Tuesday, June 18, 2013

நாவலின் வளர்ச்சியை நாடிய முதல்வர்

நாவலின் வளர்ச்சியை நாடிய முதல்வர்

ஈழத்துத் தமிழ் நாவலின் ஆரம்பகாலச் சரித்திரத்தில் தம்பி முத்துப்பிள்ளை முக்கியமான இடத்தைப் பெறுகிறாரென்பதில் ஐயமில்லை. ஈழத்தின் முதலாவது நாவலையும், மற்றும் நான்கு நாவல்களையும் பதிப்பித்திருக்கிறார். தானும் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். நாவல் துறையில் விசேஷ கவனத்தை அந்தச் சமயத்தில் செலுத்திய முதல்வர் இவரென்பது வெளிப்படை. இவரெழுதிய நாவல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலமைந்தவை என்று கருதப்படுகிறது. நாடகவியல்புகளும் அம்சங்களும் இவரின் நாவல்களில் அமைந்தமைக்கு, இவர் ஒரு நாடக ஆசிரியரென்ற வகையில் அதிக திறமைபெற்றிருந்தது காரணமாக இருக்கலாம். பிரக்கியாதி பெற்ற பழைய சங்கிலி நாடகமும், எஸ்தாக்கியார் நாடகம் போன்ற வேறு சில நாடகங்களும் இவரால் யாக்கப்பட்டவையே.

ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் அடுத்த அத்தியாயம் 1916-ம் வருடத்தில் வருகிறது. "வீரசிங்கன்" கதையை எழுதிய சி.வை.சின்னப்பள்ளை, அந்த வருடத்தில் "விஜயசீலம்" என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். முதன் முதலாக அதிக நாவல்களை எழுதி, நாவல்களை அந்தக் காலத்தில் விரும்பிப் படிக்கும் ஒரு இலக்கிய உருவமாக ஆக்கித்தந்தவர் இவர் என்று சொல்வது தவறன்று. "உதிரபாசம்", "இரத்தின பவானி" ஆகிய மற்றிரண்டு நாவல்களையும் இவர் எழுதினார். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞராகவும் பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை, இவரின் தமையனாரென்பதைத் தெரிந்து கொண்டால், இவரது நாவல்களில், கதா பாத்திரங்களின் குணாகுண விசாரத்தைவிட, செந்தமிழ் நடை அதைக வலிவு பெற்று விளங்குவதற்கான ஒரு காரணமும், புலப்படலாம். 1910-ம் ஆண்டுக்கும் 1920-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஈழத்து நாவல் துறையில் தனிக்காட்டு ராஜாவாக இவர் திகழ்ந்தாரென்றும் குறிப்பிடலாம்.


நாவல் எழுதிய முதலாவது பெண்மணி


1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் குறைந்த பட்சம் ஒரு டசின் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பித்த மற்றொரு நாவலான "மேகவர்ணன்" வாசகர்க்குக் கிடைத்தது இந்தக் காலப் பிரிவில்தான். 1922-ம் ஆண்டில் பிரசுரமான இந்த நாவலின் ஆசிரியர் திரு.வே.வ. சிவப்பிரகாசம்.

இலங்கையின் முதலாவது தமிழ் நாவலாசிரியை தோன்றியதும் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட இந்தக் காலப் பிரிவில்தான். செ.செல்லம்மாள் என்னும் அம்மையார் எழுதிய "இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடுவதைத் தவிர, "இராசதுரை"யைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்வதற்கில்லை.


அந்தக் காலத்து வரதராசனார்

1925-ம் ஆண்டில் வெளிவந்த இடைக்காடரின் நாவல்களோடு, ஈழத்துநாவல்களில் அதுவரை இருந்துவந்த "முன்னொரு காலத்திலே, நாற்புறமும் கடலாற் சூழப்பட்டு, வளைந்தோடும் நதிகளும், வற்றாத ஏரிகளும், சோலைகளும் சாலைகளும் மலிந்து, குபேர புரியாய் விளங்கிய அலங்காரபுரி என்னும் தேசத்தில்" என்று கதாரம்பம் செய்கின்ற உபகதைப் பாணிவிடை பெற்று, கதாவஸ்துக்களுடன் கருத்தாழத்தையும் பின்னி நாவல் எழுகிற உத்தி உதயமாகிறது.

