Tuesday, June 18, 2013

யதார்த்த இலக்கியத்துக்குத் தகுந்த உதாரணம்

1951ம் ஆண்டு தொடக்கம் அவரது நாவல்களை முறையே நிரைப்படுத்தினால், "ஒரே அணைப்பு", "மீண்டும் வந்தாள்", "பைத்தியக்காரி", "பொற்கூண்டு", "கலாராணி", "மரணக் குரி", "காதலம்", "அழகு ரோஜா", "வண்ணக் குமரி", "காதல் உலகிலே", "பட்டினித் தோட்டம்", "நீதிபதி", "எதிர்பார்த்த இரவு", "மனிதனைப் பார்", "புயல் அடங்குமா?", "சொர்ககம் எங்கே?", "தென்றலும் புயலும்", "மனிதர்கள்", "மண்ணில் விளைந்தவர்கள்", "நீதியே நீ கேள்", "இங்கிருந்து எங்கே?" என்று இருபத்தொரு நாவல்கள் தேறுகின்றன.

நாவல்களின் தொகையாலும், காலத்தாலும் இளங்கீரனை இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் உரித்தாக்கினாலும், தரத்தால் அவர் இந்த ஆறு ஆண்டுகளில்தான் நாவல் துறையில் தன் ஆழமான முத்திரையைப் பதித்திருக்கிறாரென்று சொல்லவேண்டும். அவருடைய நாவல்களிரண்டும் தலைசிறந்த பிறமொழி நாவல்களுடனும் சமமாகத் தலைநிமிர்ந்து நிற்கும் தகுதி வாய்ந்தவை. நாவல் எழுதம் திறமையால் மாத்திரமே, தனக்கென்று இலங்கையில் மிகப் பெரும் வாசகர் கூட்டத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கிறவர் இவர்.

ஈழத்திலும், பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலும் வாழுகின்ற கிராம மக்களினதும், ஏழை எளியவர்களினதும் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கூர்ந்து நோக்கி, அனுபவ உணர்வோடு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்பபதற்கு மார்க்கங் காணும் முயற்சிகள் என்று, இளங்கீரனுடைய மிகப் பிந்திய நாவல்களை வர்ணிக்கலாம். யதார்த்த இலக்கியம், சோஷலிஸ யதார்த்த இலக்கியம் என்று நாளும் பொழுதும் மந்திரோச் சாடனம் நடைபெறுகிற இன்றைய ஈழத்து இலக்கிய உலகில், யதார்த்த இலக்கியங்களை எங்கே படைத்திருக்கிறீர்களென்று எவராபது கேட்டால், தைரியமாகத் தூக்கிக் காட்டுவதற்கு, நாவல்களைப் பொறுத்த வரையிலாவது, இளங்கீரனின் கதைகள் மாத்திரமே கதி.


கதாசிரியர்களின் கவனம் திரும்பியது

இலங்கையின் இன்றைய முன்னணிக் கதாசிரியர்கள் பலரும் நாவல் துறையில் தமது கவனத்தை அதிகம் திருப்பி, இந்த ஆறு வருடங்களில் சில நல்ல நாவல்களைப் படைத்தளித்திருக்கிறார்கள். சொக்கன், வ.அ.இராசரத்தினம், டானியல், சி.வீ. வேலுப்பிள்ளை, சிற்பி, உதயணன், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

சில வருஷங்களின் முன்னரே "மலர்ப்பலி" என்னும் நாவலை எழுதிப் பெற்ற அனுபவத்தின் சீர்மை தென்படுமாறு, 1961ல், தினகரனில், "செல்லும் வழி இருட்டு" என்ற தனது நாவலைத் தொடர்கதையாக எழுதினார் சொக்கன்.

வ.அ.இராசரத்தினத்தின் "கொழு கொழும்பு", 'ஈழகேசரி'யிலும், "துறைக்காரன்" 'ஈழநாட்டி'லும் தொடர்கதைகளாக வெளிவந்தன. "கொழு கொம்பு" பின்னர் நூலுருவில் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது.

சிறுகதைத் துறையில் சுமாரான வெற்றியைப் பெற்றிருக்கும் டானியல், "வீரகேசரி"யில் 1961ம் ஆண்டு எழுதிய "நெடுந் தூரம்" என்ற நாவல் அவருடைய சிறுகதை எழுதும் ஆற்றலைத்தான் மேலும் வலியுறுத்திக் காட்டியது.

