Tuesday, June 18, 2013

ஈழநாட்டின் தமிழ்

முன்னுரை

ஈழநாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிபற்றிய நூலொன்றினை எழுதுதல்வேண்டும் என்ற எண்ணம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளின்முன் எனக்கு உண்டாயிற்று. தென்னிந்தியாவில் எழுகின்ற - நூல்களுள்ளே பெரும் பாலானவை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளுக்கும் உரிய இடமளிக்காமை நெடுங்காலமாக என் மனத்தே உறுத்திக் கொண்டிருந்தது. ஈழத்து அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்திலிருந்து தொடங்கி எடுத்துப் பேசியியும் எழுதியுங் கொண்டுவர, எனது மனமோ அவர்கள் குறித்துங் காலத்துக்கு முற்பட்டதொரு கால எல்லைக்குச் சென்று உலாவிக்கொண்டிருந்தது. எனது கருத்தின்படி ஈழநாடு பண்டைத் தமிழகத்தின் புறத்தே கிடந்ததொரு நாடு அன்று: தமி•ழ மரபுரைகள் குறிக்கும் முதற்சங்க காலத்துக்கும் முற்பட்ட பழம்பெரு நாடு அது என்பதே யான் கண்டுகொண்ட உண்மையாகும். முதற்சங்க காலத்துக்கு முன்னும் ஈழநாடு இருந்த சுவடு தெரிகின்றது. பழந்தமிழ் நூல்களும் சாசனங்களும் அந்தச் சுவட்டினைத் தெளிவாகக் காட்டுகின்றன. "உண்மையில் தமிழரின் மூலத் தாயகப் பகுதி என்ற பெயருக்குத் துணைக்கண்டப் பகதியைவிட மிகப் பழமை வாய்ந்த உரிமையுடையது இலங்கையேயாகும்". எனப் பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரைப்பிள்ளை அவர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தருகின்றார்கள்.

இங்ஙனமாகப் பழமைவாய்ந்த ஈழநாட்டின் இலக்கிய வளர்ச்சியினை ஈழத்துப் பூதந்தேவனார் காலத்திலிருந்து தொடங்கி மடக்கிட எனது மனம் இயையவில்லை. எனவே, அக் காலத்துக்கு முந்தியவையான நிகழ்ச்சிகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் தமிழிலக்கியப் பரப்பிலும், கல்வெட்டுக்கள் பட்டயங்களிலும், பிறமொழி நூல்களிலும் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தேன். அவ் வாராய்ச்சியின் பயனாக பன்மொழிப் புலவர் திரு.கா. அப்பாத்துரைப் பிள்ளை அவர்கள் கூறுகூதுபோல், "தமிழ், தமிழன் தமிழகம் பற்றிய பல புத்தம் புதிய, முன் எங்கும் எவரும் கண்டறியாத, கேட்டறியாத - ஆனால், முன் விளங்காத பலவற்றை விளங்க வைக்க வைக்கிற-கருத்துக்களை"க் கண்டறிந்தேன்.

இலக்கிய வளர்ச்சி பற்றி எழுத எண்ணிய யான் என்னை யறியாமலே பழந்தமிழர் வரலாற்றாராய்ச்சியிலே புகுந்துவிட்டேன். அந்த நிலையில், எனது முதல் எண்ணம் உடனடியாக உருப்பெற்று வளரவில்லை. எனினும் காலத்துக்குக் காலம் கண்டுகொண்டவற்றை அவ்வவ் வேளைகளிலே குறித்துவைத்துக் கொண்டேன். அப்படியாக யான் குறித்து வைத்தவற்றைப் பின்னதாகப் பார்த்தபோது காவியம், நூற்பதிப்பு, இலக்கணம், உரைவகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளிலும் ஈழ நாடு சிறந்த பணி ஆற்றியிருப்பதைக் கண்டேன். எனவே, எவ்வத்துறைகளில் நிகழ்ந்த பணிகளையெல்லாம் ஆராய்ந்து தொகுத்து வந்தேன். அத் தொகுப்புப் பணி ஓரளவுக்கு நிறைவுபெரும் வேளையில், பிற நூலாசிரியர்கள் மேற்காட்டிய துறைகளைப்பற்றி எழுதியவற்றில் அத் துறைகளைப்பற்றி யாது குறிப்பிட்டுள்ளனர் என நோக்கலாம் எனக் கருதினேன். அறிஞர் பலர் எழுதிய நூல்களைப் பெற்றுப் படித்தும் பார்த்தேன். ஏமாற்றமே உண்டாயிற்று. இதுவரை இலக்கிய வளர்ச்சிபற்றி இடையிடை எழுத முற்பட்டோர்கூட முன் காட்டிய துறைகளில் ஒன்றினையேனும் எடுத்து வரன்முறையாக முழுதுறழ் வகையில் எழுத முற்பட்டோர்கூட முன் காட்டிய துறைகளில் ஒன்றினையேனும் எடுத்து வரன்முறையாக முழுதுறழ் வகையில் எழுத முயலவில்லை என்பது புலனாயிற்று. ஈழத்து இலக்கிய வரலாறு இங்ஙனமாகத் தேய்ந்தொடுங்கிக் கிடக்கும் நிலையிலிருக்கும் என யாம் நம்பவில்லை. ஈழத்திலிருந்து நூல்கள் எழுத முற்பட்டோரெல்லோரும் ஈழத்தின் இலக்கிய வரலாற்றைப் பார்க்கிலும்-ஈழமே தலைகாட்டாத-தென்னிந்தியத் தமிழ் வரலாற்றினையே நன்கு அறிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அறிஞர் பலர் தென்னிந்தியத் தமிழ் வளர்ச்சிபற்றிக் காலத்துக்குக் காலம் வெளியிட்ட நூல்களே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன். ஈழநாட்டில் யாராவது தெளிவுபெற ஆராய்ந்து எழுதியிருந்தால் அவற்றைப் பார்த்துப் படி செய்திருப்பார்கள். காரியம் இலகுவாய் முடிந்திருக்கும்.

ஈழநாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர்களின் வரலாறுகளே செம்மையான முறையில் இற்றைவரை எழுதப்படவில்லை என்பது யாம் அறிந்தது. இத் துறையில் முதன் முதலாக ஈழத்தில் அடிகோலியவர் சைமன் காசிச் செட்டி அவர்களாவர் "Tamil Plutarch" (1859) என்னும் புலவர் வரலாற்று நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் அவர். தென்னிந்தியாவில் வாழ்ந்த புலவர்களையே அவரும் கருத்துட் கொண்டிருந்தார். ஆணல் சதாசிவம் பிள்ளை அவர்கள் 1886ம் ஆண்டில் "பாவலர் சரித்திர தீபகம்" என்னும் நூலினை எழுதினார். ஈழநாட்டில் வாழ்ந்த புலவர்கள் பலரது வரலாற்றினைத் தெரிவிக்கும் நூல் அது. அதன்பின் "ஈழ மண்டலப் புலவர் சரித்திரம்" என்னும் நூலினை ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் 1914ம் ஆண்டின் எழுதி வெளியிட்டார். மகாவித்துவான் சி. கணேசையர் அவர்கள் எழுதிய "ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்" 1939ம் ஆண்டில் வெளிவந்தது. இங்குக் காட்டப்பட்ட வரலாற்று நூல்களைத் துணையாகக்கொண்டும் முழு நிறைவான இலக்கிய வளர்ச்சியினைத் துலக்கமாக அறிந்துகொள்ள முடியாது.

"தமிழ் இலக்கிய வரலாறு-சுருக்கம்" எனத் திரு.வி.செல்வநாயகம் (தமிழ் விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை) அவர்கள் 1951ம் ஆண்டில் ஒரு நூலினை வெளியிட்டார்கள். அந்த நூலிலும் புலவர் வரலாறுகள் உரிய வகையிற் கூளப்பட்டிருக்கவில்லை. பல்கலைக் கழகத்து நிலையே இப்படியிருக்கும்போது பிறரிடமிருந்து யாம் எதையாவது எதிர்பார்ப்பது தகாது எனக் கருதி வகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என வரும் துறைகளில் யானாகவே முயன்று செய்திகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் திரட்டத் தொடங்கினேன். அக் காலத்திலேதான் நாவல். சிறுகதை ஆகிய துறைகளில் ஈழ நாட்டினர் எவ்வெப் பணிகளைச் செய்துள்ளனர் என அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன். அவ் வேளையிலே, அத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய நிறைவான வரலாற்றினை எனக்குக் காட்டித் துணைபுரிந்தவர் சில்லையூர், திரு. செல்வராசன் அவர்களாவர்.

ஈழ நாட்டில் 1961ம் ஆண்டில் வெளிவந்துலவிய "மரகதம்" என்னும் திங்கள் இதழில் "ஓட்டிப் பிறவாத இரட்டையர்" எனற தலையங்கத்துடன் ஓர் அறிமுகம் "ராம்-ரகீம்" என்பரால் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிமுகத்தில், "சில்லாலை ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதைவிடப் பெரிய கிராமங்களும், ஏன் சிறு நகரங்களுங்கூடப் பெறாத விளம்பரத்தைப் பெற்ற அக் கிராம மக்கள் தம் கிராமத்தை ஈழமெங்கும் மட்டுமல்ல தமிழ் வழங்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்திய செல்வராசனைக் கௌரவிக்க வேண்டும். பொன்னாடை போர்த்தியும் மகிழ்விக்கலாம்." என்று கூறி, 'செல்வராசன் சுதந்திரன், வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் கடமையாற்றியுள்ளார். இவர் செய்யும் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், காற்றிலே பறக்கும் வானொலி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்விட அவருடைய கவிதைகளே அவருக்குச் சிறப்பைத் தேடித் தந்தன. "தான் தோன்றிக் கவிராய"ரான இவர் எழுதிய 'தலைவர்கள் வாழ்க மாதோ!" என்ற கவிதைத் தொடர் (தொடரில்வந்த எல்லாம் அல்ல) என்றும் நின்று வாழக் கூடியது. இலக்கிய வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் எழுத்தாளரான இவர் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளையும் விமர்சிக்கத் தயங்காதவர். இதனால் இவருக்குப் பூமாலைகளும், பாமாலைகளும் மட்டுமல்ல 'பொல்லடி" களும்கூடக் கிடைப்பதுண்டு" என நகைச்சுவை சார எழுதப்பட்டிருந்தவை என் மனதை கவர்ந்தன.