"நீலகண்டன்" (ஓர் சாதி வேளாளன்) என்னும் நாவலையும், இரண்டு பாகங்களைக் கொண்ட "சித்த குமாரன்" என்னும் நாவலையும் 1925-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார் இடைக்காடர்.

இடைக்காடல் உயர்தர பட்டதாரி. தன் காலத்தில் மேலைத் தேசத்துக் கல்வி ஞானங்களிலும், தத்துவங்களிலும் ஊறித் திளைத்த சிலரில் ஒருவராக விளங்கிய இரைடக்காடர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தன் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதிக்க வேண்டுமென்னும் இவருடைய கடமையுணர்ச்சி, இவர் நாவல் எழுதிய சந்தர்ப்பங்களிலும் இவரை விட்டுப் போகவில்லை. தர்க்கம், நியாயம், அர்த்தம், சித்தம், கணிதம், சீவம், தர்மம், சமயம், வியாகரணம் போன்ற பல்வேறு சாஸ்திரங்களையும் அலசியும் ஆராய்ந்தும் சம்பாஷ’க்கிற பாத்திரங்கள் இவரது நாவல்களில் சுற்றிவரும். மேனாட்டுத் தத்துவ வாதங்களிலும் பண்பாடுகளிலும் பரிச்சயம் கொண்டிருந்தும், அவற்றோடு மல்லுக்கட்டி, அவற்றை விடத் தமது தேசிய சிந்தனைகளும் பண்புகளும் சிறந்தவை என்று தருக்கமிட்டு, அவற்றைக் கட்டிக்காக்க விரும்புகிற இவரது முனைப்பை, இவர் எழுதிய நாவல்களில் பரக்கக் காணலாம். குத்துமதிப்பாகச் சொன்னால், இவர் அந்தக் காலத்து "வரதராசனாராக" விளங்கியிருக்கிறாரென்று சொல்லலாம். ஆனால் வரதராசனாரின் நாவல் துறைச் சாதனையை, இடைக்காடர், பல வருடங்களுக்கு முன்பே, சில மடங்கு செப்பமாகவே நிறைவேற்றி விட்டாரென்று சொல்ல வேண்டும்.

இடைக்காடரின் இலக்கிய முயற்சிகள் நடைபெற்ற இந்தக் காலப் பிரிவின் பிற் பகுதியிலேயே, கிறிஸ்தவ தர்மங்களைத் தாங்கி விவாதிக்கும் நாவல் ஒன்று வெளியிடப்பட்டதை, காரியார்த்தமான ஒரு சம்பவமாகக் கருத வேண்டும். சுதேச தத்துவச் சாயல் படர்ந்த இடைக்காடரின் நாவல்களுக்கு மாற்றமான தன்மைகளுடன், விதேச கிறிஸ்தவ மதத் தத்துவங்களைப் பிற்களத்தில் வைத்து, அவையே சிறந்தவை என வலியுறுத்தும் முகமாக எழுதப்பட்டது. "புனித சீலி" என்னும் நாவல். இந்த நாவல் ஞானச் சகோதரர் (ரெவரென்ட் பிறதர்) யோன்மேரி என்பரால் எழுதப்பட்டது. நாவல் என்பது நெடுங்கதை என்னும் ஒரு அர்த்தத்தை விசுவரூபமாகக் கண்டு, நான்கு பாகங்களாக எழுதி வெளியிடப்பட்டு, நீளத்தால் கல்கியின் மிக நீண்ட நாவல்களையும் விட அதிக பெருமை தேடிக் கொள்ளும் இந்த நாவலில், இலக்கண சுத்தமான யாழ்ப்பாணத் தமிழுடன், ஆங்காங்கே யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும் இடம் பெற்றிருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் முத்திரை கணிசமாகப் படியுமாறு, யாழ்ப்பாணத்துப் பிரதேச மொழி வழக்கை முதன் முதலாக நாவலில் ஓரளவு புகுத்திய புதுமையை இந்த நாவலின் ஒரு சிறப்பியல்பாகக் கொள்ளலாம்.