சீ.வீ.வேலுப்பிள்ளை தினகரனில் மூன்று வருஷங்களின் முன்னும் "வீரகேசரி"யில் சில மாதங்களின் முன்னும் முறையே வெளியிட்ட "வாழ்வற்ற வாழ்வு", "வீடற்றவன்" ஆகிய நாவல்கள், மலை நாட்டு மக்களின் வாழ்கையை ஓரளவு சித்தரித்துக் காட்டின.

'கலைச் செல்வி'யில் அதன் ஆசிரியர் 'சிற்பி' "உனக்காக கண்ணே" என்ற நெடுங்கதையையும் "உதயணன்", "மனப்பாறை" என்ற நாவலையும் எழுதினர். உதயணனின் "இதய வானிலே" என்ற நாவல் ஒன்றும் 'ஈழதேவி' சஞ்சிகையில் வெளிவந்தது.


பொன்னுத்துரையின் 'தீ'

'பணியாரமில்லாத சலசலப்பிலும்' சமயா சமயங்களில் ஈடுபடுவதன் விளைவாக, 'பிரச்னையாளர்' என்று ஒரு 'பழிகரப்பான ஸ்துதி'க்கு இலக்காவிட்ட போதிலும், இலக்கியத் துறையிற் 'கை வைத்து' முன்னேறக் கூடிய சூரத்தனத்தின் சுவடுகளைத் தன் எழுத்துக்களிற் காட்டி வரும் எஸ். பொன்னுத்துரை எழுதிய 'தீ' என்னும் நாவல், இந்த வருஷத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. நூலுருவில் வெளியான ஈழத்து நாவல்களில் மிகச் சமீபத்திய நவீன நூல் இதுவே. பொன்னுத் துரையின் பல்வேறான திறமைகளையும் புலப்படுத்திக் காட்டுகிற இந்த நாவல், நாவலுக்கரிய உருவ அமைதிகள் நன்மையைப் பெறாத போதிலும், கதாவஸ்துவைப் பொறுத்தவரையில், தமிழுக்கு, ஒரு துணிச்சலான முயற்சியென்பதை மறுக்கமுடியாது. உடலுறவும் பிரச்னைகளைக் கருப் பொருளாகக் கொண்டெழுந்திருக்கும் இந்த நாவலில், பாலுணர்ச்சி விவகாரங்களைப் பச்சை பச்சையாக வர்ணிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்குப் பக்குவமானவை போலப் போக்குக் காட்டக்கூடிய அந்தஸ்தையும் கொடுத்து எழுதியிருக்கும் ஆசிரியரின் கொட்டித்தனத்தை ஒரு வகையல் மெச்சலாம். கதாசம்பவங்களின் ருசிப்பிசமான அம்சங்களின் அடி நாதமாக இழையோடு தனி மனித சோகத் தவிப்பிலும் உள்ளம் பற்றுமாறு, "தீ" அமைந்திருக்கிறதென்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.


ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்

பெயர் பெற்ற எட்டுச் சிறுகதையாசிரியர்கள் சேர்ந்து ஆளுக்கொரு அத்தியாயமாக, தினகரனில் "வண்ணமலர்" என்ற நாவலைச் தொடராக எழுதியமையும், இதேபோல ஐந்து சிறு கதையாசிரியர்கள் சேர்ந்து "வீரகேசரி"யில் "முத்தாப்பு" என்றநாவலைத் தொடராக எழுதியமையும், இந்தக் காலப் பிரிவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் "மத்தாப்பு" பின்னர் நூலாக வெளிவந்திருக்கிறது.

இவை தவிர, கச்சாயில் இரத்தினம் தினகரனில் எழுதிய "அலைகள்" என்ற நாவலும், "விவேகி"யில் எழுதிய 'வன்னியின் செல்வி' என்ற நாவலும், 'அன்பு எங்கே?' என்னும் ஒரு தொடர்கதை நாவலும், அருள் செல்வநாயகம் தினகரனில் எபதிய "மாலதியின் மனோரதம்" என்ற நாவலும் 1953ம் வருஷ ஹர்த்தாலைப் பின்னணியாக வைத்து "காண்டீபன்" என்பவர் "தேசாபிமானி"யில் எழுதிய தொடர் நவீனமும் இங்கு குறிப்பிட வேண்டியவை. (கச்சாயில் இரத்தினத்தின் "விடிவு நோக்கி" என்ற நாவல் இப்போது தொடர் கதையாக வந்துகொண்டிருக்கிறது.)

