Thursday, October 17, 2013

வள்ளலாரின் சமுதாயச் சிந்தனைகள் – பேராசிரியர் டாக்டர் சு.சிவகாமசுந்தரி

இந்திய நாடு பழம்பெருமையும் புதுமைச் சிறப்பும் பெற்றுத் திகழும் நாடு இத்தகு நாட்டின்
மக்களை எண்ணிப் பார்த்துத் தமிழ்நாட்டில் “சிதம்பரம் இராமலிங்கம்’, “வடலூர் வள்ளலார்’,
“வள்ளலார்’, “திரு அருட்பிரகாச வள்ளலார்’ என்றெல்லாம் அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகள்
தோன்றிச் செய்த சமுதாய விழிப்புணர்ச்சியை எண்ணிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.
சன்மார்க்க அறநெறி :
மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழத்தில் சன்மார்க்க மரபு வளர்ந்து வருகின்றது சன்மார்க்கத்தின்
அடிப்படைக்கொள்கைகள் -மனிதன் வாழுகின்ற சமுதாயத்தை நினைத்துப் பார்ப்பது, மன்னுயிர்க்கு இரங்குதல், பசிபோக்குதல் ,உயிர்க்கொலை தவிர்த்தல் ,ஆருயிர்க்கும் அன்புசெய்தல் ,மனிதச் சமத்துவம் காணுதல் எனலாம் சன்மார்க்க நெறியினைத் திட்டமிட்டு மன்னர்களும் மக்கட் கூட்டமும் முறையாக வளர்த்தமையைச் சங்கஇலக்கியங்களும் சுட்டுகின்றன.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் சன்மார்க்கத்தின் வழித் தம் காலத்தில் முதற்கட்டமாகப்
பசிநீர்க்கும் பேரறத்தை இவ்வுலகத்தில் நிலைநாட்டி அதன் வழியாகச் சமுதாயத்தை உயர்த்த எண்ணிய வள்ளலார் தம்மைச் சுவாமிகள் என அழைப்பதோ , வணங்குவதோ தமக்கு உடன்பாடல்ல என்பதைப் பல இடங்களில் உணர்த்துவார்.
அன்றைய தென்னார்க்காடு இன்றைய வள்ளலார் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்
மருதூரில் 1823 அக்டோபர் 5ல் தோன்றினார் .தாம் பிறந்த காரணத்தைத் திருஅருட்பாவில் பின்வருமாறுகூறுவார் .
“”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்திருந்த உலகர் அனைவரும் சகத்தே திருத்திச்
சன்மார்க்கச் சங்கத் தடைவித் திடவும் ”
மேலை நாடுகளிலிருந்தோ வேறு வேறு புலங்களிலிருந்தோ இறக்குமதியான எவற்றிக்கும்
அடிமையாகாது,”"உயிர் இரக்கம் ,மனித நேயம் ,மனிதவள மேம்பாடு” என்பதை மட்டும் தமது
சிந்தனைக்கும் எழுத்துக்கும் மேல்வரிச் சட்டமாக அடிநாதமாக இலக்காக வைத்துக்கொண்டு வள்ளல் பெருமான் வாழ்ந்தார் இதற்காகவே பாடல்கள் ஆறாயிரம்,உபதேச உரைகள் ,திருமுகங்கள் ,உரைநடைகள் உருவாக்கினார். அவர் நல்ல நூலாசிரியர் ,உரையாசிரியர் ,பதிப்பாசிரியர் ,
இதழாசிரியர் ,போதகாசிரியர் ஆவார்.
அன்றைய நாட்டுநிலை:
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய ,ஆங்கில நாகரிகம் இந்தியாவைப்
பெருமளவில் தாக்கியிருந்தது மக்களின் அறியாமை ,வறுமை இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மதமாற்றம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது .இதனை முழுமையாக உணர்ந்ததால்தான்
“”வாயிலீரென இருக்கின்றீர் அல்லால் வாய்திறந்தொரு வார்த்தையும் சொல்லீர் ”
எனத் திருஅருட்பாப் பாடினார்
“”வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில்யான் ஒருவன்” என்பதை ஏற்றுக்கொண்டாலும் சமுதாய மாற்றம் தேவை என்பதற்கு ஓங்கித் தனிக்குரல் தமிழ்க்குரல் -மனிதக்குரல் கொடுத்தார் அவர் .