அக் கவர்ச்சி ஏற்பட்ட சில நாள்களின்பின், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான "புதுமை இலக்கியம்" படைத்தளித்த மாநாட்டு மலரில், "நாவல்" என்ற தலையங்கத்துடன் சில்லையூர், திரு.செல்வராசன் அவர்கள் எழுதிய கட்டுரையினைக் கண்டேன். அந்தக் கட்டுரையே இன்று "அருள் நிலையம்" போற்றி வெளியிடுவதாகும். இலங்கையில் எழுந்த நாவல்களை எடுத்தோதுவதுடன் ஒப்பு நோக்கிக் காணும் இவ்வரிய கட்டுரை நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கெல்லாம் மிகவும் பயன்படுதல் கூடும். எனக்கே பெரிதும் பயன்பட்டிருக்கிறது. எனவே, ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோர் நாவல்பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை என இனிக் கவலை கொல்ல வேண்டுவதில்லை; பார்த்தே எழுதிவிடலாம்.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்துக்கு முன்னதாக, ஈழ நாட்டிலே தமிழ் மொழியும் சைவ சமயமும் நாட்டின் பல பகுதிகளிலும் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. நாட்டிலுள்ள திருக்கேயில்களிளெல்லாம் கந்த புராணம் படித்துப் பயன் சொல்லப்பட்டு வந்தது. கந்த புராணப் பண்பாடே மக்கள் குருதியில் ஓடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணமே அக் காலத்தில் மொழி வளர்ச்சிக்கும் சமயவொழுக்கங்களுக்கும் ஊற்று நிலையமாய் விளங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணப் பண்பாடே கந்தபுராணப் பண்பாடாகவும் நிலவிய காலம் அது. அக் காலப் பகுதியிலே யாழ்ப்பாணத்துத் திண்ணைப் பள்ளிகளிலேயே கல்வி பயின்றவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று கல்வியும் பண்பாடும் பயிற்றி வந்தார்கள். சிங்கை யாரிய மன்னனின் முயற்சியால் யாழ்ப்பாணத்து நல்லூரில் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்ததென யாழ்ப்பான வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் யாத்தமைத்த நூல்கள் அம் மன்னனால் நிறுவப்பட்ட "சரசுவதி மகாலயம்" என்னும் நூல் நிலையத்தில் வைத்துப் பேணிக்காக்கப் பட்டனவாம். இம் மன்னனுக்குப் பின் பரராச சேகரன், செகராசசேகரன், அரசகேசரி ஆகியோர் புலவர்களாய் விளங்கித் தமிழ் வளர்த்தார்கள் என்பதையும் காண்கின்றோம்.

ஈழ நாட்டின் பண்பாடும் கல்வி நிலையும் இவ்வாறிருந்தபோதுதான் போர்த்துக்கேயர் ஈழநாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். எனவே, போர்த்துக்கேயர் வந்த காலத்தில் ஈழத்துத் தமிழ் மக்கள் கல்வி மணமின்றி அநாகரிகராயும் அஞ்ஞானிகளாயும் இருந்தார்கள் என்று கூறிவிடமுடியாது. போர்த்துக்கேயர் இங்கு வந்த காலத்தில் அவர்கள் தமது போர்களிற் கண்ணுங் கருத்துமாய் இருந்ததனாற் கல்வித் துறையில் அதிகமான பணிகளைப் புரிவதற்கு இயலாமற் போயிற்று. எனினும், தமது சமயத்தை நாட்டில் நிலை பெறச் செய்வதற்குக் கல்வித் துறையில் ஓரளவு சிந்தை செலுத்துதல் வேண்டுமென்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள்.

1561ம் ஆண்டு தொடக்கம் 1564ம் ஆண்டுவரை மன்னாரிலே தங்கியிருந்து சமயபோதனை செய்துகொண்டிருந்த ஒருவர் எண்டிரிக்குப் பாதிரியார் (Henry Heriquez) என்பார் தமிழ் மொழியினை நன்கு பயின்று சமயபோதனை நடாத்திவந்ததுடன், போர்த்துக்கேய மொழியில் பிளாக் கூசோர்கே என்பார் போர்த்துக்கேய மொழியில் எழுதிய "டொக்ரிறினா கிறிஸ்தம்" (Doctrina Christam) என்னும் நூலினையும் தமிழில் "தம்பிரான் வணக்கம்" என மொழி பெயர்த்து அச்சேற்றியிருப்பக் காண்கின்றோம். மன்னாரிலே தங்கியிருந்த காலத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை அங்கு நிறுவிக்கொள்ளவேண்டும் எனக் கதி உழைத்துவந்த எண்டிரிக்குப் பாதிரியார், தமிழ் அகராதி ஒன்றினையும் அர்ச்சியேஷ்டர்களின் வாழ்க்கை வரலாறு ஒன்றினையும் இயற்றி வெளியிருவதற்கு முய்ன்றுகொண்டிருந்தார் என்றும் அறியக் கிடக்கின்றது. மன்னாரில் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இவர் மொழிபெயர்த்த "தம்பிரான் வணக்கம்" 1578ம் ஆண்டிலே கொக்சியில் அச்சேற்றப்பட்டதாகக்கூறப்படுகின்றது. கொச்சியில் அம்பலக் காடு என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்த ஏசு சபை அச்சகத்திலேயே மரத்திற் செதுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு முதன் முதலாகத் தமிழ் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 1577ம் ஆண்டில் "கிறிஸ்தவ வேதோபதேசம்" (Flos sanctroum) என்னும் தமிழ் உரைநடை நூல் வெளியிடப்பட்டதாம். அம்பலக் காட்டில் அச்சிடப்பட்ட நூல்கள் இன்னாசி ஆச்சாமணி (Ignatius Aichamani) என்பார் உருவாக்கிய அச்செழுத்துக் கொண்டு அச்சிடப்பட்டனவாகும். புன்னைக்காயல் என்னும் ஊரில் ஜோ-த-வாரியா (John-de-Faria) என்பார் தாமாகவே வேறு அச்செழுத்துக்களை உருவாக்கினார். இங்ஙனமே கோவையிலும், கொல்லத்திலும், யாழ்ப்பாணத்திலும் தனித்தனியான எழுத்துக்கள் அச்சீட்டுக்காக உருவாக்கப்பட்டன.

