) இயற்கை எய்தினாலும் எக்காலத்தும் அவன் புகழை இந்த இயற்கை கவி எழுதிப் பாடிக்கொண்டே இருக்கும்.
 
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்னும் கொள்கை கொண்ட புலவனின் புகழை போற்றும் விழாவினை அவன் அவதரித்த இந்த டிசம்பர் மாதம் முழுதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கொண்டாடி வருகின்றன என்பது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் முற்போக்கு சிந்தனையாளர் பேரவை ‘பாரதியைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் விழா எடுத்தது.  

டிசம்பர் 30, 2010 அன்று மாலையில் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முற்போக்கு சிந்தனையாளர் பேரவைத் தலைவர் தாம்பரம் நாராயணன் தலைமை தாங்கி விழாவை நடத்தினார். இசை - கவிதை - கருத்தரங்கம் என்ற பிரிவுகளில் பாரதியின் சிறப்புகள் போற்றப்பட்டன. 

‘இசையில் பாரதி’ என்ற வகையில் டி.கே.எஸ்.கலைவாணன் பாரதியின் பாடல்கள் சிலவற்றை பாடி, பாரதி கவிதையினை இசைவழி தந்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
 
விழாவில் தமிழறிஞர்கள் ரா.அ.பத்மநாபன், சீனி.விஸ்வநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.‘திரையில் பாரதி’ என்ற தலைப்பில் பாரதி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கவிதையில் பாரதி -  கவிஞர் நெல்லை ஜெயந்தா

கவிதையில் பாரதி என்ற பிரிவில் “அக்கினி குஞ்சு” என்ற தலைப்பில் பாட்டுக் கவிஞன் பாரதியை போற்றி கவிப்பாடினார் கவிஞர் நெல்லை ஜெயந்தா. ரத்தம் சிந்திப்பெற்ற சுதந்திரத்தைப்பற்றி இன்று மக்கள் எப்படி நினைக்கின்றனர் என்பதை கவிதையாக குறிப்பிடுகையில்... 

மருத்துவன் : ஆகஸ்ட் என்னும் எட்டாவது மாதத்தில் பிறந்ததால் சத்துகுறைவுடன் தான் சுதந்திரம் இருக்கிறது. 

வழகறிஞன் : 18 க்கு மேல் கிடைத்திருந்தால் மேஜராயிருக்கும், ஆனால் 15 ல் (ஆகஸ்ட் 15) பெற்றதால் இன்னும் மைனராக தான் இருக்கிறது.

ஜோதிடன் : ஆகஸ்ட் என்ற மாதத்தின் கடையில் கஸ்ட் என்று முடிந்து கஷ்டத்தை குறிப்பதுபோல் அமைந்துள்ளதால் சுந்தந்திரம் இன்னும் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கிறது.

மாத சம்பளகாரன் : 1 ஆம் தேதி கிடைக்காமல் 15 ஆம் தேதி கிடைத்ததால் பொருளாதார நெருக்கடியுடனே இருக்கிறது. 

நடிகன் / நடிகை : 47 இல் கிடைத்த சுதந்திரம் 27ல் கிடைத்திருந்தால் இளமையோடு இருந்திருக்கும். பரவாயில்லை, இரவில் கிடைத்ததில் சந்தோஷமே.  இப்படி அவரவர்கள் சௌகரியத்திற்கேட்ப சுதந்திரம் பற்றி நினைப்பதாக கவிபாடினார். 

பாரதி மீண்டும் அக்னி குஞ்சாக பிறந்து... லஞ்சம், ஊழல், போலி சாமியார்கள், திரைத்துறை ஆபாசங்கள், கல்வியை காசுக்கு விற்றல் ஆகியவற்றை எரிக்க, பாரதியை வேண்டி அழைத்தார். 

கொள்ளை பற்றி குறிப்பிடும் போது கொள்ளை இரண்டு வகையில் நடக்கிறது. “ஒன்று வீட்டுக்கதவை பூட்டும் போது. மற்றொன்று பள்ளிக்கதவை திறக்கும் போது” என்று முத்தாய்ப்பாக கூறினார்.