அவர் காலத்தில் இந்தியாவின் வடக்கு ,ஊனையும் உயிரையும் உருக்கக் கூடிய கொடிய பஞ்சத்தை அனுபவித்ததன் வேர் தமிழகத்திலும் பரவியதைக் கண்டார் வெறும் சோற்றுக்கு மக்கள் பட்டபாட்டினைக் கண்டு , “”நெருப்பிலே உருக்கும் நெய்போல” வருந்தி ,”"கஞ்சியாதிகளைப்பெற” மக்கள் நாள் முழுவதும் அலைந்து “”சிறிதும் உண்டிலேம் ” என வாய்விட்டு அரற்றி வாழ்ந்ததைக் கண்டு வருந்தினார்.
அப்பார்வையின் உருவாக்கத்தான் வடலூரில் 1867ல் “”சத்திய தருமச்சாலை ” எனப்பெயர்
பெற்ற “”அறக்கூழ்ச்சாலை ” தோற்றுவிக்கச் செய்தது. வள்ளல் பெருமானின் சமுதாயச் சிந்தனையில் தட்டிய முதற்பொறி பசிப்பிணி போக்குவதுதான்.
வடலூரில் அமைத்த சத்திய தருமச்சாலையில் சோறிடுவதால் உலகம் முழுமைக்கான
பசிக
்கொடுமை நீங்கிவிடுமென வள்ளலார் கருதவில்லை .இல்லந்தோறும் சத்திய தருமச்சாலைகள்
தோன்றிப் பசியே இல்லாத ஒரு புதிய சன்மார்க்கச் சமுதாயம் அமையவேண்டுமென்பதே
அவரது பெருவிருப்பு.
அன்புப்புரட்சி:
அவர் காலத்திய தேவை “அன்பு’தான் என்பதைப் பல வரிகளால் காட்டுவார்.
“”அன்பெனும் பிடியன் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரரு வாம்பர சிவமே”
எனும் பாடல் வழி அன்பெனும் இறைத் தத்துவத்திற்குள் மனிதக் கூட்டமே அடக்கம் என்பதைத்
தெளிவாக காட்டுவார்.
சாதி-சமய வேற்றுமை:
உயிர் வருத்தம் நீங்கி மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்,சாதி,குலம் ,சமயம் ,மதம் ,சாத்திரம் ,
கோத்திரம் ,ஆசாரம் இவை அனைத்தும் மனித சிந்தனைக்கும் ,செயற்பாட்டுக்கும் தடையாக உள்ளன. சாதிபேதமற்ற சன்மார்க்கச் சமுதாய படைப்பதில் கருத்துகளைச் சொல்லவும் செயல்படவும் தமக்குப் பின் வழித் தோன்றில்கள் பல உருவாகுவது போல எழுதினார்.
“”நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை
யாட்டு” என்றும் “”சாதியும் ,மதமும்,சமயமும் பொய் ”
என்றும் “”சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்
வேண்டும் ” என்றும்
“”கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”
என்றும் பல நிலைகளில் தமது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுவார் . சாதி ,சமய மதங்கடந்த
மனித ஒருமைப்பாட்டுப் பேரன்பு உலக முழுமைக்கும் வெளிப்பட வேண்டும் .