"அச்சுக் கலை" என்னும் நூலினை இயற்றிய திரு.மா.சு.சம்பந்தன் அவர்கள் "19ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் தரங்கம் பாடியிலும் வேப்பேரியிலும் இருந்த மேற்சொன்ன அச்சகங்கள் முதலில் ஹாலியில் (1710) உண்டாக்கப்பட்ட சதுர நிலைக்குத்தான் அச்செழுத்துக்களையே (The square upright type-face) பயன்படுத்தி வந்தன. இதற்குப் பின் யாழ்ப்பாணத்தில் அமலில் இருந்ததை அடியொற்றி வட்டமானதும் சிறிது சரிந்த வடிவமுள்ளதுமான அச்சுக்களைப் (A more rounded and slightly sloping type0face) பயன்படுத்தினர். இவ்வகையான அச்சுக்களே 1862-ல் வின்ஸ்கோ தமிழ்-ஆங்கில அகராதி (Winslow's Tamil-English Dictionary) பதிப்பிக்கப்படும்வரை நிலைத்துநின்றன. இந்தப் பெருநூலுக்கு அமெரிக்க அச்சடிப்பாளரான திரு.பி.ஆர்.ஹண்டு (P.R. Hunt) என்பவர் புதிய தமிழ் எழுத்துக்களைப் 'பைசா' (Pica) 'லாங் பிரைமர்' (Long Primer) 'பிரிவியர்' (Brevier) எனப் பல்வேறு அளவுகளில் (விதங்களில்) உருவாக்கித் தந்தார். மேற்சொன்ன பல்வேறு அளவுக்குரிய எழுத்துக்களில் துளைபண்ணும் கருவிகள் அளவுக்குரிய எழுத்துக்களில் துளைபண்ணும் கருவிகள் (Punches) இந்தியத் தொழிற் கலைஞர்களாலேயே நெய்யப் பட்டன" என கூறுகின்றார்கள். எனவே, தென்னிந்தியாவில் தமிழ் அச்சீட்டு முறை உருவாகிய காலத்திலே ஈழநாட்டிலும் தனிப்பட்தான அச்சீட்டு முறையே "வின்ஸ்கோ" தமிழ்-ஆங்கில அகராதியை வெளியிடுவதற்கம் ஏற்றதென அக் காலத்திற் கருதப்பட்டதென்பதும் தெளிவாகின்றது. அதுவுமன்றி பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் 1732ம் ஆண்டில் இயற்றிய "சதுர் அசராதி" நான்கு தொகுகிளுங் கொண்டதாய் இறிச்சேட்டு கிளாக்கு என்னும் மேலை நாட்டவரின் ஆணைப்படி 1842-ம் ஆண்டிலேயே-யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியிடப்பட்டபின்-வெளியிடப்படவேண்டிவந்ததும் யாழ்ப்பாணத்து அச்சீட்டு முறை சிறப்புடையதாய் இருந்தமையாலேயே என்பதையும் யாம் உணர்ந்து கொள்ளலாம்.

எப்படிப் பார்ப்பினும், மேலைநாட்டவர் வருகையினால் தென்னிந்தியாவிலும் ஈழ நாட்டிலும் ஏறக்குறைய ஓரே காலப் பகுதியில் துரிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றங்களுள் ஒன்றுதான்இதுவரை எடுத்துக் கூறப்பட்ட அச்சுப் பொறியின் வருகையாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போர்த்துகேயர் முதுலில் வந்தார்கள். வாணிகத்தின் பொருட்டு வந்தார்கள். வந்தவர்கள் தங்களுடன் தாங்கள் பற்றியொழுகும் கிறிஸ்து சமயத்தினையும் பரவச் செய்வதற்காகப் பாதிரிமாரையும் அழைத்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே கிற்த்து சமயத்தைப் பரப்புவதிலும் மக்களைச் சமயம் மாறச் செய்வதிலும் தனி ஊக்கங்கொண்டு உழைத்தார்கள். அவர்கள் அங்ஙனம் மத மாற்றம் செய்வதற்கு இந்தியாவிலும் இலங்கையிலும் வழங்கிய மொழிகளைப் பயிலவேண்டியவர். மதம் மாறிய மக்களுக்கெனப் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. அம் மக்கள் படித்தறிவதற்காக நாட்டு மொழிகளில் உரை நடையில் நூல்கள் பழவறிறை எழுதினார்கள்; அச்சேற்றியும் வெளியிட்டார்கள் 19ம் நூற்றாண்டுக்கு முன்னதாக நிறுவப்பட்ட அச்சங்கங்கள் கிறிஸ்தவப் பாதிரிமாராலும் ஆங்கிலேயே வணிகக் குழுவினராலுமே நிறுவப்பட்டிருந்தன. அக்காலத்திலெல்லாம் அவர்கள் பெரும்பாலும் கிறித்தவ நூல்களை மட்டு•ம அச்சிட்டுப் பரப்பினார்கள். அவர்களைப் பேலவே இசுலாமிய சமயத்தவரும் தமது சயம நூல்களைச் சிறப்பாக தமிழ் மொழியில்-உரைநடையில்-வெளியிடத் தொடங்கினார்கள். அதன்பின் இலக்கிய படிமுறை வளர்ச்சியின் பயனாக தமிழ்மொழியிற் சிறுகதையும் நாவலும் உருவாயின என்பது சிலர் கொள்கை. அவர்கள் கருத்தின்படி 19ம் நூற்றாண்டுக்கு ; நாவலுமே இல்லை. இந்தக் கருத்து முற்றிலும் பொருந்தாது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார், "ஓர் உண்மையை வற்புறுத்துவதாய், மூன்று நான்கு பாத்திரங்களைக் கொண்டி தாய், ஒன்று அல்லது இரண்டு நிகழிடங்களை யுடையதாய், குறுகிய கால அளவு நிகழ்ச்சியுடையதாய் எழுதப்பெறும் கதையே சிறுகதை என்று மேனாட்டு அறிஞர் கூளுகின்றனர்" எனக் கூறி, "ஒரு சிறுகதை நம் மனதில் தங்கவேண்டுமாயின் அதனில் அதனில் இரண்டு சிறப்புக்களில் ஒன்றேனும் இடம் பெற்றிருத்தல் வேண்டும் ; சிறு கதையில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறல் வேண்டும் ; அல்லது அதில் வரும் பாத்திரம் நாம் மதித்துவரும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்," என விளக்கி, "இத்தகைய சிறு கதைகள் பல பண்டைத் தமிழில் பாங்குற அமைந்துள்ளன. கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கொங்குவேள் என்பவர் உதயணன் வரலாற்றைப் பெருங்கதை என்னும் பெயரில் பாடியுள்ளார். 'பெருங்கதை' என்னும் இப் பெயராலே தமிழில் 'சிறு கதை' நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்றோ? சங்க நூல்களை நன்கு ஆராய்யின், 'சங்க கால இலக்கியத்தில் சிறு கதைகள்' என்னும் அரிய நூல் ஒன்றை எழுதி முடிக்கலாம் என்பது திண்ணம்". என நிறுவுகின்றார்கள்.

