Tuesday, June 18, 2013

'மறு மலர்ச்சிக்காலம்'

கன நாவல்கள் எழுதிய கசின்

ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் 'மறு மலர்ச்சிக்காலம்' என்றும் கடந்த முப்பது முப்பத்தைந்து வருட ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் 'பொற்காலம்' என்றும் குறித்த அந்தக் 'கால' விமர்சகர்கள் சிலர் ஆடம்பரமாகக் குறிப்பிட்டு அகமகிழ்ச்சியடைகிற 1940-ம் ஆண்டுத் தொடர் வருடங்களில், 'கசின்' என்கிற க.சிவகுருநாதன், கனக-செய்திநாதன், வரதர், சம்பந்தன், சுயா, ஜே.எஸ். ரவீந்திரா ஆகியோரின் பெயர்கள் நாவலாசிரியர்கள் என்ற வகையில் பளிச்சிடுகின்றன.

'கசின்' என்கிற சிவகுருநாதன், "சகடயோகம்", "இராசமணியும் சகோதரிகளும்" போன்ற சில நாவல்களை இந்தக் காலப் பிரிவிலும், "கற்பகம்", "சொந்தக்கால்" போன்ற சில நாவல்களைச் சமீப காலத்திலும் எழுதியிருக்கிறார். "ஈழகேசரியில்" தொடர் கதைகளாக வெளியிட்ட நாவல்கள் பெரும்பாலானவை. சாதாரணமான ஒரு சிறு கதைக் கருவை வைத்துக் கொண்டு, 'காக்கை உட்காரப் பனம் பழம் விழுகிற' சம்பவங்களை இடைச் செருகலாக்கி, நடுத்தரக் குடும்பங்களையும், கிராமத்துப் பாத்திரங்களையும் பிற்களத்து உபயோகித்து, ஓசைப்படாமல் வாசித்து முடிக்கக் கூடிய நாவல்களை, பரபரப்பில்லாமல் எழுதி முடித்துவிடுவதில் இவர் சமர்த்தர். இவருடைய நாவல்களில் சுளிப்பான அசமந்த நகைச் சுவை பின்னணியில் இழையோடிச் செல்லும்.


மறுமலர்ச்சிக் குழுவினர் எழுதியவை

ஈழம் பெருமைப்படக்கூடிய சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கனக-செந்திநாதன், "விதியின்கை", "வெறும்பானை" ஆகிய இரண்டு நெடுங் கதைகளை எழுதியிருக்கிறார். நம்முடைய பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைப் பகைப்புலத்தில் வைத்து நாம் எழுதவேண்டுமென்று, அறிவறிந்து இலக்கியம் சமைக்கும் செந்திநாதன், கஷ்டப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைக்கூட, கலை அழகு குன்றாமல் சமத்காரமாகக் கதையாக எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த நெடுங்கதைகள் உதாரணம். "உபகுப்தன்" வெளிவந்த "விதியின் கை"யளவுக்கு, "வெறும்பானை"யை நாவலியல்புச் சிறப்புடையதென்று தூக்கிச் செல்ல முடியவில்லையென்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

வரதர், 'மறுமலர்ச்சியில் "வென்று விட்டாயடிரத்னா" என்னும் நாவலை எழுதினார். அவர் பிற்காலத்தில் எழுதிய "வாழ்க நீ சங்கிலி மன்ன" என்னும் நூலும் ஒரு நாவலே என்று சிலரால் கருதப்படுகிற போதிலும் விமரிசன நோக்கில் பார்த்தால் அப்படிக்கருத முடியாதென்றே தோன்றுகிறது.

இலங்கைச் 'சிறுகதைத் திரு மூலர்களில்' ஒருவரென்க் கருதப்படும் சம்பந்தன் இதே காலப் பிரிவில் ஈழகேசரியில் 'பாசம்' என்னும் தொடர் கதையை எழுதினார். சாருகாசினி, சாரதா என்னுமிரு பள்ளி மாணவிகளையும் அவர்களின் ஆசிரியர் நாராயணனையும் சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் சுவையான கதை அது.