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார்க்கும் ,மாட்டார்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு சமுதாயம் எம்மதமோ எக்குலமோ ” என்ற சிந்தனைக்கு இடமில்லாத ,”"எப்பொருளும் எவ்வுயிரும் ,எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும்
சமனிலைச் சமுதாயம் :
நிலத்தை விளைவிப்பவர் ஒருவராகவும் அதன் பலனை அனுபவிப்பவர் மற்றவராகவும்
உள்ள நிலை மாறி ,நிலத்தை விளைத்தவனே அறுவடை செய்து பலனையும் அனுபவிக்கக் கூடியவனாக ஆகக் கூடிய சமுதாயம் பற்றி வள்ளலார் சிந்திக்கின்றார் ஒரு மாபெரும் மறுமலர்ச்சி உரிமை இயக்கமே இதனால் மலர்ந்தது எனலாம்
“”எளியவர் விளைத்த நிலமெலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன் புன்செய்க் களியுறும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சிபால் கேட்டுண்ட கடையேன்
தனியவர்க் குதவேன் விருப்பிலான் போலச் சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்”
என்ற வரிகள் வள்ளலாரின் சமனிலைச் சமுதாய உணர்வுக்குச் சான்றாக அமைகின்றன .
பொருள் ஒரு கூடத்தில் தேங்கிக் கிடக்கக்கூடாது;முடக்கவும் கூடாது ஏதாவது
காரணங்காட்டிக் கவர்ந்து கொள்ளவும் கூடாது தான் உழைக்காது அடுத்தவர் உழைத்துச் சேர்த்து
வைத்திருக்கக்கூடிய பொருளின் மீது எக்காரணங்கொண்டும் இச்சை வைக்கக்கூடாது எனவும்
வள்ளல் பெருமான் வலியுறுத்துகிறார்.
“”கூட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே காசிலே ஆசையில்
லாதவன்போல் பாட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
பகலெலாம் தவசிபோல் இருந்தேன் ”
தன்னுழைப்பை நம்பாமல் ,அடுத்தவர்களைச் சுரண்டித்தான் வாழவேண்டும் என்கிற அளவுக்குத்
தமிழக வளம் குறைந்துவிடவில்லை இடத்தவர்கள் வருத்தாது ,பன்னாடுகளில் கடன் பெறாது
பொருளைப் பெருக்கிக் கொள்ளத்தக்க வளம் தமிழ்நாட்டில் நிறைய உண்டு என்பதை வள்ளல்
பெருமான் வகுத்துக் காட்டுவர்.
“” நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற நிலம்உண்டு பலனும்உண்டு
நி��
�ிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம் உறும் உளம் உண்டு வளமும் உண்டு”
என்று பதிகத்தில் அவர் குறிப்பிடுவார்.
பணத்திலே சிறுதும் ஆசை தமக்கு இல்லையென்று அவர் ஒப்புக்கொண்டாலும் மற்றவர்கள்
வாழ்வு சிறக்கப் பணம் வேண்டும் என்பதையும் அவர் உணராமல் இல்லை .
“” ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக் காசும் பெறவிரிக்கும் கைகள்”
காசில்லாமையால் வாட்டம் கொண்ட மக்கள் நாளும் வருந்தி ஊர்விட்டுஊர் குடிபெயர்ந்தமையை அவர் காணத் தவறவில்லை
“”சோடில்லை மேல்வெள்ளைச் சொக்கா யில்லை நல்ல சோம னில்லை
பாடில்லை கையிற் பணமில்லை ” எனத் தம்மைப்பற்றிக்கூட ஓர் இடத்தில் வள்ளல்பெருமான் எழுதுவார். தாம் மேற்கொண்ட தருமச்சாலைப் பணி முடிக்கப் பணம் தேவையெனத் தம் நண்பர்களுக்குத் திருமுகங்கள் வழிக்கூடத் தெரிவித்திருக்கின்றார்.
கல்விக்கண்:
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கல்வி பொதுவாக்கப்பட வேண்டும் .சாகாக்கல்வி
பற்றி அறிய வேண்டும் சந்தைப் படிப்பில்லாத சொந்தப் படிப்பு வேண்டும்.
“”சதுர்மறை ஆகம் சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ ?” என வள்ளல்பெருமான் வினவுவார்.
முன் மனத்தகத்தே எழுகின்ற அய்யப்பாடுகளையெல்லாம் அகற்றி ,முழு இன்பம் தரத்தக்க
கல்வியை ஆண் ,பெண் அனைவரும் கற்க வேண்டும் .இவ்வாறு மனித நேயக் கல்வியை ,
மனிதனை மனிதனாக்கும் கல்வியைக் கற்றுத் தருவதற்காகவே சமரசவேத பாடசாலை ஒன்றை நிறுவ வள்ளல்பெருமான் எண்ணியிருந்தார்.