"அகிலன்" அவர்களோ, "முதல் தமிழ் நாவல்" என்னும் தலையங்கத்துடன் தாம் எழுதிய கட்டுரையில் "சிலப்பதிகாரமே முதல் தமிழ் நாவல்" இலக்கணத்தையும், கதைக் கருவினையும் குறிக்கோளினையும் எடுத்துச் சிறப்பாக ஆராய்ந்து நிறுவுகின்றார்கள். "உரைநடையிட்ட செய்யுள் காப்பியத்திற்கும், இன்று செய்யுள் படிப்பவர்களால் 'இலக்கியம்' என்று ஒப்புக்கொள்ளப்படாத உரைநடைச் சித்திரத்திற்கும் இப்படி ஒப்புக்கொள்ளப்படாத உரைநடைச் சித்திரத்திற்கும் இப்படி ஒரு முடிச்சுப் போடலாமா? காரணம் இருக்கிறது. ஒப்புநோக்கக்கூடிய பொதுத்தன்மைகள் இரண்டிலும் நிறைந்திருக்கின்றனவே! இணைப்புக் கருவியாகிய தங்கச் சங்கிலியின் அமைப்பில் மட்டிலும் வேறுபாடு தெரிகிறது. அன்றைக்குச் செய்யுள் தமிழில் ஆட்சி செய்தது. இன்றைக்கு உரைநடையின் ஆட்சி. காலம் மாறியதால் கருவிதான் மாறியதே தவிர, கற்பனையில், மூலப் பொருளில், கட்டுக்கோப்பில், இலக்கண வரம்பில் என்னால் மாற்றம் காண முடியவில்லை." என்பது அவர்கள் அளிக்கும் விளக்கம். யானும் இக் கருத்துக்களைக் கொண்ட வகுப்பினரையே சார்ந்தவன். எனவே, தமிழ் மொழியில் முன்னதாகக் காணக்கிடைக்காத துறைகள் இவை என ஒதுக்கி வைக்க என் மனம் ஒருபோதும் இயையாது.

இனி, திரு.செல்வராசன் அவர்கள் 1879ம் ஆண்டு வெளியான வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் எனப் பொதுவாகக் குறிப்பிடுகின்றார்கள். ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் 1890ம் ஆண்டில் வெளியிடப்பட்டதும், திரு.எஸ் இன்னாச்சித்தம்பி அவர்களால் எழுதப்பட்டதுமான "ஊசோன் பாலந்தை கதை" என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்கள். "Orson and Valentine" என்னும் போர்த்துக்கேய நெடுங்கதையே இதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம் எனவும் கருதுகின்றார்கள். யான் அறிந்த வரையில் "ஊசோன் பாலந்தை கதை"க்கு முன்னதாக "காவலப்பன் கதை" என்ற மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனை "மூர்" என்பார் இயற்றியுள்ளார் "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என டாக்டர் போப்பெனட் (1909) தாம் தொகுத்த "அச்சிட்ட நூல்கள்" என்னும் நூலிற் காட்டியுள்ளார். அறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களும் தாம் தொகுத்த "தமிழ் இலக்கிய அகராதி" (1952) யிலும், "தமிழ் புலவர் அகராதி" (1960) யிலும் இதனைக்குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே தமிழில் முதலாவது நாவல் தோன்றியது எனச் சுட்டிக் குறிப்போர், "காவலப்பன் கதை"யினை எவ்வகையாலும் தள்ளிவிட முடியாது. "காவலப்பன் கதை"யே தமிழகத்தில்-ஈழத்தில்-முதன் முதலாகத் தோன்றிய நாவல் எனக் கொள்ளுதல் வேண்டும். திரு. செல்வராசன் அவர்கள் இதனை ஆராய்ந்து அடுத்துவரும் மதிப்பில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

சில்லையூர் செல்வராசன் அவர்கள் "சொந்தத் தொல்லைகள்" எனக் கூறி எளிதாகத் தப்பிக்கொள்ளும் கருத்தை மாற்றிக் கொண்டு, இனி எழுதுகோலை எடுத்து எங்களுக்கெல்லாம் பயன்படத்தக்க நூல்களை ஆக்கித் தருவார்கள் என நம்புகின்றோம். இந் நூலில், திரு செல்வராசன் அவர்களின் முயற்சியை மட்டுமன்று, மதித்திறத்தினையும் காண்கின்றோம். அவை கூடிக்வடி வரும் நூல்களை விரைவிற் காண்போமாக.

மு. கணபதிப்பிள்ளை.