இவை தவிர, இந்தப் பன்னிரண்டு வருட காலத்தில் வேறு நெடுங்கதைகளும் வெளியாகின. நாவல்களென்று கருதி வெளியிடப்பட்ட போதிலும், குறைப் பிரசவங்களாகவும் சில்லறைக் கதைகளாகவும் அமைந்துவிட்ட இவற்றைப் பின்வருமாறு பட்டியல் போட்டு, விட்டு விடலாம்.

காயல்தாஹ’ர் எழுதிய "சிந்தித்துப் பார்".

மு.வே.பெ.சாமி எழுதிய "யார் கொலைகாரன்?".

புதுமைலோலன் எழுதிய "காணிவல் காதலி", "தாலி".

தா. சண்முகநாதன் எழுதிய "கோமதியின் கணவன்".

செ.சி. பரமேஸ்வரன் எழுதிய "கொந்தளிப்பு", "காதல் பைத்தியம்".

வியாசக விதரணம் எஸ். முத்தையா எழுதிய "நாகரிக நிர்மலா அல்லது மலைக் குறத்தி மக்ள்".

வீ.ஆ. புரட்சி மணி எழுதிய "ஈரக்கொலை".

பாத்திமா மொஹ’தீன் எழுதிய "நீறு பூத்த நெருப்பு".

ஹுசெய்ன் எழுதிய "பயங்கரக் கனவு".

தெல்லியூர் செ. நடராசா எழுதிய "காலேஜ் காதல்".


இறுவாய்

1981ல் தோன்றிய "ஊசோன் பாலந்தை கதை" முதல், இந்த வருஷம் வந்து சேர்ந்த "தீ" வரை, ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஏறத்தாழ அனைத்தையும் பற்றிப் புறனடையாகவே இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதன் தோற்றுவாயில், "ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே, என்று நான் குறிப்பிட்டவற்றை, முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டியதில்லை.

சுதந்திரனில் வெளிவந்த "அறிமுகப் படுத்துகிறோம்" என்ற பத்தி போன்ற சிறு முயற்சிகள் சிலவற்றிலும், ஆங்காங்கே இரண்டொரு இலங்கைத் தமிழ் நாவல்களின் பெயர்கள் வரத்தான் செய்திருக்கின்றன. இத்தகைய சில்லறைக் குறிப்புகளைத் தவிர, நமது நாட்டுத் தமிழ் நாவல்கள் பற்றிச் சற்று முனைப்போடு ஆராய முற்படும் குறிப்புகள் நமக்கு வழிகாட்டியாகக் கிடைப்பதாயில்லை யென்பதைத் தெரிந்துகொண்டால் சரி.

ஆக, முன் குறித்தபடி, இந்தக் கட்டுரை, ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிப் பின்னர் விரிவாக எவராயினும் ஆராய்வதற்குத் தூண்டுகோலாகவும், ஓரளவு ஊன்றுகோலாகவும் அமைந்திருந்தால், தற்போதைக்கு அது போதும்.


அனுபந்தம் I

[ஈழத்துத் தமிழ் நாவல்களின் நடை எவ்வாறு காலப் போக்கில் மாற்றம் பெற்று வந்ததென்பதை, இங்கு ஆங்காங்கே தேர்ந்தெடுத்துக் காட்டியிருக்கும் பல்வேறு நாவல்களில் வரும் வசனங்களின் செல்கதியிலிருந்து கண்டு கொள்ளலாம்.]


எஸ். இன்னாசித்தம்பி எழுதிய
'ஊசோன் பாலந்தை கதை'யிலிருந்து (1891)

உலகின் கண்ணே உயர்வுற விளங்கும் அது மான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கைபோந்த பெற்றோரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறுவயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குத் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.

மற்றொருபந்தி (1891)

நாம் மன்றல் செய்ய உங்களுக்கு விருப்பமானால் உங்கள் விருப்பத்தின்படி புத்தி விமரிசையுடையவளான ஓரணங்கைத்தேடி வாருங்களென்று பிரதிவாதித்தார். இந்த வாக்கையவர்கள் கேட்டவுடன் ஆதித்தனைக் கண்டலர்ந்த சரோருகம் போல் இருதயம் மலர்ந்து, மனோகரமாய்த் தங்களுக்குள் வினவிசி சருவேசுவரனைத் துதித்துச் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய ஆசார நமஸ்காரங்களையும் செய்து தங்கள் தங்க ளகத்துக் கேகினார்கள். அப்படியே அவர்கள் கூடிய வீரர்களில் அதிக சங்கை போந்தவர்களும் மிக சாமர்த்திய கெம்பீரமுள்ளவர்களுமான பன்னிரு தானாதிபதிகளைத் தெரிந்து அரசனுக்கிணங்கியது வாலிபப் பெண்களிருக்குமிடங்களிற்போய் விசாரித்து வாருங்களெனச் சொல்லி யனுப்பினார்கள்.


