Tuesday, June 18, 2013

தமிழ் நாவல்பற்றி

ஒரு நூறு வருடங்களுக்கு, அல்லது குறைந்த பட்சம் ஐம்பது வருஷங்களுக்காவது, கவிதை, கதை, நாடகம், நாவல் போன்ற இலக்கியத் துறைகளில், ஈழத்தில் சிருஷ்டிக்கப்பட்ட அத்தனை படைப்புகளினதும் சரியான, பூரணமான, தொடர்பான, காலக்கிரமமான கணக்கெடுப்பு நம் வசமில்லையே! கையிருப்புக் கணக்கே தெரியாமல், இலக்கியத் துறைகளின் பாரம் பரியத்தையும், மாற்றத்தையும், வளர்ச்சியையும், அவற்றின் மீது புற அம்சங்கள் பிரயோகித்த தாக்கத்தையும் செல்வாக்கையும், ஆராயமுனைவது, காற்றிலே கை வீசுகிற கதையாகவே முடியும். நமது விமரிசகர்களின் பார்வையில், ஆய்வு இல்லாமல் வெறும் அலசலே காணப்படுவதற்குக் காரணம், இதுதான். தற்போதைக்கு, ஈழத்து இலக்கியத் துறைகளின் பாரம்பரியம் பற்றி ஆழமாக ஆராய முடியாமல் அல்லற்பட்டும், செய்கிற அலசற் பார்வையைக் கூட, இடைவிட்டு, கெந்தற் பாய்ச்சலாகச் செய்தும், நம் விமரிசகர்கள் வெறுங்கை முழம்போட்டுக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், நம்முடைய கையிருப்புக் கணக்கே நமக்குத் தெரியாமலிருப்பதுதான்.

இந்த நிலையில், ஈழத்துத் தமிழ் நாவல்பற்றி முழுமையாக ஆராய்வதற்கு முன், நாவல்களைப் பொறுத்தவரையில் நம்முடைய கையிருப்புக் கணக்கென்ன என்று தெரிந்து கொள்வது, அத்தியாவசியமாகிறது. இந்த நூல், விஸ்தாரமான விமரிசனச் சார்பில்லாமல், ஒரு பட்டியற் றொகுப்பைப் போலத் தோன்றக் கூடுமானால், அதற்குக் காரணமும் இதுவே.

ஏறத்தாழ இந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையில் வெளிவந்த நாவல்கள் அனந்தம். நூலுருவில் வெளிவந்தவை அநேகமல்ல. பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொடராகப் பிரசுரமானவை. முதனூல்களாக வெளிவந்தவை போகஇ தழுவல் நாவல்களாகவும், மொழி பெயர்ப்பு நாவல்களாகவும், சில வெளியாகியுள்ளன.

மூன்று வருடங்களுக்கு மேலாக முழுமூச்சாகச் செய்த முயற்சியில், அநேகமாக இவையனைத்தின் விபரங்களையும், பெரும்பாலானவற்றின் பிரதிநிதிகளையும் தேடிச் சேகரிக்க முடிந்திருக்கிறதென்று நம்புகிறேன். விடுபட்டுப் போனவை சொற்பமாகவேயிருக்குமென்று நினைக்கிறேன். இந்த முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த பலரில் பிரதானமானவர்கள் இருவர். தாம் அரிதின் முயன்று தேடிப் பெற்ற பழைய நாவல்கள் பலவற்றையும், அவை பற்றிய தகவல்களையும், நானே சேகரித்துக் கொள்ளத் தகுந்த ஆலோசனைகள் கூறியும், பெருந்துணை புரிந்தார், வித்துவான் எப்.எக்ஸ்.சீ. நடராசா. பிற்கால நாவல்கள் பலவற்றைத் தானே சேகரித்துத் த்ந்ததோடு, இத்துறையில் சலியாது நான் ஈடுபடுமாறு தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் துணை நின்றார் நண்பர் பெ.ராமநாதன். இவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது.