பிள்ளையார் சுழி

தமிழ் எழுத்துலகில் 'பிள்ளையார் சுழி' போட்டு இருபத்திரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

பன்னிரண்டு வயதில் கவிதை முகிழ்த்தது.

1950-ஆம் ஆண்டு, நமக்குத் தொழில் எழுத்தாயிற்று.

பதினேழு ஆண்டுகள் 'இமைப் பொழுதும் சோராமல்' எழுதியாயிற்று. எழுதிதின் உருவக் கோலங்கள் எத்தனையோ அத்தனையிலும் வடித்த சிந்தனைகளும், உணர்வுகளம், மறுநாள் பாட்டி புளி சுற்றும் பத்திரிகையில், 'ஒரு நாள் அரசாங்கம்' செலுத்திக் கழிந்து போயின.

நித்திய ஆட்சித் தகுதி பெற்றவை அவற்றுட் பல என்பது நம் நம்பிக்கை. 'மழைக்கால இருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத' நிதான நுட்பம் வாய்ந்த தென்புலோலியூர், மு.கணபதிப்பிள்ளை ஐயாவுக்கும் அதே நம்பிக்கை. அவருடைய 'அருவினைக்கு ஆற்றாமல்' நமது முதலாம் நூலாக உருப்பெற்று வருகிறது 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி'.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962-ல் நடத்திய முதலாவது அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை யொட்டிப் பதிப்பித்த மலரில் வெளியானது இந் நெடும் கட்டுரை. முன்றாண்டுகளுக்கு மேலாக முயன்றுழைத்து, அதுவரை யாரும் முழுமையாக முயலாதிருந்த ஒரு துறையில் கால் வைத்து 'இருளில் கை வைத்துத் தேடிய பொருள்' இது. கையிருப்புக் கணக்கெடுப்பே தவிர, திறனாய்வன்று.

ஆயினும், கணிசமான கணக்கெடுப்பு அதனால் மதிப்புப் பெற்றது. பின்னாளில் பல திறனாய்வறிஞர்க்கும் கைம்முதலாயிற்று. இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த் துறைப் பயில்வுக்குத் துணைப் பாடப் பொருளாயிற்று. 'எழுத்து என்னும் தென்னகச் சஞ்சிகை இதனை மறுபிரசுரஞ் செய்தது.

இதனை விரிவு செய்தும் தெளிவு செய்தும், (Community) 'கம்யூனிட்டி' என்னும் ஆய்வுக் கழக ஆங்கிலச் சஞ்சிகையில் எழுத நேர்ந்த போதும், பின்னர் அவ்வாங்கிலப் படைப்பு "சம்ஸ்க்ருதிய" என்னும் தலையான சிங்களக் கலாமஞ்சரியில் சிங்கள மொழிபெயர்ப்பாக இடம் பெற்ற போதும், ஈழத்தில் வாழும் பிற இனத்தார் மத்தியிலும் இலங்கைத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய மதிப்பான மனப் பதிவு ஏற்பட்டது.

அந்த அளவில் மனத் திருப்தி. நூலாக இது வெளி வருவதால் தென்னகத்தும் இந்த மனப் பதிவு எற்படுமாயின் நம் மனத் திருப்தி மேலோங்கும்.

1962-ல் இது எழுதப்பட்ட பின்னர், தமிழ் நாவல் என்னும் ஏணியில் மேலும் பல நென்புகளில் ஏறிவிட்டார்கள் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள். அ.ந.கந்தசாமி, செ.கணேசலிங்கன், நந்தி போன்ற எழுத்து வல்லுநர்களும் பென்டிக்ற் பாலன் போன்ற வளர் சுடர்களும் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியின் புதுப் பொலிவுக்குக் கொடி காட்டியிருக்கிறார்கள். இந்த ஐந்தாண்டு வளர்ச்சியையும் கவனத்திற்கு எடுக்கலாம், 1962-ம் ஆண்டின் கணக்கெடுப்பை அட்சரம்கூட மாற்றாமல் அப்படியே இந் நூலாக வெளியிடுவதற்குச் சொந்தத் தொல்லைகள் சிலவே காரணம்.

புதிய வளர்ச்சியில் பின்னணியில், இந் நூலில் இடம் பெறும் சில கருத்துக்கள் பற்றி இப்போது நமக்கே உடன்பாடில்லை, ஆயினம், எழுதிய காலம் காட்டிப் பதிப்பிக்கும் இந்நூல், எழுதுங்கால் இருந்த மன முடிவு, மாற்றங் காணக் கூடாதென்ற நேர்மை நியதிபடி, மூலச் சிதைவின்றி முதற் கட்டுரையே இங்கு நூலாகிறது. அபிப்பிராயங்களைப்பொறுத்தளவில் இல்லாவிடினும் தகவல்களைப் பொறுத்தளவிலேனும், 1962-ம் ஆண்டுவரைக்கும், இந்நூல் நூறு சதவீதமும் சரி என்று கூடச் சொல்லலாம்.

நம்பால் மதிப்பும் நட்பும் உரிமையும் பாராட்டி, புகழ்ந்தும் உறவாடியும் கண்டித்தும் நம் தறி கெட்ட குணப் போக்கை ஒழுங்காகப் பாவோடச் செய்ய முயன்று வரும் 'திரு.மு.க.' அவர்களே இந்நூலுக்கு முன்னுரையும் வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கும், இதனை வெளியிடுவதில் சளைப்பின்றி ஊக்கங் காட்டிய 'அருள் நிலைய' உரிமையாளர்க்கும், 'மெச்சிடுமா றச்சழகு மிளிர்வித்த வினைஞர்க்கும்' மனம் கனிந்த நன்றி.