தினகரனில் 'சுயா' தொடர் கதையாக எழுதிய "ரவீந்திரன்" என்னும் நாவலும் இதே காலப் பிரிவில் வெளியானதே. இதே காலப் பகுதியில்தான் 'ராமப்பிரேமன்' எழுதிய "ஆப்பக்காரி"யும் தினகரனில் தொடா கதையாகப் பிரசுரமாயிற்று.


நடேசையர், பண்டிதமணி நாவல்கள்

1940-ம் ஆண்டுத் தொடரின் இறுதிப் பாகத்தில் வெளிவந்த "காதல் உள்ளம்" என்னும் நாவல் ஜே.எஸ். ரவீந்திரா என்பவரால் எழுதப்பட்டது. வாசகரை வசப்படுத்தக் கூடிய லளிதமான நடையும், மென்மையான உணர்ச்சிகளின் சலனமும், உள்ளத்தை உருக்கக்கூடிய காதலுறவுப் பிரச்சினைச் சம்பவங்களும் மின்னுகிற இந்த நாவல், 'அகிலன்', 'விந்தன்', 'மாயாவி' ஆகிய மூவரையும் ஒட்டுப் போட்டு உருவாக்கிய ஒருவர் எழுதிய நாவல் போலத் தோற்றமளிக்கிறது.

1940-ம் ஆண்டுத் தொடரில் வரும் இந்தத் தசவருடங்களில் வேறு சில நாவல்களும் வெளியாகின. மலைநாட்டுத் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்த நடேசையர், தாம் ஆசிரியராகப் பணி புரிந்த "சுதந்திரன்" பத்திரிகையில் ஒன்றிரண்டு நாவல்களை எழுதினார் பண்டித மணி சி. கணபதிப் பிள்ளையின் முடிவு பெறாத காலப் பிரிவில்தான். துர்கனீவின் நாவலொன்றை "முதற்காதல்" என்னும் பெயரில் 'இலங்கையர் கோன்' மொழி பெயர்க்க, 1942இல் அது நூலாகப் பிரசுரமாயிற்று. ஆர்.எல். டீவன்சனின் "ட்றெஷர் ஜலன்ட்", "மணி பல்லவம்" என்னும் பெயரில் யாழ்ப்பாணத்துத் தேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டு 1949இல் நூல்கவடிவம் பெற்றது. தேவனின் "வாடிய மலர்கள்" எழுதப்பட்டதும் ஏறத்தாழ இதே காலப் பிரிவில்தான்.


சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்

1950-ம் ஆண்டு தொடக்கம் 1962-ம் ஆண்டு வரையுமுள்ள பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்துப் பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவும் நூல் வடிவிலும் வெளி வந்த நாவல்கள் பலதரப்பட்ட இலக்கிய வட்டாரங்களோடு தொடர்பு கொண்டவை. தரமான எழுத்தாளர்கள் மாத்திரமன்றி, ஒழுங்காக வசனம் எழுதத்தெரியாத பலரும் கூட நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நாவல்கள் எழுதுவதற்கென்று தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொள்ளாதவர்களும் கூட, நாவல் இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்த பொறுப்புணர்ச்சியுள்ள எழுத்தாளர்களோடு போட்டி போட்டுக் கொண்டு புற்றீசல்களாக நூல்களைப் பெருக்கிய இந்தக் காலத்தில், வெளியான நெடுங்கதைகளோ அனந்தம். இவற்றில் எவற்றையும் தராதரம் பார்த்து ஒதுக்காமல்,அனைத்தையும் தட்டடிப்பார்த்துத் தகவலறிந்து கொள்வது, கையிருப்பை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அவசியமாயிருக்கலாம். ஆயினம் ஒரு சாதாரண வாசகன் கூட நாவல் என்று கருதாமல் தள்ளிவிடக்கூடிய 'சில்லறைக் கதைகளை', இந்த அஸ்திவாரச் சிறுநூலில் முதலாய்ச் சேர்த்து கொள்ள வேண்டியதில்லையென்றே தோன்றுகிறது. ஆகவே, இந்தப் பன்னிரண்டு வருடங்களில் வெளியான 'சில்லறைக் கதைகளை' ஆராய்வதை நீக்கி, புறம்புபடுத்தி வைத்துக்கொண்டு, ஏனைய நாவல்களனைத்தையும் இங்கு கவனத்திற்கெடுத்துக்கொள்ளலாம்.


தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்

இந்தப் பன்னிரண்டு வருஷங்களின் முதற்பாதியில், நாவலாசிரியர்கள் என்னும் வகையில் ஓரளவு பிரகாசித்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தேவன், கே.வி.எஸ்.வாஸ், அ.செ. முருகானந்தன், வே.தில்லைநாதன், கலாநிதி, க. கணபதிப் பிள்ளை, வி.லோகநாதன், க.சச்சிதானந்தன், க.நாகப்பு, த. சண்முகசுந்தரம், சுலோசனா, ஈழத்து மாயாவி, நவல், எம்.ஏ. அப்பாஸ், டி.எம்.பீர்முகம்மது, சிதம்பரநாத பாவலர், இராஜ அரியரத்தினர் ஆகியோர் என்று சொல்லலாம்.

"தேவன் - யாழ்ப்பாணம்", ஈழகேசரியில், தான் தொடர்கதையாக எழுதி வந்த "கேட்டதும் நடந்தது•ம" என்னும் நாவலை, பின்னர் நூல் வடிவில் வெயியிட்டார். கண், காது என்று இரண்டு பிரிவுகளோடு, மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்டது என்ற பாவனையில் ஓரளவு கவனத்தைப் பெற்றது இந்த நாவல்.

இலங்கையோடு தன் வாழ்கையைப் பின்னிக்கொண்டுவிட்ட கே.வி.எஸ். வாஸ், சுமார் பத்து நாவல்களை எழுதியிருக்கிறார். 'அறுபது டன் ரஷ்ய டாங்கி' என்று கல்கியாற் புகழப்பட்ட இந்த அசுரவேக எழுத்தாளரின் நாவல்களும் தீவிரகதியில் செல்லுகிற மர்ம நாவல் வகையைச் சேர்ந்தவை. 'ஆரணி'யையும் 'வடுவூராரை'யும் அடியொற்றியும், சரித்திரக்கதை ரூபத்திலும் "குந்தளப் பிரோமா" நந்தினி (2 பாகங்கள்), "தாரிணி" "பத்மினி" (2 பாகங்கள்) "புஷ்ப மால", "ஜம்புலிங்கம்" "சாந்தினி" போன்ற நாவல்களை முதலிலும், "சிவந்திமலைச் சாரலிலேஞ, "ஈழத்தின் கதை" போன்ற இரண்டொரு நாவல்களைச் சமீபத்திலும் இவர் எழுதியிருந்தாலும், இவருடைய "மலைக்கன்னி", "உதய கன்னி" இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிறந்த, வலிமையான நாவல்கள். ரைடர் ஹக்கார்ட் எழுதிய "ஷ“" "தறிட்டர்ன் ஒவ்ஷ“" ஆகிய நாவல்களைப் படித்தவர்களுக்கும் கூட, அந்த மூலக்கதைகளையும் விடச் சுவைப்படக் கூடிய விதத்தில், இந்திய சரித்திரம் பற்றித் தான் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளையும் ஜனரஞ்சகமாக எழுதினார். "வீரகேசரி"யின் தற்போதைய ஆசிரியரான இவர் அந்தப் பத்திரிகையில் தன் நாவல்களில் ஒன்றிரண்டு தவிர ஏனைய அனைத்தையும் தொடர்கதைகளாக எழுதினார். தொடர்கதைகளாக வெளிவரும் நாவல்களுக்குத் தொகையான வாசகர்களைத் தன் காலத்தில் பெருக்கிக் கொடுத்த பெருமையையும் ஓரளவு இவரைச் சாரும்.