மேலும்... 

பாரதி பட்டினியோடு கவிதை பாடியதால்தானோ, 
அவன் கவிதைகளை - காலத்தால் 
இன்னும் திண்டு தீர்க்க முடியவில்லை.  

பாரதி வாழவே இல்லை -
என்கிறது பொருளாதாரம் ; - ஆனால்
பாரதி இன்னும் சாகவே இல்லை - 
என்கிறது சரித்திரம்...
 
இப்படி பாரதியின் புகழ் பாடினார் நெல்லை ஜெயந்தா. பாரதி சாதாரணமானவன் அல்ல என்பதால் தான், எமன்கூட கயிறு வீசாமல் ‘களிறு’ வீசினான் என்பது போன்ற பல எதுகை மோனைகள் மேலிட பாரதியை ஜெயந்தா பாடிய விதம் அரங்கை சிலிர்க்க வைத்தது.

கருத்தில் பாரதி -  என்ற பிரிவில், “தேசியம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேச்சு வழக்கு தமிழ் நடையில் கருத்துரையாற்றினார். கார்த்தி ப.சிதம்பரம் “உன்னால் முடியும்” என்ற தலைப்பில் உணர்ச்சிமிகு உரையாற்றினார்.


தேசியம் வளர்த்த தமிழ் - கவிஞர் நந்தலாலா

அரசியல் பரபரப்புக்கிடையில், பாரதியை கொண்டாட விழா எடுத்த தாம்பரம் நாராயணனையும், விழாவினை வந்து சிறப்பித்த கார்த்தி சிதம்பரத்தையும் பாராட்டியே ஆக வேண்டும். இன்றைய சூழலில் திரைப்பட நடிகர்களுக்காக கூட்டம் கூடுவதையே எங்கும் பார்க்கலாம். (ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதியை எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11 ந் தேதி பற்றி தெரிவதே இல்லை). இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் பாரதியைப் போற்ற இந்த அரங்கம் நிறைந்த மக்கள் வந்திருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

பாரதிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்றால் அவன் பாடிய ‘நந்தலாலா’வையே எனது பெயராக சூட்டிக்கொண்டதும், எனது மூத்த மகளுக்கு பாரதி என்றும், இளைய மகளுக்கு நிவேதிதா என்றும் எனது வீட்டுக்கு “காணி நிலம்” என்று பெயர்களை வைத்துள்ளதே ஆகும். இதையே நினைத்து பெருமையடைகிறேன்.   





தமிழில் கீர்த்தனை பாடக்கூடாது என்ற மன்னனின் உத்தரவினால், தெலுங்கில் கீர்த்தனை பாடி ராமனை பாடியவர் 
தியாகராஜர் சுவாமிகள். அவர் வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தார். ராமனை கீர்த்தனை மூலம் வழிப்பட்ட தியாகராஜர் சுவாமிகள் ‘கஞ்சிதா, கஞ்சிதா’ என்றுகூறி பிச்சை எடுத்து துறவு வாழ்வு வாழ்ந்தவர்.

ஆனால் இன்றும் துறவி என்ற பேரில் இருக்கும் சாமியாரோ ரஞ்சிதா ரஞ்சிதா என்கிறார். திருவண்ணாமலை வந்திருக்கும் இவரை வாழ்க வாழ்க என்று கோஷம் போடவும் ஒரு கூட்டம் கூடுகிறது. 

“தேசியம் வளர்த்த தமிழ்” என்பது குறித்து சிந்திக்கும் போது, தமிழின் பேரிலக்கியங்கள் எதுவும் படித்ததில்லை. என்றாலும் தனது நாட்டுக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டி வழி செய்த பெருந்தலைவர் காமராஜர் தான் நினைவுக்கு வருகிறார். 