உயிர் வாழும் பழைய நாவலாசிரியர்கள்

சரளமான தமிழ் நடை, "புனித சீலி" வெளிவந்த அதே வருடமான1927-இல் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு நாவலில் மேலோங்கி நிற்கிறது. "சாம்பசிவம்-ஞானாமிர்தம், அல்லது நன்னெறிக் களஞ்சியம்" என்பது இந்த நாவலை எழுதினார். மலாயாவில் வேலை பார்த்து, ஓய்வு பெற்று வந்து, சொந்த ஊரான காரைத் தீவில் இளைப்பாறும் நாகலிங்கம், உயிருடனிருக்கும் பழைய நாவலாசிரியர்களில் ஒருவர். நாவலர் ரா.பி. சேதுப்பிள்ளையின் முகவுரையுடன் வெளியான இந்த நாவல், கரைத் தீவில் ஒரு கோயிற் கேணியைப் புதுப்பிப்பதற்கு நிதி சேர்ப்பதற்கென்றே எழுதப்பட்டதென்பது ஒரு ரசமான செய்தி. இந்த நூலின் பெயரே, இதன் சற்போதக குணாம்சங்களைத் தெளிவாக விளக்கி விடுகிறது. ஆனால் இந் நூலின் மூன்று நான்கு அணிந்துரைகளில், இலங்கைத் தமிழறிஞர்கள் சிலர், இக்கால இலக்கிய சர்ச்சைகளுக்குங்கூடப் பொருந்தக்கூடிய சில தரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். வரைதற் சித்திரங்களுடன் வெளிவந்த முதலாவது இலங்கைத் தமிழ் நாவலும் இதுவே.

நாகலிங்கம் போலவே இன்றும் உயிருடனிருக்கும் ஒருவரால் எழுதப்பட்டது, 1929ம் ஆண்டில் வெளியான "சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண் மணி" என்னும் நாவல். இதை எழுதிய சு.இராசம்மாள் என்னம் அம்மையார் இலங்கையின் இரண்டாவது தமிழ் நாவலாசிரியயை என்று சொல்லலாம். முடிவு என்ன என்னம் ஆவலைச் சிறிது தூண்டும் வகையில் அமைந்த ஒரு வித மர்ம நாவலாக இந்த நூல் விளங்குகிறது. (ஒரு நாவலோடு ஓய்வு பெற்று, தற்போது ஹெந்தலைப் பக்கத்தில் வாசம் செய்யும் இவர், மீண்டும் உற்சாகம் பெற்று தனது இரண்டாவது நாவலை எழுதி முடித்து, பிரசுரிக்க முயன்று வருகிறாரென்று தெரிகிறது).

1930ல் எழுதப்பட்டது மா. சிவராமலிங்கம் பிள்ளையின் "பூங்காவனம்" என்னும் நாவல். ஆசிரியர் இந்த நாவலைத் தொடர்ந்து விஸ்தரித்து வேறு பாகங்களோ பாகமோ வெளியிட உத்தேசித்தாரென்பது, இந்நூலில் முதலாம் பாகம் என்று போட்டிருக்கும் குறிப்பிலிருந்து தெரிகிறது. ஆனால் பிரசுரமானது என்னவோ சுமார் மூந்நூறு பக்கங்களைக் கொண்ட முதலாவது பாகம்தான். இலக்கியம் மக்களுக்குப் பயன்படு பொருளாக வேண்டுமென்று வலியுறுத்தும் முன்னுரையோடு வெளியாகியுள்ள இந்த நாவல் கொக்குவில் சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலையிலிருந்து பிரசுரமாயிற்று.