ஈழத்துத் தமிழ் நாவல்பற்றி விரிவாகவும் முழுமையாகவும் ஆராய்வதற்கு முன்னோடியான ஒரு 'கையிருப்பு' நூலாகவே இதை எழுதுகிறேன். நூலுருவிலும் பத்திரிகைகளிலும் வெளியான ஈழத்துத் தமிழ் நாவல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய தகவல்களும் என் அபிப்பிராயக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஒரு தொகுப்புரை போலமையும் இந்தக்குறிப்புகள், இந்தத் துறை பற்றிப் பின்னர் விஸ்தாரமாக ஆராய முனையும் விமரிசன முறையான ஒரு தனி நூலுக்கோ, அல்லது கட்டுரைத் தொடருக்கோ, தாபரமாக அமையத்தக்கவாறிருந்தால், தற்போதைக்குப் போதுமானதென்று கருதுகிறேன்.


நாவலின் தோற்றத்தில் ஈழத்தின் இடம்

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றமும் நாளது வரையுள்ள அதன் வளர்ச்சியும், ஏறத்தாழ எழுபத்தைந்து வருட காலத்தைத் தழுவி நிற்பன. 1879-ம் ஆண்டு வெளியான வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான், தமிழ்மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட போதிலும், அதன் பிறகு 1893ம் வருஷத்தில் எழுதப்பட்ட ராஜமையரின் "கமலாம்பாள் சரித்திரம்" தான் முதலாவது தமிழ்நாவலென்று சொல்வாரும் இருக்கிறார்கள். "பிரதாப முதலியார் சரித்திரத்தை" ஒரு நாவல்என்று சொல்ல முதலியார் சரித்திரத்தை" ஒரு நாவல்என்று சொல்ல முடியாதென்பதும், நாவல் என்னும் பிரக்ஞையோடு, நாவலுக்கரிய இலட்சணங்களோடு, அது எழுதப்படவில்லை என்பதும், இவர்களின் வாதம். இந்தப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்ளாமல், "பிரதாப முதலியார் சரித்திரம்" முதலாவது தமிழ் நாவல் என்று நாம் கருதினால், அது வெளிவந்த பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் வெளி வந்து, தமிழ் மொழியில் வெளியான இரண்டாவது நாவல் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது என்று கொள்ளலாம். "கமலாம்பாள் சரித்திரம்"தான் முதலாவது தமிழ் நாவல் என்று நாம் நினைத்தால், அதற்கும் முன்பே வெளிவந்த ஈழத்தின் முதல் நாவலே, தமிழிலேயே முதலாவதாக வெளியான நாவல் என்று சொற்ப கர்வத்தோடு சொல்லி, நாம் பெருமைப்பட்டும் கொள்ளலாம்.


முதல் நாவல் எது?


நாம் பெருமை கொள்ளும்படியான முதலாவது ஈழத்துத் தமிழ் நாவல், 1891-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரசுரமான "ஊசோன் பாலந்தை கதை" என்னும் நாவலாகும். இந்த நாவலை எழுதியவர் திருகோண மலையைச் சேர்ந்த எஸ். இன்னாசித்தம்பி என்பவர்.

இந்த நாவலை முதலில் பதிப்பித்தவர் எஸ்.தம்பி முத்துப்பிள்ளை என்பவர். ('மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தினசிங்கம்', 'சந்திரகாசன்கதை' என்னும் பிற்கால நாவல்களைப் பதிப்பித்தவரும் இவரே.) முதற்பதிப்பில் "ஊசோன் பாலந்தை கதை" என்னும் நாவலின் ஆயிரத்து ஐந்நூறு பிரதிகள் பிரசுரமாயின. 1x8 கிறவுண் அளவில், சிறிய எழுத்தில் தொண்ணூற்றாறு ஐம்பது சத விலைக்கு வெளியாயிற்று. பிற்பாடு 1924-ம் ஆண்டில் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இப்பதிப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அச்சுவேலி ஞானப் பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சாயிற்று. வண.சா.ஞானப் பிரகாச சுவாமி இந்த இரண்டாம் பதிப்பைப் பரிசோதித்து வெளியிட்டார்.

