Tuesday, June 11, 2013

KA

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும்
முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும்
கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும்
எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும்
என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்..
கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக
கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும்
நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும்
சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம்
முதல்வெள்ளியின் தருணம் மகிழ்ச்சிக்கு மகத்தானது; தமிழின்
தீஞ்சுவை அறியத் தோதானது எனச் சொல்லி –
அதற்கான நன்றியை இன்றும் தமிழோசையை தாழாது தாங்கிநிற்கும்
என் நட்புறவுகளுக்கு நல்கி –
இந்தப் புதுவருடம் எல்லோருக்குமான நிறைவைத் தந்து
உயிர்கள் அனைத்திற்கும் நலத்தைச் சேர்க்கும் அரிய வருடமாய் அமைவதற்கான வாழ்த்தையும் வேண்டுதலையும் முன்வைத்து என் கவிதைக்குள் வருகிறேன்..
பணிவில் உயர்ந்து பண்பில் சிறந்து
தமிழதுசிறக்க கவிதையில் மணத்து
கண்கள் பணிக்கும் அன்பில் அணைத்து
மனசெல்லாம் முழு சகோதரத்துவத்தோடு நிறையும் –
கவியரங்கத் தலைமைக்கு –
ஐயா திரு. சாதிக்பாஷா அவர்களின் தமிழ்பற்றிற்குத் தலைவணங்கி –
எனது தலைப்பை முன்வைக்கிறேன் “இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்”
கோபம் நறுக்கி குழம்பு வையி; குணம் சேர்த்து
கூட்டு பண்ணு; கழுவுற தட்டுல மனசைக் காட்டு
தின்னுற சோத்துல அன்பை ஊத்தி, திண்ண திண்ண பறிமாறு
திகட்டாத – கோயில்’ வீடு!
கிள்ளி விளையாடு, துள்ளி ஓடி பாடு
அள்ள அள்ளக் குறையாத சந்தோசந் தேடு
கூடும் நிமிசம் ஒவ்வொன்னும் பேறு பேறு’
அட, குடும்பந்தானே வாழ ஜோரு!
குயில் கத்தும், காதில் குழந்தைச் சிரிக்கும்
மனசு அவளை நினைக்கும்; அவள்
மகனைத் தாங்கி’ மகளைத் தாங்கி’ உன்னைத் தாங்கி’
மனசெல்லாம் சுமப்பா, மார்கழிப்பூவா சிரிப்பா; அங்கே
இல்லறம் மணக்கும், நல்லறம் நாடெங்கும் பிறக்கும்!
விளக்கணைத்தாலும் வெளிச்சம் வரும், அவனின்
கால்பட்ட இடமெல்லாம் அவளுக்கு சூரியன் உதிக்கும்
பார்க்கும் பார்வையில் வாழ்க்கை வசப்படும்; நேசிக்கும் மனசுக்கு
அவனின் நகர்தல் எல்லாம் இனிக்கும்; அந்த நேசத்தைச்
சொல்லித் தரவே’ இல்லறத்தின் நாட்கள் தினம் விடியும்!
பேசாத மௌனத்தின் சப்தத்தை மனசிரண்டு கேட்கும்
அப்பா பிள்ளை அன்பில் காதல் தோற்கும், புதிதாக எடுத்த சட்டையில்
வியர்வை மணக்கும்; எழுதா பாசம் இதுவென்று ஒரு
முத்தம் சொல்லும், குத்தும் மீசையின் வலிபோல
தோல்விகளும் இன்பத்திற்கென்றே வலிக்கும்’
வெற்றியின் கதவை வீடு’ தானே திறந்துவைக்கும்!
கடன்வட்டி காற்று போல; சொந்தமும் வலிப்பதுண்டு
ஒரு சொல்லாலே மனசுவெந்து குடும்பமே எரிவதுண்டு’
சோறில்லாத சட்டியில தூக்கமும் தொலைவதுண்டு
நாலுபேருக்கு மத்தியில் கிழிந்த ஆடை காரிஉமிழ்வதுண்டு
கல்லு குத்தும் காலைப்பார்த்து பிய்ந்தசெருப்பும் சிரிப்பதுண்டு
நகைநாட்டு இல்லையேன்னு தாலிக்கயிரும் அழுவதுண்டு
கண்ணீர்த் துளிஊற; காலம் கைகட்டி நிற்காது மனமே
கசப்புமறக்கும் பொழுதுக்குள்ளே
வாழ்க்கை இனிக்கத்துவங்கும் மனமே..
நீர் முகரும் கயிற்றுமுனையில் தலைமாட்டி என்னாகும்?
பிடித்துநிறுத்த வழியுண்டு’ இல்லறத்தில் நல்லறம் சேரு
நல்லறத்தால் நாடு சிறக்க இல்லறங்களே இனிதாய் வாழு!!
வித்யாசாகர்

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!