செல்வ மாளிகை

சில்லலை,
பண்டத்தரிப்பு

சில்லையூர் செல்வராசன்.

-----------------------------------------------------------------

பதிப்புரை


சில்லையூர் செல்வராசன் அவர்கள் ஞான சம்பந்ததரைப்போலச் சிறிய வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற காளை !

கவிபாடும் ஆற்றலோடு கட்டுரை, கதை முதலியவற்றை எழுதும் பேராற்றலும் இவருக்கு உண்டு என்பதை விளக்கும் பெருநூலாக இந் நூல் அமைந்துள்ளது.

இதனை வெளியிடும் நல்வாய்ப்பினை எங்களுக்கு நல்கிய செல்வக் கவிஞருக்கு எங்கள் நன்றி என்று உரியது.

நல்லவற்றைப் போற்றி வரவேற்கும் நற்றமிழி மக்கள் இந்நூலையும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுகின்றோம்.

இங்ஙனம்

அருள் நிலையத்தார்.

---------------------------------------------------------------------

காணிக்கை

"அட்டையின் காலும் அளவிட்ட அப்பன்" எனச்
செட்டாகவே தன் சிறப்பைக் கணித் தோதிக்
கட்டுமட்டாய் நான்சகல காரியமும் கையாண்டு
வெட்டொன்று துண்டிரண்டாய் வினைகள் இயற்றுதற்குப்

பாதை சமைத்தளித்த பாசக் கடலாம் என்
தாதைக்கும் கண்டிப்புத் தனத்தில் பிற காலே
பேதை மனத்துப் பிறக்கும் பெருங் கருணை
யாதரவும் சேர்ந்துறைதல் ஆவசியம் என்றுணர்த்தி

என்னை மனத்தால் இளகியனு மாக்கிய என்
அன்னைக்கும், கைமாறிளிக்க வழியறியாக்
சின்னவன் என்செய்வேன்? என்தினையைப் பனையாய்க்கொள்
அன்னார்க் கிந்நூலே என் அன்பின் உளக் காணிக்கை.

- சில்லையூர் செல்வராசன்.

------------------------------------------------------------------

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி


தோற்றுவாய்

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தையும், நாளதுவரையுள்ள அதன் வளர்ச்சியையும், முழுமையாக ஆராயும் தீவிரமான முயற்சி எதுவும், இது காலவரை நடைபெற்றதில்லை. இப்படிச் சொன்னால் எவராவது 'இலக்கிய சர்ச்சை' பண்ணுவதற்குப் பேனாவைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும், நானறிந்த வரையில் இப்படிச்சொல்வது சரியென்றே நினைக்கிறேன்.

இலங்கைத் தமிழ் நாவல்களை நமது விமரிசகர்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டார்களா என்ன? இல்லையில்லை; நான் அப்படிச் சொல்லவரவில்லை.

நமது நாட்டில் பிரசுரமான பழைய நூல்களை மிகுந்த சிரமமெடுத்துத் தேடிச் சேகரித்து வருகிறவர் வித்துவான் எப்.எக்ஸ்.சீ. நடராசா அவர்கள். அந்த நூல்களை பற்றிய குறிப்புகளை, தமக்கு வாய்க்கும் ஓரோர் சந்தர்ப்பங்களில் எழுதியும் வருகிறார். சில வருடங்களுக்கு முன் "ஈழமும் தமிழும்" என்னும் கைநூலை அவர் வெளியிட்டார் இலங்கைத் தமிழ் நூல்களின் சிறிய நாமாவலி அது. ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள் சிலவற்றின் பெயர் விபரங்களை அதில் கொடுத்திருக்கிறார்.

திரு. கனக - செந்திநாதன், சில வருடங்களின் முன், "ஈழத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்னும் கட்டுரைத் தொடரை, தினகரனில் எழுதினார். நாலைந்து இலங்கைத் தமிழ் நாவல்கள் பற்றி, அத்தொடர் கட்டுரையில் அங்குமிங்குமாகச் சில பந்திகளிற் குறிப்பிட்டிருக்கிறார். தவிரவும், "வீரசிங்கன் கதை", "விஜய சீலம்" ஆகிய இரண்டு நாவல்கள் பற்றி, வீரகேசரியில் தனித் தனியாக இரண்டு அறிமுகக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். கடைசியாக வெளிவந்த சமீபத்திய "ஈழகேசரி" மலரில் தான் எழுதிய ஒரு கட்டுரையில் "உலகம் பலவிதக்கதைகள்" உட்பட நான்கு நாவல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். "ஈழகேசரி"யில் தான் எழுதி வந்த "ஈழத்துப் பேனா மன்னர்கள்" என்னும் அறிமுகக் கட்டுரை வரிசையில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சிற்சில நாவல்களின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்.

பண்டிதர் கா.பொ. இரத்தினர் "இலங்கையில் இன்பத் தமிழ்" என்னும் நூலை எழுதினார். அதில் ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி ஒரு பந்தி காணப்படுகிறது. "மோனாங்கி" என்ற ஒரே ஒரு நாவலைக் குறிப்பிடுகிறார். அந்த நாவலின் ஆசிரியரோ திரிகோணமலையைச் சேர்ந்த சரவணமுத்துப் பிள்ளை, பண்டிதரோ, "யாழ்ப்பாணத்தறிஞா சரவண பிள்ளை" என்று அவர் பெயரைக் குறித்ததோடு, விஷயத்தை முடித்து விட்டார். சமீபத்தில் தாம் வெளியிட்ட "நூற்றாண்டுகளில் தமிழ்" என்னும் நூலில், இந்தப் பெயர்த்தவறைத் திருத்தியதற்குமேல், வேறு நாவல் நூல்களைக் குறிப்பிடவுமில்லை அவர்.