1950ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பக் கட்டத்தில் பிரசுரமான "புகையில் தெரிந்த முகம்", ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் பொற்சுடர் என்று பெருமைப் படக்கூடிய அ.செ. முருகானந்தனின் கைவண்ணத்தைக் குறித்துக் காட்டும் குறுநாவல். யாழ்ப்பாணத்து வண்டிற் சவாரியை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதைக் கருவே இந்தக் குறநாவலாக மறு பிறப்பெடுத்திருக்கிறதென்றாலும், ஈழத்து மண்ணில் ஆழமாக வேர் விட்டு நிற்கும் கதை அது. "யாத்திரை" என்ற மற்றொரு நல்ல குறுநாவலையும் "ஈழகேசரி"யில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார். 1957ல், "பீஷ்மன்" என்ற புனைபெயருடன் இதை எழுதினார்.

காரை தீவைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளை என்ற புகழ் பெற்ற தமிழாசானின் புதல்வரான அத்துவக்காத்து வே. தில்லைநாதன் " அனிச்ச மலரின் காதல்" என்ற குறுநாவலை 1953ல் வெளியிட்டார். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியராக முன்பு கடமையாற்றிய வாசனை தென்படக் கூடியவாறு ஒரு நல்லொழுக்கப் போதனை நாவலாக இதை அமைத்துவிட்ட இவர், முற்போக்கான சில கொள்கைகளையும் தன்னுடைய நாவலிற் புகுத்திக் காட்டுகிறார். கலாநிதி கணபதிப்பிள்ளையின் முன்னுரையுடன் வெளியானது இக் குறுநாவல்.


கலாநிதி கணபதிப்பிள்ளையின் கதைகள்

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு நாடகங்கள் பல எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞரும், வியாகரண 'விண்ணருமான' கலாநிதி கணபதிப்பிள்ளை, 1953ம், 1945ம் ஆண்டுகளில் முறையே "பூஞ்சோலை", "வாழ்க்கையின் வினோதங்கள்" ஆகிய நாவல்களை வெயிட்டார். ஜெர்மானிய எழுத்தாளர் தியடோர்ஸ்தம் எழுதிய "இமென்ஸே" என்னும் கதையின் தழுவல் "பூஞ்சோலை", "வாழ்க்கையின் வினோதங்கள்" என்ற நாவலும், பிறமொழிக் கதையைப் படித்த மன அருட்சியில் விளைந்ததுதான். ஆயினும், யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஒரு கணிப்பை வெளியிடும் சுவையான கதைகளாக இவை அமைந்திருக்கின்றன.


கலைமுதிர்ச்சி கொண்ட "லோகு"வின் நாவல்கள்

"வீரகேசரி"யின் வாரப்பதிப்பு ஆசிரியர் வி.லோகநாதனின் "பிரேமாஞ்சலி" என்ற நாவல், சரித்திரப் பின்னணியில், ஆத்மானுவப ரீதியான காதல் கடமை-தர்மம்-தத்துவம் யாவற்றையும், மனோசலன ரீதியில் உணர்ச்சிப் பின்னலாக்கிச் செல்கிறது. உள்ளத்தைச் சிறைப்படுத்தும் கலைமுதிர்ச்சி கொண்ட வசன நடையழகும், நமக்கே நடந்தது போன்ற ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திச் செல்லும் உத்தியும் 1956ல் வெளியான இந்த நாவலின் தனிச்சிறப்புகள். "அம்பிகாபதி" என்ற புனைபெயருடன் தற்போது "வீரகேசரி"யில் இவர் எழுதி வரும் "பாரிஸ்டர் சிற்றம்பலம்" என்ற நாவல் செல்லும் கதியில், இந்தச் சிறப்புக்கள் மேலும் வலிவு பெற்றிருப்பதைக் காணலாம்.