த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய

'மோகனாங்கி'யில் வரும் ஒரு பாடல் (1895)

நீதி தவறத் தருமம் நிலைகுலையச்
சாதிகுலம் பிறப்பென் றெண்ணித் தடுமாறும்
பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின்
சோதியே நின்னைத் தொழுதேம் தொழுதேமால்.

மா.சிவராமலிங்கம் பிள்ளை எழுதிய
'பூங்காவனம்' நூலிலிருந்து (1930)

1884-ம் வருடம் ஆடி மாதம் 24ம் தேதி புதன்கிழமை இரவு எழரை மணியளவில் வண்ணை மாநகரில் 1-ம் குறுக்குத் தெருவில் 82-ம் இலக்க வீட்டுக்குச் சுமார் கால்மைல் தூரத்தில் சுமார் பதினாறு வயசுடையவளும் பூரண சந்திரன் போன்ற முகத்தையும் சைவலத்தையும் யொத்த கூந்தலையும் மூன்றாம் பிறையையொத்த நுதலையும் கயல்மீன் போன்ற கண்களையும் வள்ளியிலை போன்ற காதுகளையும் பவளத் துண்டம் போன்ற அதரங்களையும் எட்பூவை நிகர்த்த நாசியையும் கண்ணாடி போன்ற கபோலங்களையும் வலம்புரிச் சங்கனைய கழுத்தையும் மூங்கில் போன்ற தோள்களையும் கரும்பையொத்த முன் கைகளையும் தாமரை மலரையொத்த அங்கைகளையும் செவ்விளநீர் போன்ற தனங்களையும் ஆவிலை போன்ற வயிற்றையும் உடுக்கை நிகர்த்த இடையையும் அலவனை நிகர்த்த காற்சிப்பிகளையும் இளவரால் போன்ற கணுக்கால்களையும் படம் போன்ற பாதங்களையும், வட்ட மதி போன்ற நகங்களையும் உடையவளுமான ஒரு பெண்மணி இட்டடி நோவ எடுத்தடி கொப்பளிக்க நடந்துவரும் போது, எதிர்முகமாகச் சிறிது தூரத்திற் சம்பாஷ’த்துக் கொண்டு வந்த இரு துஷ்ட வாலிபர்கள் அப்பெண்மணியைக் கண்டு மதுவருந்திய மயக்கத்தினால் அறிவு மயங்கித் தள்ளாடி அவ்விடம் வந்து அவளைத் தூக்கிக் கொண்டோடுதற்கு எத்தனித்தார்கள்.


நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் எழுதிய
'சாவித்திரி'யிலிருந்து (1914)

"இன்னடிசில் புக்களையும் தாமரைக் கைப் பூநாறும் செய்ய வாய் மக்களை"யில்லாத மனை என்ன மனை? மக்கட் செல்வம் இல்லாதார் செல்வம் என்ன செல்வம்? மக்கள் மெய் தீண்டி இன்பம் அடையாத யாக்கை என்ன யாக்கை? குறுகுறு நடக்கும் கோமக்கள் பால்வாய்ச் சிறு குதலை கேளாச் செவி என்ன செவி? இம்மையிலே இன்பத்தைத் தருவதும் மறுமையிலே சுவர்க்கத்தைத் தருவதும் மக்கட் பேறேயாகும். ஒருவன் சத்திய விரதம் உடையவனாயினுமென்? தானம் தவம் முதலிய நல்லொழுக்க முடையவனாயினுமென்? அவற்றால் அவன் பயன் அடைவதில்லை. மக்கட் பேற்றினாலன்றோ அவன் பெரும் பயனடைகிறான். கற்றவர்கள் சபைப்கு அலங்காரத்தைக் கொடுக்கின்றார்கள். சூரியன் ஆகாயத்தை அலங்கரிக்கின்றான். தாமரை வாவிக்கு அழகைக் கொடுக்கின்றது. அதுபோல மக்கட் செல்வமே இல் வாழ்க்கைக்கு அலங்காரமாயிருக்கின்றது.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!