"தமிழகத்திலும் சரி, ஈழ நாட்டிலுஞ் சரி, நாவல் எனப்படும் பெருங்கதையினை முதலில் எழுதியவர்கள் கிறிஸ்து சமயத்தைச் சார்ந்த தமிழர்களே" என்று ஞானப்பிரகாசர் ஒரு சமயம் கூறியமையும் இங்கு நினைவுக்கு வருகிறது. முதலாவது தமிழ் நாவலெனப் பொது நோக்கில் கொள்ளப்படும் "பிரதாப முதலியார் சரித்திரத்தை" எழுதிய வேதநாயகம் பிள்ளையைப் போலவே, ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை எழுதிய இன்னாசித்தம்பியும் கிறிஸ்து சமயத்தைச் சேர்ந்தவர். அந்நாளில் பிரசித்தி பெற்றிருந்த அந்தோனிக்குட்டி அண்ணாவியாரின் "கிறிஸ்து சமய கீர்த்தனைகள்" என்ற நூலை, தமது நாவல் வெளியான அதே 1891-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் பதிப்பித்து வெளியிட்ட இன்னாசித்தம்பி, தமது சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரென்பதை "ஊசோன் பாலந்தை கதை"யும் புலப்படுத்துகிறது.

"ஊசோன் பாலந்தை கதை" கிறிஸ்தவ பின்னணி கொண்ட கதை. கதை நிகழ் களமும் இலங்கையல்ல.

"உலகின் கண்னே உயர்வுற விளங்கும் அலுமான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கை போந்த பெற்றோரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறு வயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குக் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்."

கதை இவ்வாறு ஆரம்பமாகிறது. அலெக்சாந்தர் எம்பரதோருக்கும் தொன்வெலிச்சாந்தென்னும் ராஜகுமாரிக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை ஆகிய சசோதரர்களைப் பற்றியது கதை. கதையை விபரிக்க இது சமயமல்ல. ஆனாலும், "சந்தர்ப்ப பேதங்களால் வனத்தில் பிறந்து பெற்றோரைப் பிரிந்து தனித்துப் போன இச் சகோதரர்களில் ஊசோன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு பயங்கரக் காட்டுமனிதனாகி, மக்களைத் தொல்லைப்படுத்துவதும்; உண்மையறிந்த பின் அதற்காக வருந்தித் தவமிருந்து மரித்தலும்; இக் கதையில் அடங்கும்" என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

சற்றே அன்னியமான கதை போலிருக்கிறதே என்னும் உணர்வு ஏற்படுகிறதல்லவா? இன்னாசித் தம்பி, தமது கதை மொழி பெயர்ப்பென்றோ தழுவலென்றோ நூலில் எங்கேனும் குறிப்பிடவில்லை யென்றபோதிலும், இக்கதை பிற மொழி நூலொன்றை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆராய்ந்தளவில் "ஓர்சன் அன்ட் வலன்டைன்" (Orson and Velentine) என்னும் போர்த்துக்கேய நெடுங்கதையை ஆதாரமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. இருந்த போதிலும், கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும் கதையின் நிகழ்ச்சியோட்டங்களிலும், செறிவான முறையில் தமிழ்த் தன்மை'யைப் பெய்து, பெரும்பாலும் தமிழ் நாவலென்று தோற்றும்படியாக இந்நூலை ஆக்கியிருக்கிறார் இன்னாசித்தம்பி. நாவலென்ற வகையில், "ஓர் அற்புதமான நாவல் என்னும் கற்பனாகதை" என்ற அட்டைக் குறிப்பைத் தாங்கி வெளியாகியுள்ள இந்நூலின் தாரதம்மியங்களைக் காத்திரமான முறையில் ஆராய்வதென்றால், அது தனியான ஒரு கட்டுரையில் செய்ய வேண்டிய காரியமாயிருக்கும். தற்போதைக்கு, பொது நோக்கில் இது ஈழத்து முதலாவது தமிழ் நாவல் என்று குறித்துக்கொண்டு, பலரும் முதலாவது இலங்கைத் தமிழ் நாவல் என்று குறிப்பிடும் 'மோகனாங்கி' என்னும் நூலுக்கு வருவோம்.


யாழ்ப்பாணம் பின்தங்கியதேன்?