"உலகம் பலவிதக்" கதைகள்

இடைக்காடரின் நாவல்கள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய இதே பத்தாண்டுக் காலப் பிரிவில் நாவல் இலக்கியத்திற்கு வாசகர்களிடமும், ரசிகர்களிடமும், எழுத்தாளர்களிடமும் ரஞ்சகத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்னும் பிரக்ஞையோடு, ஓரளவு முனைப்பான சில முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த முனைப்பில்விளைந்த நல்முத்துக்கள் "உலகம் பலவிதம்" என்ற வரிசை நாவல்களின் ஆசிரியர், அந்தப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து வந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, முந்திய தலைமுறையில் புகழ்பெற்று மிளிர்ந்த உரையாசிரியர் ம.வேற்பிள்ளை என்னும் மட்டுவில் வேலுப்பிள்ளையின் மைந்தன் இவர். சமகாலத்தில் தமிழறிஞனாகத் திகழ்ந்த மகாலிங்க சிவத்தின் சகோதரர். தந்தை வேற்பிள்ளையிடமிருந்து பெற்ற தமிழறிவை மகாலிங்கசிவம் ஒரு விதத்திலும் பிரயோகித்து, பிரசாசித்தார்கள். நாடகாசிரியராகவும், உரைகாரராகவும மிளிர்ந்து பல நுல்களை எழுதிய திருஞானசம்பந்த பிள்ளை, "கோபால-நேசரத்தினர்", "காசிநாதன்-நேசமலர்" என்னும் இரண்டு நாவல்களிலும் தனக்கு முந்திய நாவாலாசிரியர்கள் கையாளாத உத்திகளைப் புகுத்தி, பிந்திய நாவலாசிரியர்களுக்கு அழுத்தமும் அர்த்தமும் பதிந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரென்று சொல்வது தவறன்று. தன்னுடைய இரு காதல் நாவல்களிலும் நகைச் சுவை ரசத்தை லாவகமாகப் பின்னியிருக்கிறார். இந்த நகைச் சுவை இடமறிந்து, கேலியும், கிண்டலும், குத்தலுமாகப் பல விவரணங்களைப் பெற்று நாவலுக்கு ஒரு அர்த்த புஷ்டியையும் அளிக்கிறது. கலை உருவம் கெடாதவாறு, நாவலை ஒரு சீர்திருத்த நோக்கத்துக்குப் பயன் படுத்தலாமென்று நாவலாசிரியர் உற்றறிந்த உள்ளுணர்வு, இந்த நாவல்களில் உறுதியோடு தொனிக்கிறது. இந்த நாவல்கள் 1920-ம் ஆண்டுத் தொடரின் பிற் பகுதியில் நூல்களாகப் பிரசுரமாயின.

1920-ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பவருடங்களில் "கமலாவதி" என்று ஒரு நாவல் வெளியாகியிருப்பதாகவும் தெரிகிறது. இந்நூல் ஆசிரியர் யாவரென்று நிச்சயித்துச் சொல்ல முடியவில்லை. அந்தக்காலத்தில் மானிப்பாய் தபால் நிலைய அதிபராக இருந்த சபாபதி என்னும் பெயர் கொண்ட ஒருவரே இந்த நாவல் ஆசிரியரென்று ஊகமான ஒரு தகவல் மாத்திரமே கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. 1930-ம் ஆண்டில் பிரசுரமான "தாமோதரன்" என்னும் நாவலையும் இந்தக் காலப் பிரிவில் சேர்க்க வேண்டும். வ.றெ. பாவிலுப்பிள்ளை என்பவர், இந்தச் சிறிய நாவலை எழுதினார்.

சமூக சீர்திருத்தம் கதா வஸ்துவானது

1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில், ஈழத்துத் தமிழ் நாவலில், சமூகப் பொதுவான பிரச்சினைகள் இடம் பெற ஆரம்பித்தமையும், இதனால் நாவல் இலக்கியம் புதிய வலிவைப் பெறத் தொடங்கியமையும், குறிப்பிடத் தக்கவை.

ஈழத்தின் முதலாவது முழுதான துப்பறியும் நாவல்கள் வெளியானதும் இந்தக் காலப் பிரிவில் தான். வரணியூர் ஏ.சி. இராசையா 1932-ம் வருடத்தில் "பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்" என்னும் நாவலையும் 1936-ம் வருடத்தில் "அருணோதயம் அல்லது சிம்மக் கொடி" என்னும் நாவலையும் எழுதி வெளியிட்டார். "ஈழகேசரி"யில் தொடர்கதையின் எழுதி வந்த இராசையாவின் இந்தத் துப்பறியும் நாவல்கள், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் நாவல்களையும்கூட அந்தக் குறிப்பிட்ட வகையான இலக்கியப் பிரிவில், தூக்கியடிக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லலாம்.