இக்கல்வி அன்னைமொழியாகிய தமிழ்மொழிவழிக் கற்பிக்கப்படுதல் இன்றியமையாதது இதனை 21.0.1897 ல் உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் திங்களிதழில்
“”தமிழ் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது ” என்னும் தலைப்பில் காட்டுவார்
சிந்திக்கும் ஆற்றலைத் தமிழ்மொழியே மிக எளிதாகத் தரத்தக்கதாகையால் தமிழ்மொழி வழியே கற்கலாம் .தாய்மொழியைப் புறக்கணிக்காத சமுதாயம் உயர்வடையும் அதேபோதில்
பிற மொழிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளும் சமுதாயமும் செழுமையடையும் என்பார்.
ஒளிவழிபாடு:
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதியினர் என்று ஒளி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதாகக் கூறுவார்.
“”ஓன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டும் ஆனால் உருவும்அலார் அருவும் அலார்
உருஅருவும் தமக்கோர் அன்றும் உளார் இன்றும் உளார் என்றுமுளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அருட்பெருஞ்சோ தியினார்”
என்று திருச்சிற்றம்பலத்துத் தெய்வமணிமாலையில் குறித்துக்காட்டுவார் ; திருவருளாம் பெருஞ்சோதி என்றும் அருட்சோதித் தெய்வம் என்றும் சொல்லிச் சன்மார்க்கச் சமுதாயம் அமையம் அமைய விரும்பும் தமது விருப்பத்தைத் தெரிவிப்பார்.
ஒளிவழிபாட்டை விளக்க அமைத்த “சத்திய ஞானசபை’ 25.1.1872 ல் நிறுவப்பட்டது சத்திய ஞானசபையை அனைவரும் காணும்படியாக அமைத்துப் பின்னர் ஒவ்வொருவர் உள்ளம்தான் திருச்சேர்ஒளிக்கோயில் சபையாக மாற வேண்டுமென்பதை வள்ளல் பெருமான் “”சத்திய ஞான சபையென்றுட் கண்டனன்” என்பார்.
பெண்ணின் பெருமை :
வள்ளல் பெருமான் விரும்பிய சமத்துவ சமரச சமுதாயம் உருவாக உலகின்
செம்பகுதி இனமாகிய பெண்கள் உரிமையோடு வாழவேண்டும். வள்ளல பெருமான் வாழ்ந்த காலம் இத்தகு சிந்தனைகூடத் தவறு என்று வாதிட்ட காலமாகும் .பெண்ணைத் தெய்வமென ஒருபுறம் போற்றினாலும் மற்றொருபுறம் இழிவெனக் கருதினர்.ஆணுக்குப் பெண் அடிமையாகத்தான் வாழவேண்டும் என்றனர் .இக் க
ருத்தில் வள்ளல் பெருமானுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும் ஒன்றுபட்டுக் கலந்திருக்கிறது.
“”பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி”
என்று அருட்பெருஞ்சோதி அகவலில் தெளிவுபடுத்தியுள்ளார் .பெண்ணின் மனமும் ஆணின் அறிவும் ஒன்றுபடும் போது உலகம் உயர்வடையுமென்பது அவரது கருத்து.
“”தெய்வம் தொழாஅள் ” என்னும் தேவர் குறளால் இதை அறிக என உரைநடையில் வள்ளல்
பெருமான் எழுதுவார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகளும் உறவுகளும் சமஅளவில் இருப்பதால் அவர்களைத் தாழ்வாக எண்ண வேண்டுவதில்லை “”மனைவியை இழந்த கணவன் வேறு கல்யாணப் பிரயத்தனம் செய்ய வேண்டா” என்றும், “”புருஷன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா” என்றும் கூறுவார் வள்ளல் பெருமானின் புதிய புரட்சிச் சிந்தனை சமுதாய உயர்வுக்கு ஊற்றாக அமையும்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!