மாடுமேய்க்கும் சிறுவன் ஒருவனிடம், ஏன் படிக்க பள்ளிக்கூடம் போகாமல் மாடுமேய்கிறாய் என்று காமராஜர் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், நான் படிக்கப்போனால், மாடு யாரு மேய்க்கிறது? என்கிறான். வீட்டில் பெரியவுங்க மேய்க்க மாட்டாங்களா என்கிறார் காமராஜர். நான் மாடு மேய்க்காமல் பெரியவுங்க மேய்ச்சா எனக்கு சோறு போடமாட்டாங்களே என்கிறான். அப்படி என்றால், சோறு கிடைச்சா படிக்கப்போவாயா என்ற காமராஜரிடம், சோறு கிடச்சா நிச்சயம் பள்ளிக்கூடம் போவேன் என்கிறான். 

அந்த மாடு மேய்க்கும் சிறுவனின் வார்த்தையினால் ஒரு தெளிவுக்கு வந்த காமராஜர் தனது உதவியாளரிடமும்,  நிதியமைச்சரிடமும் மதிய உணவு திட்டத்துடன் பள்ளிக்கூடம் நடத்த முடியுமா என காமராஜர் கேட்க, அவர்கள் முடியாது என்கிறார்கள். பட்ஜெட் எகிறும் என்கிறார்கள். அதுபற்றி யோசித்த காமராஜர், நான் மடி பிச்சை எடுத்தாவது மதிய உணவுத் திட்டத்துடன் கூடிய படிப்பை என் தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு வழங்குவேன் என்று கூறுகிறார்.

தான் பெற்ற குழந்தைக்காக பெற்றவர்கள் பிச்சை எடுக்கலாம், ஆனால் பிள்ளையே பெறாதவர் தன் நாட்டுப் பிள்ளைகள் படிக்க பிச்சை கூட எடுப்பேன் என்றாரே அவரிடம்தான் தேசிய வளர்த்த தமிழை பார்க்கிறேன்.

அன்றைய திரைப்பட சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், பி.யூ சின்னப்பா மற்றும் என்.எஸ்.கலைவாணர் போன்றவர்கள் எல்லாம் பங்கேற்ற ஒரு விழாவிற்கு தலைமை தாங்க பெரியார் வந்திருக்கிறார். பெரியார் பேசும் போது, முன்வரிசையில் இருந்த நடிகர்களைப் பார்த்து,  “என்னங்கையா, நீங்கெல்லாம் பெரிய நடிகர்கள். எவ்வள சம்பளம் வாங்குவீர்கள் ? ” என கேட்கிறார். அதற்கு நடிகர் வரிசையில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. என்ன ஒரு நாற்பதானயிரம் வாங்குவீங்களா? அதெல்லாம் வாங்குவீங்க வாங்குவீங்க. ஆனால் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு சம்பளம் நாலனாதான். 

அது சரி, நீங்க இல்லைன்னா நாட்டு மக்களுக்கு என்ன நஷ்டம் வந்திடப்போகுது. ஆனால் விவசயிகள் இல்லை என்றால் யாருமே வாழமுடியாது. எவன் இல்லை என்றால், மக்களால் வாழமுடியாதோ அவனுக்கு நாலனா. ஆனால் மக்களுக்கு எந்த லாபமுமே இல்லாத உங்களுக்கெல்லாம் நாற்பதனாயிரம். என்று ஆதங்கப்படுகிறார் பெரியார்.
  
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தக் காலக்கட்டதில் ஊர்களின் பெயர்ப் பலகையில் எழுதியிருக்கும் இந்தி எழுத்துகளில் தார் பூசி அழித்தனர். அப்போது, எங்கள் ஊரில் ஒருவன் தாரினை எடுத்துக்கொண்டு பெயர் பலகையில் இருக்கும் இந்தி எழுத்தை அழிக்க வந்தான். அவன் என்னை பார்த்து, இந்தி எழுத்தில் தார்பூசி அழிக்கப்போகிறேன் என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. மறுபடியும் என்னிடன் இந்தி எழுத்தை அழிக்கனும் என்றான். அழித்துக்கொள், அதற்கு ஏன் என்னிடம் கேட்கிறாய் என்றேன். அதற்கு அவன் சொன்னான், எது தமிழ், எது இந்தி எழுத்து என்று தெரியவில்லை என்றான். அவனுக்கு தமிழே சொல்லிக் கொடுக்கப்படவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தி இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன?.