1895-ம் ஆண்டில் வெளியானது "மோகனாங்கி" என்னும் நாவல். இந்த நாவலை எழுதியவரும் திருகோணமலையைச் சேர்ந்தவரே. த. சரவணமுத்துப் பிள்ளை என்பவரே இவர். "தத்தை விடுதூது", "முத்துக்குமாரசாமி இரட்டை மணி மாலை" போன்ற வேறு பல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் அச்சிட்டுப் பிரசுரிக்கப்பட்ட "மோகனாங்கி" என்ற இந்த இரண்டாவது ஈழத்துத் தமிழ் நாவல், ஓரளவுக்கு சரித்திர சம்பந்தமுடைய கதை. சொக்கநாதன், மோகனாங்கி ஆகிய இரு காதலர்களுமே கதையின் நாயகனும் நாயகியும். இவர்களின் காதல் வாழ்வையும் குடும்ப வாழ்க்கையையும் சுற்றி வரும் இந்தக் கதையில் பாதிக்குப் பாதி இடம் பெற்றிருக்கும் அழகிய கவிதைகள், நாவல் என்ற உருவ இலட்சணத்தைக் குறைத்த போதிலும், சரவணமுத்துப்பிள்ளையின் கவித்திறனை அவை நன்கு வெளிப்படுத்துகின்றன. நூலாசிரியர் தன் நாவலில் எத்தகைய சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறாரென்பதற்கு இந்நூலில் வரும் கவிதைகளில் ஒன்றை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். விஜயராகவ நாயக்கர் தோத்திரமாக அமைகிறது இக்கவிதை :-

நீதி தவறத் தருமம் நிலை குலையச்
சாதி, குலம், பிறப்பென் றெண்ணித் தடுமாறும்
பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின்
சோதியே! நின்னைத் தொழுதேந் தொழுதேமால்!

"மோகனாங்கி" சில வருட காலத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றது. இதன் காரணமாக, இந்த நாவலின் சுருக்கம், பள்ளிக்கூடங்களில் பாட நூலாகப் படிப்பதற்காக, 1919-ம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது. இந்தச் சுருக்கப் பதிப்பை, சென்னை எம். ஆதி அன்ட் கம்பனியார் பிரசுரித்தனர். ஆனால், "மோகனாங்கி" என்றிருந்த நாவலின் பெயர் இந்தச் சுருக்கப் பதிப்பில் "சொக்கநாத நாயக்கர்" என்று மாற்றப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றத்துக்குக் காரணமாக இருந்தவர், சரவணமுத்துப்பிள்ளையின் சகோதரரான திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை என்று தெரிகிறது. கனகசுந்தரம்பிள்ளை என்று தெரிகிறது. கனகசுந்தரம் பிள்ளை பிறமொழிப் புலமையும் தமிழறிவும் மிகுந்தவர். பி.ஏ.பட்டதாரி. தமிழ் நாடு சென்று சென்னை பச்கையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் நிகழ்ந்தவர். கம்பராமாயணம் பாலகாண்டத்துக்கு அரும்பதவுரை செய்ததோடு, குமாரசாமிப் புலவருடன் கூடி நம்பியாகப் பொருளுக்கு உரை எழுதி வெளியிட்டவர். இலக்கியத்தில் நிரம்பிய ஈடுபாடு கொண்ட கனகசுந்தரம் பிள்ளை தமது சகோதரரின் இலக்கிய மயற்சிகளில் மிகுந்த செல்வாக்கைப் பிரயோகித்திருக்கிறாரென்பது "மோகனாங்கி" நாலிலும் வெளிப்படை. இந்நூலை ஆராய்ந்து படித்துவிட்டு, கனகசுந்தரம் பிள்ளை தெரிவித்த அபிப்பிராயத்திற் கிணங்கவே, சுருங்கப் பதிப்பில் நூலின் பெயர் "சொக்கநாத நாயக்கர்" என்று மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