"தமிழ் இலக்கிய வரலாறு" என்பது இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் வி.செல்வ நாயகம் அவர்கள் எழுதிய நூல். "ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரமும், திரிகோணமலைச் சரவணப் பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பதும் ஆங்கிலத்திலுள்ள உலகியற் கதைகளாகிய நாவல்களைத் தழுவித் தமிழிலெழுதப்பட்ட நூல்களாகும்" என்று, இந்த நூலில் ஒரு வசனம் எழுதியிருக்கிறார். இவ்வளவோடு சரி.

சில வருடங்களின் முன், "விரகேசரி"யில் "தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் கட்டுரைத் தொடரை எழுதிய க. கைலாசபதி, இடைக்காடரின் நாவல்களை மாத்திரம் பிரஸ்தாபித்திருக்கிறார்.

பழம் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் நாவல் முயற்சிகள்பற்றி, கலாநிதி சு. வித்தியானந்தன், 'தமிழ்த்தென்றல்' என்னும் தமது நூலில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம்.

"ஈழகேசரி"யில் 'இளவரசு' என்பவர் (சி.செல்லத்துரை) வெளியிட்ட "தமிழ் வளர்க்கும் செல்வர்கள்" என்றும் எழுத்தாளர் அறிமுகக் கட்டுரை வரிசையில், இரண்டொரு நாவல்களின் பெயர்கள் வருவது ஞாபகத்துக்குரியது.

"வளருந் தமிழ்" என்னும் தமது நூலில் "மோகனாங்கி" என்னும் ஈழத்து நாவல்பற்றியும் குறிப்பிட்ட சோம. லெ.செட்டியார் அவர்கள், "வீரசிங்கன்" என்னும் நாவலையும் பிரஸ்தாபித்திருப்பதை நன்றியுடன் குறிப்பிடுவது பொருந்தும்.

கொழும்பில் இயங்கி வந்த ஒரு எழுத்தாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில், ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய ஒரு தொகுப்புரையை, இக்கட்டுரையாசிரியர் நிகழ்த்தியிருக்கிறார். தினகரனில் தான் எழுதி வந்த 'காரசாரம்' என்ற பத்தியில், இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றி ஒரு தடவை எழுதியிருக்கிறார்.

ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே!

மேற்குறித்த எவர் மீதும் குறைகாணும் நோக்கம் எனக்கில்லை. உண்மையில் இந்த அளவிலாவது இத்துறையில் அவர்கள் செய்திருக்கும் சேவை, பாராட்டவேண்டிய நல்ல சேவையே. ஆனாலும் என்னுடைய இந்த நூலின் தன்மை பற்றி எவராவது குறை கண்டால், இவ்வாறு நுல் அமைவதற்குக் காரணம் யாது என்பதைத் தற்பாதுகாப்பாகச் சொல்லிக் கொள்ளவே முன் சொன்ன தகவல்களைக் குறிப்பிடுகிறேன்.

மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சில உண்மைகள் பெறப்படுகின்றன. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தனித்துறையாக எடுத்துக் கொண்டு, அதை முழுமையாக ஆராயும் தீவிரமான முயற்சியை இற்றைவரை எவரும் மேற்கொள்ளவில்லை விரும்புகிற ஒருவருக்குக்கூட, இத்துறையில் கைமுதலாக இருப்பது, முன் குறித்தோரின் மேலாழ்ந்த வாரியான குறிப்புகள் மாத்திரமே.

'ஈழத்துத் தமிழ் நாவல்' போன்ற ஒரு துறை பற்றி முழுமையாக ஆராய்வதானால், விரிவான பல வேறு துறைகளையும் அதனோடு ஒப்புநோக்கி ஆராயவேண்டியிருக்கும். அடிப்படையில் சில வினாக்களைப்போட்டுக் கொண்டு அவற்றுக்கு விடை கண்டு ஆராய வேண்டியிருக்கும். ஈழத்தில் தமிழ் நாவல் பிறந்த போதிருந்த சமூக, கலாசார, அரசியல், பொருளாதார சூழல்களை முதலில் ஆராய்ந்து, நாவலின் தோற்றத்துக்கு அடிகோலிய அம்சங்கள் யாவையென்று நிதானிக்கவேண்டியிருக்கும். இந்த அம்சங்கள், இலங்கையின் சிங்கன இலக்கிய வட்டாரத்துக்கும் பொதுவான அமையுமானதால், இவை சமகாலத்துச் சிங்கள இலக்கியத்தை எவ்வாறு பாதித்தன என ஆராய்ந்து, சிங்கள நாவல்களின் தன்மையோடும் ஈழத்துத் தமிழ் நாவல்களை ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும். தென்னிந்தியாவில் தமிழ் நாவல்கள் இதே காலத்தில் தோன்றி வளர்ந்ததோரணையைக்கவனத்திற்கெடுத்துக் கொண்டு அவற்றுக்கும் இலங்கைத் தமிழ் நாவல்களுக்கும் உள்ள ஒப்புமை வேற்றுமைகளையும் பகுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். ஈழத்துத் தமிழ் நாவல் தோன்றிய நாள் தொட்டு, இற்றை வரை அது அடைந்துள்ள மாற்றம், வளர்ச்சி முதலியவற்றை, அரசியல், சமூக, கலாசார, பொருளாதார காரண காரியத் தொடர்பம்சங்களை முன்வைத்து, விமரிசிக்க வேண்டியிருக்கும்.

இத்துணை விரிவான காரியத்தை ஒரு சிறு நூலிற்செய்தல் சாலாது என்பது ஒரு புலமிருக்க மற்றொரு பிரச்சினை முதலிற் குறுக்கிடுகிறது.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!