இந்த மேடையில் 6 விளக்குகள் இருக்கிறது இதில் ஒரு விளக்கு குறைந்தால் வெளிச்சம் குறையும். இன்னும் ஒரு விளக்கு அதிகமாக கூடினால் வெளிச்சமும் அதிகமாகும். அதுபோல்தான் மொழியும். கிராமங்களில் முயல் வேட்டையின் போது 5, 6 டார்ச் விளக்குகளை எடுத்துக்கொண்டு முயல் வேட்டைக்கு செல்வார்கள். அத்தனை விளக்குகளின் வெளிச்சம் படும்போது முயலுக்கு கண் கூசி முயல் நின்றுவிடும். அந்த வெளிச்சத்தில் முயலை எளிதாக பிடித்து விடுவர். அப்படி பலவிளக்குகள் வெளிச்சத்தில் முயல் நிற்கும் போது, நமது கண்ணைக் கட்டிக்கொண்டால் அந்த முயலை பிடிக்கமுடியாது.  அந்த விளக்குகள் போல்தான் மொழியும். தாய் மொழி என்பது நமது கண் போன்றது. இதை நாம் உணரவேண்டும். பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் தமிழை உலக அளவிற்கு கொண்டு செல்ல முடியும். பாரதிக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரான்ஸ், வங்க மொழி என்று பலமொழிகள் தெரியும். அப்படி பல மொழிகள் தெரிந்ததால்தான் அவரால்,“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது ஏதும் இல்லை” என்று கூற முடிந்தது. 

நம்மிடம் இருக்கும் ஒரு குறை ஆங்கிலம் போன்ற மொழிகளை கற்கும் போது, நம் தாய்மொழியை புறக்கணித்துவிடுவதுதான். பகத்சிங் அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் அதில் தனது தாய் மொழியான பஞ்சாபி வளராததற்கு ஒரு காரணம் சொல்கிறார். “பஞ்சாபி மொழி அதிகமாக மதத்தோடு கட்டப்பட்டிருப்பதாலேயே அதனால் வளர முடியவில்லை” என்கிறார் அவர்.  
மதம் போன்ற எந்த ஒரு பிற காரணிகளால் அதிகமாக கட்டப்பட்ட எந்த ஒரு மொழியும் வளர்வதில்லை. 

எனவே மொழிகுறித்த விளிப்புணர்வை, பார்வையை இளையதலைமுறையினரிடம் உருவாக்க வேண்டும்.


உன்னால் முடியும் - கார்த்தி ப.சிதம்பரம்

பாரதியார் தமிழோடு தேசியத்தையும் வலியுறுத்தினார். ஆனால், தமிழகத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழைப் பற்றி பேசுபவர்கள் தேசியத்தை வலியுறுத்துவதில்லை.தேசியம் பற்றி பேசினால் தமிழுக்கு விரோதி என்பது போல சித்தரிக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் தேசியக் கொடியேற்றி யாராவது பார்த்தது உண்டா? தமிழ், ஈழம் இந்த இரண்டையும் பற்றி பேசினால்தான் தமிழ் உணர்வாளர் என்பது போன்ற தோற்றம் இங்கே ஏற்பட்டுள்ளது. தமிழ் உணர்வு பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழையும், ஆன்மிகத்தையும் யாரும் பிரிக்க முடியாது. கடவுளை கேலி செய்வது தமிழகத்தில் 
நாகரிகமாகிவிட்டது. ஆனால், மேடையில் நாத்திகம் பேசுபவர்கள் வீட்டுச் சடங்களில் ஆத்திகம் கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் தமது விலை மதிக்க முடியாத வாக்குரிமையை விற்பவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் சரியாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் சரியாக இருப்பார்கள். 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் எதிர்காலத்தில் ஜாதி கட்சிகள் பெருகும். ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் போல், ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கேட்பார்கள். இதனால், மிகப்பெரிய அரசியல், சமுதாயப் பிரச்னைகளை இந்தியா சந்திக்கப் போகிறது.