ஆறுமுக நாவலரை ஆதீன புருஷராகக் கொண்டு அக்காலத்து இலக்கிய விழிப்புணர்ச்சிக்குக் கேந்திர ஸ்தானமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில், ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் பிறப்பதற்குரிய சூழல் உருவாகாமற் போனதற்குக் காரணம் என்ன என்பதும், முதலிரண்டு இலங்கைத் தமிழ் நாவல்களும் திருகோணமலையில் தோற்றியதற்கான காரணம் என்ன என்பதும். சமூக, சரித்திர, இலக்கிய ரீதியாக ஆராயப்படத்தக்க விஷயங்கள். தற்போதைக்கு அந்த விசாரத்தை ஒத்திவைத்து விட்டு, அடுத்த நாவல்கள் பற்றிய விபரங்களுக்கு வருவோம்.


கால நிர்ணயப் பிரச்சினைகள்

"மோகனாங்கி"க்குப் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவு வரையில் வேறு தமிழ் நாவலெதுவும் இலங்கையில் வெளி வந்ததாகக் தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்து வருடங்களில் வெளியான சில தமிழ் நாவல்களை வைத்துக்கொண்டு. அவற்றிற் காலத்தால் முந்தியவை எவை, பிந்தியவை எவை என்று நிர்ணயம் செய்து கொள்வதில் சங்கடமிருக்கிறது.

உதாரணமாக, ஈழத்தின் இரண்டாவது தமிழ் நாவலும் முதலாவது சரித்திர நாவலும் என்று திரு. கனக-செந்திநாதன் அபிப்பிராயப்படுகிற "வீர சிங்கன்" கதையை எடுத்துக் கொள்ளலாம். திரு.சி.வை. சின்னப்பிள்ளை எழுதிய "வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம்" என்னும் நாவல், 1905-ம் வருடம் பிரசுரமானது. ஆனால், அதற்கு முந்திய ஐந்து வருட காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நாவல்களாவது வெளியாகியிருக்கலாமென்று நம்பத் தூண்டும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தகவல்கள் சரியா தப்பா என்று நிச்சயித்துக் கொள்ளும்வரை, "வீரசிங்கன்" கதையை உறுதியாகக் கால நிர்ணயம் செய்துகொள்வது இலேசாக இருக்காது.

மட்டக்களப்பின் புகழ்போந்த தமிழறிஞராகத் திகழ்ந்து பல நூல்களியற்றிய சுவாமி சரவணமுத்து, "கலாமதி" என்னுமொரு நாவலையும் எழுதியதாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பின் முதல் நாவலான இந் நாவல், 1904-ம் ஆண்டில் வெளியானதாக, சில இலக்கியாபிமானிகள கருதுகிறார்கள். நம்பகமான, ஆதாரப்பூர்வமான தகவலை இது விஷயமாகத் திரட்டியாக வேண்டும். "ஊசோன் பாலந்தை கதை"யைப் பதிப்பித்த தம்பிமுத்துப்பிள்ளை பின்னர் பதிப்பித்த "இரத்தினசிங்கம்" "சந்திரகாசன் கதை" ஆகிய நாவல்களும் இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்து வருடம் என்ற காலப் பிரிவிற்கே உரியவை. ஆனால் அச்சொட்டாகப் பிரசுர வருடங்களை அடித்துச் சொல்ல முடியவில்லை. தம்பி முத்துப்பிள்ளை, சொந்தத்தில் தானும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் முந்தியது "அழகவல்லி", பிந்தியது "சுந்தரன் செய்த தந்திரம்". முந்தியது 1904-ம் ஆண்டிலும் பிந்தியது அதற்கடுத்த ஆண்டிலும் பிரசுரமாகியிருக்க வேண்டுமென்று நம்ப ஏதுக்கள் உள்ளன. இவை தவிர, "பரிமளா ராகவன்" என்னும் ஒரு நாவலும் இதே பத்து வருட காலப்பிரிவில் வெளிப்போந்தாகத் தெரிகிறது. எனவே கைவசமுள்ள இந்தக் தகவல்களையும், தேடிப்பெறும் ஆதாரங்களையும் வைத்து விரிவாக ஆராய்ந்த பிறகே, "வீரசிங்கன்" கதையின் கால நிர்ணயத்தை உறுதியானதென்று ஒப்புக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!