("கலாமதி" என்னும் நாவல் பற்றி நம்பகமான தகவல் கிடையாதவரை) மட்டக்களப்பில் நாவல் இலக்கியம் உருப்பெறத் தொடங்கியது 1934-ம் வருடத்தில் என்று தற்காலிகமாகக் கொள்ளலாம். அந்த வருஷத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும், சைவசமய ஈடுபாடு மிகுதியும் உள்ளவருமான வே. ஏரம்பமூர்த்தி "அரங்கநாயகி" என்னும் நாவலை வெயிட்டார். நிச்சயபூர்வமாகத் தெரிந்த வரையில், மட்டக்கடப்பிலிருந்து பிரசுரமான முதலாவது தமிழ் நாவலென்ற பெருமையைப் பெறும் "அரங்கநாயகி", 1919-20-இலங்கையெழுத்துப் பிரதியாகத்தயாராகிவிட்ட போதிலும் பிரசுரமானது 1934இல் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலத்தில் வீரதீரக் கதைகளை எழுதிப் புகழ்பெற்ற சர் வால்டர் ஸ்காட்டின் "கெனில்வேர்த்" என்னும் நாவலைத் தழுவி இந்த நாவல் தமிழில் எழுதப்பட்டது. தழுவல் உருவில்கூட, "அரங்கநாயகி", அதற்கு முன்பு வெளிவந்த பெரும்பாலான ஈழத்துத் தமிழ் நாவல்கள் போல, "நல்லொழுக்க உபதேச" நாவலாகவே பரிணமித்தது.

இந்தத் தழுவல் நாவல் பற்றிக் குறிப்பிடுகையில்இ ஈழகேசரியில் இதே காலப் பிரிவில் வெளியான "மாலை வேளையில்" என்னும் மொழிபெயர்ப்புநாவல் நினைவுக்கு வருகிறது. ஐவான் துர்கனீவ் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பான இதை எழுதியவர், இலங்கையின் சிறு கதை முதல்வர் என்று புகழப்படும் சி. வைத்திலிங்கம் அவர்கள். ஈழகேசரியில் "தேவி திலகவதி" என்னும் ஒரு நாவலும் இதே காலப் பிரிவில் தொடர் கதையாகப் பிரசுரமானதாகத் தெரிகிறது.

தீண்டாமைக்குச் சவுக்கடியும் சாவுமணியும்

1935-ம் ஆண்டில் நல்லூரைச் சேர்ந்த வே.க.நவரத்தினர் எழுதிய "செல்வரத்தினர்" என்னும் நாவல் வெளியானதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் " காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி" என்னும் நாவல் பிரசுரமானது. இந்த நாவலின் ஆசிரியர் சி.வே. தாமோதரம்பிள்ளை. பல நூல்களை எழுதியும் பதித்தும் தன் பெயர் பரப்பிய இவரின் "கதிர்காமப்புராணம்" வெகு ஜனப்புழக்கத்துக்கு வந்த நூல்களில் ஒன்று.

எம்.ஏ. செல்வநாயகம் என்பவர் 1938-ம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஒரு நாவலுடன் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பிக்கிறது. அதுகாலவரை தனிமனித சீர்திருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்ட நல்லொழுக்க உபதேசக் கருவிகளாகப் பயன்பட்டு வந்த நாவல்களின் போக்கை, சமூகத்தின் பொதுப்படையான சீர்கேடுகளைக் கிளறிப் பார்க்கும் வாருகோல்களாகத் திருப்பி விட வழி காட்டியாக அமைந்தது செல்வ நாயகத்தின் "செல்வி சரோசா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி" என்னும் நாவலாகும். தன் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்கு இலக்கிய உருவங்களைப் பிரசாரக் கருவிகளாகப் பயன்படுத்தினார் செல்வ நாயகம். நாவல் எழுதியதுடன், பல சீர்திருத்த நாடகங்களையும் படைத்தார். இன்றும் உயிர்வாழும் செல்வநாயகத்தின் மிகப்பிந்திய நாடகம் "கமல குண்டலம்" என்பது.

1 comment:

  1. Online gambling is legal in the USA: A new study finds the
    by M Grazan · 2018 — 라이브바카라게임 Online gambling is now legal in the USA: A new study finds the state 업소 추천 of Nevada has 10벳 the best 바퀴벌레 포커 online gambling options. 메리트 Oct 29, 2018 · Uploaded by BNSEAS

    ReplyDelete

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!