'பாட்டில் ஒரு வரியைத் தின்று களிப்பேன்' என்று உணர்ச்சி வெறியோடு கவிதை பாடும் க. சச்சிதானந்தனின் "அன்னபூரணி" என்ற நாவலும், க நாகப்புவின் "ஒன்றரை ரூபாய்" என்ற நாவலும் "ஏழையின் காதல்" என்ற பெயரில் வெளியான நாவலும், இப்பொழுது எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நல்ல நாவலாசிரியர் த. சண்முகசுந்தரம் 1954ல் சுதந்திரனின் தொடர்கதையாக எழுதி வந்த "ஆசை ஏணி" என்ற நாவலும், அதே பத்திரிகையில் 1953ல் "சுலோசனா" எழுதிய "வாடாமலர்", 1952ல் "மாயாவி"யால் எழுதப்பட்டுப் பிரசுரமான "ரஞ்சிதம்", நவல் எழுதிய "மிஸ்.மனோகரி," ஆகிய நாவல்களும்,குறித்த இந்தக் காலப் பிரிவில் வெளிவந்தவை.


மலைநாட்டுப் பேச்சுத் தமிழ் நாவல்

ஈழத்திற்கு வந்து சொற்ப காலமிருந்து "துரோகி", "கள்ளத்தோணி" முதலிய நாடக நூல்களை வெளியிட்டுப் பரபரப்பூட்டி, பிறகு இந்தியாவுக்குக் குடி பெயர்ந்து சென்ற எம்.ஏ. அப்பாஸ’ன் "இவளைப் பார்" "மூன்று பிரதேசங்கள", "ஒரே ரத்தம்" "சி.ஐ.டி. சிற்றம்பலம்", "சிங்களத் தீவின் மார்மம்" "யக்கடையாவின் மர்மம்" போன்றமர்ம நாவல்களும் இந்தக் காலகட்டத்தில் நூல்களாகவும் தொடர்கதைகளாகவும் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.

இந்தக் காலப் பிரிவில் பிரசுரமாகி வந்த 'நவஜ“வன்' பத்திரிகையில், சிதம்பரநாத பாவலர் தொடர்கதையாக எழுதிய நாவலையும், டி.எம்.பீர்முகம்மது ஹமீதா பானு என்ற புனைபெயருடன் நூல்களாக எழுதிய 'சதியில் சிக்கிய சலீமா', 'கங்காணி மகள்" குறுநாவல் என்ற வகையிற்கூடி குறைப் பிரசவமென்றாலும், மலைநாட்டுத் தமிழர்களின் பேச்சு வழக்குத் தமிழை அந்த நாவலில் பீர்முகம்மது கையாண்டிருப்பதுபோல வெற்றிகரமாக, வேறெவரும், வேறெந்த நூலிலும் கையாளவில்லை என்று சொல்லவேண்டும்.

இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி என்ற காலப் பிரிவிலே "தங்கப் பூச்சி" என்ற நாவலை இராஜ. அரியரத்தினம் எழுதினார். இந்தக் காலப்பிரிவில் நாவலாசிரியர்களாக ஓரளவு பிரகாசித்தவர்களென்று குறிப்பிட்ட இவர்கள் போக, வேறுபலரும் நெடுங்கதைகளை எபதியிருக்கிறார்கள். இவற்றில் சில மாத்திரமே குறிப்பிடத்தக்கவை.


குறிப்பிடிக்கூடிய வேறு சில நெடுங்கதைகள்

முல்க் ராஜ் ஆனந்தின் நாவலைத் தமிழாக்கி, "தீண்டாதான்" என்ற பெயரில் வெளியிட்டார் கே. கணேஷ்.

'பாணன்' என்ற சஞ்சிகையில் வெளிவந்தது ஒரு தொடர்கதை.

'சமூகத் தொண்டன்' பத்திரிகை ஆசிரியர் க.பே.முத்தையா தன்னுடைய பத்திரிகையில் "பண்டிறாளை" என்ற பெயரில் ஒரு நாவலைத் தொடர்ந்து எழுதினார்.

'கலைச் சுடர்' சஞ்சிகையில் 'சுதர்ஸன்' 'காதல் பலி' என்ற நாவலை எழுதி வந்தார்.