ஜாதி வாரிக்கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுள்ளது. நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்காக எனது கட்சி எடுக்கும் எல்லா முடிவுகளையும் என்னால் ஏற்க முடியாது.

தமிழகம் இன்று சினிமா மாயையில் சிக்கித் தவிக்கிறது. நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் சினிமாவில் வரும் டாக்டரிடம் நாம் சிகிச்சை பெறுவதில்லை.  நம் வீட்டில் களவு போனதென்றால் சினிமாவில் வரும் போலீஸிடம் கண்டு பிடிக்கச்சொல்வதில்லை. ஆனால், திரையில் வரும் நாயகர்களை நாடாள அழைக்கிறோம். 

அரசியல் வளையத்துக்கு வெளியே சென்று எந்தக் கருத்தையும் தமிழகத்தில் சொல்ல முடியவில்லை. ஒரு கருத்தைச் சொன்னால் கூட்டணிக் கட்சியினர் கோபித்துக் கொள்வார்களோ, எங்கள் கட்சியிலேயே மற்ற கோஷ்டியினர் காலை வாரிவிட்டு விடுவார்களோ என்று பயப்படும் நிலை உள்ளது. எனக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் இரண்டு 'E'க்கள் தேவை. ஒன்று Electricity மற்றொன்று Education. இது பற்றி நான் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறேன். அதில் நாட்டின் வளர்ச்சிக்கு 5 அடிப்படைத் தேவைகளை குறிப்பிட்டு இருக்கிறேன். அவை,

1) மின்சாரம்,  2) கல்வி,  3) கட்டுமான வசதி, 4) காவல்துறை,  5) சட்டத்துறை ஆகியனவாகும்.




மின்சாரம் இல்லை என்றால் எதுவும் நடக்காது எந்தத் தொழிலும் நடக்காது. கல்வி என்பது அனைவருக்கும் 
வளங்கப்படவேண்டும். உலகின் எல்லா நாட்டிலும் கல்வி என்பது அரசிடமே இருக்கும். ஆனால் நம் நாட்டில் தனியாரிடம் விடப்பட்டு, கல்வி இன்று விற்பனைப் பொருளாகிவிட்டது. அரசு பள்ளிகள் வளர வேண்டும் என்றால் அரசாங்க பணியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நான்கூட உத்தமான் அல்ல. எனது குழந்தைகூட தனியார் பள்ளிக்கூடத்தில் தான் படிக்கிறது. இப்படி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கும்போது அந்தப் பள்ளிக்கூடம் கட்டுமான வசதியில் சிறப்பாக அமையும். ஆசிரியர்கள் ஒழுங்காக, சரியான நேரத்திற்கு வந்து சொல்லிக்கொடுப்பர். 

நம் நாடு அணு ஆயுதம், ராணுவம்,விஞ்ஞானம் என்று எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்தாலும் கட்டுமான வசதியில் வளர்ச்சி அடையாதவரை வல்லரசாக முடியாது. நாம் நாட்டு சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பது ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒவ்வொரு மழைக் காலத்திலும் சாலைகள் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை முற்றிலும் சரிசெய்யப்பட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டில் எவ்வளவு தான் பனிப் பொழிவோ, மழைப் பொழிவோ இருந்தாலும் சாலைகள் பதிக்கப்படுவதில்லை. நம் நாட்டில் சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தம் விடப்படும் போது, மழைக்கு சாலை அழிந்தால் நஷ்ட ஈட்டை அந்த ஒப்பந்ததாரர் அளிக்க வேண்டும். அவருக்கு சிறைத் தண்டனைவரை வளங்கவும் அரசு முன்வரவேண்டும். 

அடுத்ததாக,  காவல் மற்றும் சட்ட ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நம் நாட்டில் தப்பு செய்பவர், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வெளிவந்து விடுகிறார். இப்படி இல்லாமல் சட்டம் ஒழுங்கு கடுமையாகவும், மிகச்சரியானதாகவும் இருக்க வேண்டும்.  

“தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’  - பாரதி.


















No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!