"சாந்தியி"யின் "மரணத்தின் வாயிலில்" என்ற நாவல், காதல் பற்றிய காண்டேகரின் இலக்கியக் கொள்கைக்குச் சவால் விடும் கதை என்று கட்டியம் கூறிக்கொண்டு 1955ம் ஆண்டில் 'சுதந்திரன்' பத்திரிகையில் சுமார் எட்டு மாதங்களாகத் தொடர்கதையாகப் பிரசுரமாயிற்று.

"காற்றில் பறந்த கருங்காலிக் குதிரை" என்ற சரித்திர நாவலை "இஸ்லாமிய தாரகை" என்ற பத்திரிகையில் எம். செயினுல் ஆப்தீன் என்பவர் தொடர் கதையாக எழுதினார்.

'சுரபி' பத்திரிகையில் "வீரமைந்தன்" என்ற மற்றொரு வரலாற்று நாவலும் சி. சண்முகத்தால் எழுதப்பட்டுத் தொடர்கதையாகப் பிரசுரமாகி வந்தது.

"தினகரனில்" வெள்ளிவீதியார் எழுதிய "சிங்கை ஆரியன்" 1953ல் வெளிவந்து கொண்டிருந்தது.

வே.க.ப. நாதன் தினகரனில் எழுதிய "கபட நாடகம்" இதே காலப் பிரிவைச் சேர்ந்தது.

இவையே குறிப்பிடக் கூடிய நாவல்கள்.


இளங்கீரன் சகாப்தம்

இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி போனால், எஞ்சியிருப்பது 1956 முதல் 1962 வரையுள்ள இந்த ஆறு வருட காலம். இந்தக் காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பூரண உருவமும் தாக்கமும், ஈழத்து நாவல் எந்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறது என்று சொல்வது தவறல்ல. உலகின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய தரமான நாவல்களுடனும் சமமாகத் தராசுத் தட்டில் நிற்கக் கூடிய இரண்டொரு நாவல்களாவது இந்த ஆறு வருட காலத்திற் பிறந்திருக்கின்றன என்று துணிந்து சொல்லலாம்.

இத்தனை துணிவோடு ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிச் சொல்ல வைக்கக்கூடிய சாதனையை நிறைவேற்றிய பெருமையின் பெரும் பங்கு, இலங்கையின் நாவல் இலக்கிய வானத்து விடிவெள்ளியாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இளங்கீரனைச் சாரும். 1950 முதல் இற்றை வரையுள்ள இந்தப் பன்னிரண்டு ருட காலத்திய ஈழத்துத் தமிழ் நாவல்களின வளர்ச்சி என்பதும் அநேகமாக இளங்கீரனுடைய வளர்ச்சிதான் என்று சொல்லவேண்டும். 1950ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்து வருகிற ஒவ்வொரு வருஷத்திலும் நாவல் எழுதும் சாதனையில் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறார் இளங்கீரன். வருஷத்துக்கு வருஷம் அவர் நாவல்களை எழுதிய காகிதங்களில் அவருடைய பேனா மென்மேலும் அழுத்தமாகப் பதிந்துகொண்டு நகர்ந்திருக்கிறது.

1951ல் அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்தார். பன்னிரெண்டு வருஷங் கழித்து இப்பொழுது திருப்பிப் பார்க்கிறபோது, வருஷத்துக்கு சுமார் இரண்டு நாவல்கள் தேறும்படியாக அவர் இருபதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதிவிட்டாரென்பது தெரிகிறது. ஆரம்பத்தில் அவர் நாவல்களில் காணப்படாத உருபச் சிறப்பு, பொருள் சிறப்பு, நடைச் சிறப்பு யாவும், 1956ம் ஆண்டுக்குப் பிற்பட்ட அவரது நாவல்களில் தலைகாட்டி, இந்த மூன்று நான்கு வருஷங்களில் பூரண முதிர்ச்சி பெற்றிருக்கின்றன.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!